யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உக்ரேனில் வைத்து அடித்துக்கொல்லப்பட்டுள்ளதாக குறித்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்வதற்காக உக்ரேனில் தங்கிநின்றபோதே கடந்த 28 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த இரத்னசிங்கம் வினோதரன் வயது 32 என்ற இளைஞரே அந்நாட்டு முகவர் ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இளைஞரின் தந்தையான இரத்னசிங்கம் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்வதற்காக கடந்த வருடம் இலங்கை முகவர் ஒருவர் மூலம் இந்த இளைஞன் உக்ரெய்னுக்கு கூட்டிச்செல்லப்பட்டுள்ளார். எனினும் ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பாது மிக நீண்ட நாட்கள் முகவர் இழுத்தடித்து வந்த நிலையில் தன்னை விரைவாக ஐரோப்பாவிற்கு அனுப்புமாறு குறித்த இளைஞர் முகவரை வற்புறுத்தியுள்ளார். இந்த நிலையில் குறித்த இளைஞரை தாக்கியதுடன் மாடியிலிருந்து தள்ளி விழுத்து கொலை செய்துள்ளதாக தந்தை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த இளைஞனின் தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.