இலங்கை அரசியலில் மூக்கை நுழைக்கும் சீனா!

கடந்த மாத இறுதியில் சீனாவுக்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக குளியாப்பிட்டியில் வியத்மக அமைப்பின் கருத்தரங்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உரையாற்றியிருந்தார்.
வியத்மக என்பது கோத்தபாய ராஜபக்ச தன்னை அரசியலில் நிலைப்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கியுள்ள ஓர் அமைப்பு.
அந்தக் கூட்டத்தில் அவர் தற்போதைய அரசாங்கமே தேசிய சொத்துக்களை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் விற்பனை செய்து, இலங்கையில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையில் அதிகாரப் போட்டியை உருவாக்கி விட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை பொய்யான காரணங்களை முன்வைத்து சீனாவுக்கு விற்ற அரசாங்கம் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இலங்கையில் இந்திய – சீன அதிகாரப் போட்டி இன்று நேற்று உருவானதல்ல. மகிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிக் காலத்திலேயே அது ஆரம்பித்து விட்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கட்டத் தொடங்கிய போதே அதற்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டது.
அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பதற்கு முதலில் இந்தியாவைத் தான் அழைத்தேன். அவர்கள் மறுத்ததால் தான் சீனாவிடம் கொடுத்தேன் என்று அண்மையில் கூட மகிந்த ராஜபக்ச நியாயப்படுத்தியிருந்தார்.
அப்படியிருக்கையில் ஏதோ தற்போதைய அரசாங்கம் தான் இலங்கையில் இந்திய – சீன அதிகாரப் போட்டியை உருவாக்கி விட்டது போல கூறியிருக்கிறார் கோத்தபாய ராஜபக்ச. அவர் இந்தக் கருத்தை வெளியிட்ட அடுத்தடுத்த நாளே சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
முதலில் அவர் சீனாவின் யுனான் பல்கலைக்கழகத்தில் அரச நிர்வாக மற்றும் பொருளாதார கற்கை நெறி ஒன்றைத் தொடரப் போகிறார் என்றே செய்திகள் வெளியாகின.
ஆனாலும் அவர் சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றிருக்கிறார் என்றும் மூன்று வாரங்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்வார் என்றும் பின்னர் தகவல்கள் வெளியாகின.
2015ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவி இழந்த பின்னர் சீனாவின் அழைப்பின் பேரில் கோத்தபாய ராஜபக்ச அங்கு பயணமாகியிருப்பது இது இரண்டாவது தடவை. அதுபோலவே மகிந்த ராஜபக்சவும் இரண்டு தடவைகள் சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்தப் பயணங்களை ஒழுங்கு செய்திருந்தது சீன அரசாங்கம் தான். சீனா எதற்காக மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச போன்றவர்களை தமது நாட்டுக்கு அடிக்கடி அழைக்கிறது என்பது முக்கியமான கேள்வி.
இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளில் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ள சூழலில் கோத்தபாய ராஜபக்சவின் இந்தப் பயணமும் சரி, இதற்கு முந்திய பயணங்களும் சரி கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை.
உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு அரசாங்கத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பில் அரசியல் குழப்பங்கள் மேலோங்கியிருந்த நிலையில் தான் கோத்தபாய ராஜபக்சவும் சீனாவுக்குச் சென்றிருந்தார்.
நடைமுறை அரசியல் குழப்பங்களுடன் கோத்தபாய ராஜபக்சவின் சீனப் பயணத்தைத் தொடர்புபடுத்துவது எந்தளவுக்குச் சரியானது என்ற கேள்விகள் இருந்தாலும் நீண்டகால அரசியலில் இது முக்கியத்துவமானது.
ஏற்கனவே சீனா மூன்றாண்டு அரசியல் கற்கை நெறி ஒன்றை கற்பதற்கு கோத்தபாய ராஜபக்சவுக்கு வாய்ப்பு வழங்க முன்வந்திருந்தது. இந்த தகவலை கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரபரப்பாக வெளியானது.
ஆனால் உடனடியாக அவர் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. இப்போது அவர் அந்த யுனான் பல்கலைக்கழகத்தில் அரசியல் நிர்வாக, பொருளாதார கற்கை நெறி ஒன்றைத் தொடரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனா எதற்காக கோத்தபாய ராஜபக்சவுடன் தொடர்பை வைத்திருக்கிறது. அவருக்கு அரசியல் கற்பிக்க சீனா ஏன் அக்கறை காட்டுகிறது?
சீனா எப்போதுமே கூறி வருகின்ற ஒரு விடயம் எந்த நாட்டின் உள்நாட்டு அரசியலிலும் தாம் தலையிடுவதில்லை என்பது தான். இலங்கையின் உள்விவகாரங்களுக்குள்ளேயும் தாம் தலையிடவில்லை என்றே சீனா கூறி வந்திருக்கிறது.
அது சரியானால் சீனா ஏன் முன்னைய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களுக்காக இப்போது தனது கதவுகளைத் திறந்து கொள்கிறது? சீனா இப்போது பிராந்திய அரசியலில் கவனம் செலுத்துகிறது.
உள்நாட்டு அரசியலில் தனக்குச் சார்பான அணிகளையும் ஆட்சிகளையும் உருவாக்குகிறது. மாலைதீவில், நேபாளத்தில் சீனா தனக்குச் சாதகமான அரசியல் அணிகளையும் குழுக்களையும் உருவாக்கியிருக்கிறது.
இலங்கையிலும் அத்தகைய அணி ஒன்றை சீனா உருவாக்க முனைகிறது என்று சந்தேகிக்கத்தக்க வலுவான காரணிகள் உள்ளன.
இலங்கையில் தனக்குச் சாதகமான அணியொன்றை உருவாக்க சீனா முனைகிறது என்று கூறும் பொழுது அது தனியே சிங்கள அரசியலை மாத்திரம் மையப்படுத்தியதாக இருக்கிறது என்று கணக்குப் போடக்கூடாது.
சிறுபான்மை தமிழர்கள் மத்தியிலும் சீனா செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. தமிழ் அரசியலிலும் சீன சார்பு அணிகள் உருவாவதற்கான அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன.
அடுத்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது தம்முடன் முழுமையாக ஒத்துழைக்கக் கூடிய ஒருவரை வெற்றி பெற வைப்பதற்கு சீனா முயற்சிப்பதாகத் தெரிகிறது.
இலங்கையில் சீனா அதிகம் நம்புகின்ற அரசியல் தலைவரான மகிந்த ராஜபக்சவினால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே அவரது சகோதரரான கோத்தபாய ராஜபக்சவுக்கு சீனா முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்திருக்கிறது.
கோத்தபகாய ராஜபக்சவிடம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கடந்த காலங்களில் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் அதனை முழுமையாக நிராகரிக்கவில்லை.
இப்போது அவர் தன்னை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயார்படுத்த தொடங்கியிருக்கிறார் போலத் தெரிகிறது.
கோத்தபாய ராஜபக்சவைப் பொறுத்தவரையில் சிங்கள கடும்போக்காளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவர். அதனை மாத்திரம் நம்பி அவரால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்பதே சிக்கல்.
அவ்வாறான வெற்றியைப் பெற வேண்டுமானால் மிகத் தீவிரமான இனவாதப் பிரசாரங்களை அவர் முன்னெடுக்க வேண்டும். அது தற்போதைய நிலையில் சிக்கலானது மாத்திரமன்றி சர்வதேச அளவில் அவர் தனிமைப்படுத்தப்படும் நிலையையும் ஏற்படுத்தும்.
எனவே சிறுபான்மையினக் கட்சிகளையும் கொஞ்சம் அரவணைத்துச் செல்ல வேண்டிய தேவை கோத்தபாய ராஜபக்சவுக்கு உள்ளது. அதற்காக அவர் இப்போதே தயார்படுத்தல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
இத்தகையதொரு கட்டத்தில் தான் கோத்தபாய ராஜபக்ச சீனாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் அங்கு மூன்று வாரங்கள் என்ன செய்யப் போகிறார்? அரசியல் கற்கப் போகிறாரா பேச்சுக்களை நடத்தப் போகிறாரா என்று தெளிவான நிலை ஏதும் வெளியாகவில்லை.
ஆனால் அவருக்கும் சீன அதிகாரிகளுக்கும் இடையில் பல்வேறு கட்டங்களில் பேச்சுக்கள் நடந்திருக்கின்றன. இன்னும் நடக்கவும் இருக்கின்றன.
அதுபோலவே சீனாவுக்கு அழைக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகல் சிரால் லக்திலக தலைமையிலான குழுவுடன் கோத்தபாய ராஜபக்ச பேச்சு நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு தரப்புகளையும் சீனா தனித்தனியாக அழைத்திருப்பதும் அங்கு வைத்து பேச ஒழுங்குகளைச் செய்திருப்பதும் கவனிக்கத்தக்க விடயம்.
அரசியல் தரகு வேலைகளிலும் சீனா இப்போது ஈடுபட ஆரம்பித்துள்ளது என்பதற்கான அடையாளமாக இதனைக் கொள்ளலாம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மகிந்த ராஜபக்ச அணியையும் ஒன்றுபடுத்தி விட்டால் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவுக்கு சாதகமான சூழல் உருவாகி விடும்.
அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் ஒன்றிணைக்கப்பட்டு விட்டால் அதனையும் கடும்போக்காளர்களின் வாக்குகளையும் ஒன்றிணைத்து கோத்தபாய ராஜபக்சவினால் சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமலேயே வெற்றி பெறக்கூடிய சூழல் உருவாகும்.
மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைந்திருந்தால் அங்கு கடும்போக்கு சிங்களவர்களினால் மாத்திரம் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் உள்ளது.
எனவே தான் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு தேவையான தரகு வேலைகளில் சீனா ஈடுபடத் தொடங்கியுள்ளதா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
சீனாவைப் பொறுத்தவரையில் இப்போது இலங்கையில் தனது இருப்பையும் செல்வாக்கையும் நிலைநிறுத்திக் கொள்வதற்காக எந்தக் கட்டத்துக்குச் செல்வதற்கும் தயாராக இருக்கிறது. அது இந்த விடயத்தில் உறுதியாகியுள்ளது.
இத்தகைய கட்“டத்தில் 2015ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒன்றிணைந்த மேற்குலக - இந்திய சக்திகள் என்ன செய்யப் போகின்றன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஏனென்றால் மேற்குலக – இந்திய நலன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அவையும் ஒரு நகர்வை முன்னெடுக்கவே செய்யும்.
ஆக இப்போது இலங்கையின் உள்ளக அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் சக்திகளாக சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகளே மாறி வருகின்றன
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila