மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரரின் செயற்பாடுகளுக்கு அரசாங்க அதிபரின் ஒத்துழைப்பே காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கெவிலியாமடு பகுதியில் 2014 ஆம் ஆண்டு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரரினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொண்ட பகுதியில் தற்போது சிங்கள பௌத்த அமைப்பு ஒன்றின் ஊடாக 50 வீடுகளை கட்டுவதற்கு அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு மங்களராமய விகாராதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய சிங்கள குடியேற்றத்திற்கு அனுமதி வழங்க மறுத்து அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்ட பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணம் மீது தாக்குதல் நடத்த விகாராதிபதி முயற்சித்ததோடு பிரதேச செயலக பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தியிருந்தார்.
இது குறித்து பிரதேச செயலாளர் சட்ட நடவடிக்கை எடுத்து சட்ட விரோத குடியேற்றவாசிகளை தடுக்க முற்பட்ட போது அதனை அரசாங்க அதிபர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணத்தை ஆளுநரின் உதவியுடன் இடம் மாற்றிய அரசாங்க அதிபர் புதிய பிரதேச செயலாளராக சத்தியானந்தியை நியமித்து ஏற்கனவே பிரதேச செயலாளரினால் தடுத்து நிறுத்தப்பட்ட பிரதேசத்தில் எந்த வித ஆவணங்களும் இல்லாத சட்ட விரோத குடியேற்றவாசிகளுக்கு 50 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பொலிஸ் உத்தியோகத்தர்கள், மின்சாரசபை உத்தியோகத்தர், அரசாங்க அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரையும் தாக்கியும் அச்சுறுத்தியும் வந்துள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் நடவடிக்கைகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபரே பொறுப்புக் கூற வேண்டும். ஆனால் தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராகவே அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பல தொண்டு நிறுவனங்களுக்கு தடை விதித்த அரசாங்க அதிபர் மட்டக்களப்பில் பதிவு செய்யப்படாத ஒரு பௌத்த நிறுவனம் ஒன்றிற்கு பிரதேச செயலாளரினால் அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசத்தில் எந்தவித ஆவணங்களும் இல்லாத வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு எவ்வாறு அனுமதி வழங்கினார் என்ற கேள்வியை அரசாங்க அதிகாரிகள் தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது