இராணுவப் புலனாய்வுத்துறையை கட்டுப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் இன்னமும் திணறிக் கொண்டுதான் இருக்கின்றது.
இன்னொரு பக்கத்தில் இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் முன்னைய ஆட்சிக்கு விசுவாசமானவர்களுடனும் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.
இது போதாதென்று ஓய்வு பெற்ற படையினரைக் கையாளும் விடயத்திலும் அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது.
இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் சுரேஸ் சாலி அண்மையில் அந்தப் பதவியிலிருந்து அகற்றப்பட்டமைக்கு முக்கியமான காரணம் முன்னைய ஆட்சியாளருக்குச் சாதகமாக அவர் செயற்படுகிறாரா என்ற சந்தேகமும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழையாமையும் தான்.
இராணுவத்தினருடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்ததும் அது சார்ந்த உயர்மட்ட உத்தரவுகளை செயற்படுத்த தவறியதும் பிரிகேடியர் சுரேஸ் சாலியின் இடமாற்றத்துக்கு காரணமாகியது.
வலுவானதொரு பலனாய்வுக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் இலங்கை இராணுவம் அந்தப் புலனாய்வுப் பிரிவைக் கட்டுப்படுத்த முடியாத நிலையை அடையுமானால் அது ஆபத்தானதாக அமையும் என்று முன்னரே பலராலும் எச்சரிக்கப்பட்டு வந்தது.
பாகிஸ்தானில் புலனாய்வுத்துறை ஒருபோதும் அந்த நாட்டின் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதில்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததுமில்லை.
இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறைகளின் சொல்லைக் கேட்டு நடக்க வேண்டிய நிலையில் தான் பாகிஸ்தான் அரசாங்கம் இப்போதும் இருக்கிறது.
அது போன்றதொரு நிலை இலங்கையிலும் ஏற்படும் ஆபத்துக் குறித்து எச்சரிக்கப்பட்ட போதிலும் அதிகாரத்தில் இருந்த முன்னைய அரசியல் தலைமை இராணுவப் புலனாய்வு பிரிவுகளை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்தியது.
அதனால் முன்னைய அரசுக்கு விசுவாசமான நிலையும், தன்னிச்சையாகச் செயற்படும் போக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குள் மேலோங்கியிருந்தது.
இப்போது கூட இராணுவப் புலனாய்வுப் பிரிவு கையாளும் எல்லா விடயங்களும் கொள்கைக்கு இணங்க செயற்படுத்தப்படுகின்றன என்று கூற முடியாது.
தற்போதைய அரசாங்கம் பாலுக்கும் காவலாக பூனைக்கும் தோழனாக இருக்க விரும்பியதால் இராணுவத்துக்குள் கடிவாளத்தை இறுக்க தயக்கம் காட்டியே வந்திருக்கிறது.
இராணுவத்தைப் பகைத்துக் கொள்ளாமல் இருந்தால் தான் நிலையான ஆட்சியை நடத்த முடியுமென்று கருதிய இப்போதைய அரசாங்கமும் இராணுவப் பலனாய்வுத்துறை விடயத்தில் மெத்தனப் போக்குடன் தான் இருந்தது.
இதன் விளைவாகவே அரசாங்கத்தை தவறாக வழிநடத்தும் அளவுக்கு புலனாய்வு அறிக்கைகள் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
இதனால் தான் இராணுவப் புலனாய்வு பணியகத்துக்கான பணிப்பாளராக இராணுவப் புலனாய்வுப் பிரிவை சாராத ஒருவரை நியமிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் மாத்திரமன்றி இராணுவத்துக்குள் இருக்கும் முன்னைய அரசாங்கத்தின் விசுவாசிகளை கட்டுப்படுத்தி வைத்திருப்பதிலும் அரசாங்கம் சவால்களைச் சந்தித்தே வருகிறது.
இந்தநிலையில் முன்னாள் இராணுவத்தினர் அரசாங்கத்துக்கு எதிராக தூண்டி விடப்பட்ட நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது.
12 ஆண்டுகள் இராணுவ சேவையில் இருந்தவர்களுக்கே ஓய்வூதியம் பெறும் தகைமையுள்ளது. போரில் உடலுறுப்புகளை இழந்ததால் இராணுவ சேவையிலிருந்து விலகிய படையினர் தமக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று நடத்திய போராட்டமும் அதனையடுத்து ஏற்பட்ட சம்பவங்களும் அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உடலுறுப்புகளை இழந்த படையினர் சேவையில் இருந்து விலகினாலும் இராணுவத்தில் பணியாற்றும் போது பெற்ற ஊதியம், சலுகைகளைப் பெற்று வருகின்றனர். ஆனாலும் அவர்கள் ஓய்வூதியம் கேட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட நிலையிலும் கூட ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததால் பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசவேண்டிய நிலை ஏற்பட்டது.
போராட்டம் நடத்திய படையினரை இராவண பலயவைச் சேர்ந்த பிக்குகள் வழிநடத்தியிருக்கின்றனர். மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினரே அவர்களைத் தூண்டி விட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக உண்ணாவிரதம் இருந்த படையினரை மகிந்த ராஜபக்ச சென்று பார்வையிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி செயலகத்துக்குள் உடலுறுப்புகளை இழந்த படையினர் அத்துமீறி நுழைவதற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரே காரணம் என்றும் அந்த அதிகாரி கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமாக இருந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்தச் சம்பவம் நடந்த போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லியில் நடந்த மாநாடு ஒன்றுக்குச் சென்றிருந்தார். ஜனாதிபதி நாட்டில் இல்லாத சமயத்தில் ஜனாதிபதி செயலகத்துக்குள் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைய முயன்றமைக்கு காரணம் இல்லை.
அவ்வாறாயின் முன்னாள் படையினரைக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இரகசியத் திட்டங்கள் இருந்ததா? என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைய முயன்ற முன்னாள் படையினரை பொலிஸார் தடுக்க முயன்ற போதும் அது முடியாத நிலையில் தான் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன. ஆனாலும் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஜனாதிபதி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் போன்றவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
இதற்குக் காரணம் படையினரைக் கூட்டு எதிரணி தனது கைக்குள் கொண்டு வந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை தான்.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஓய்வு பெற்ற படையினருக்கு வேலை வாய்ப்பை வழங்குதல், சலுகைகளை வழங்குதல் என்று பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.
அதற்குக் காரணம் மகிந்த ராஜபக்ச தரப்பு இவர்களைத் தமது அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு விடலாம் என்ற அச்சமேயாகும்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் முன்னாள் படையினர் தவறாக வழிநடத்தப்படும் நிலை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னால் சதித்திட்டம் ஒன்று இருப்பதாகவும் அரசியல் சக்திகள் இருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் படையினரை பலிக்கடாக்களாக்கி அரசியல் நலனையும் அதிகாரத்தையும் கைப்பற்றும் முயற்சிகளில் கூட்டு எதிரணி ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் வலுவாக சந்தேகம் கொண்டுள்ளது.
சேவையிலிருந்து விலகிய படையினரின் எண்ணிக்கை என்பது அதிகமாகவே உள்ளதால் அவர்களைக் கூட்டு எதிரணி தனது பக்கம் ஈர்த்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைய முயன்ற முன்னாள் படையினரைத் தடுத்திருக்கக் கூடாது என்றும் தான் நாட்டில் இருந்திருந்தால் அவர்களை நுழைய அனுமதித்திருப்பேன் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.
அவர்கள் எதைச் செய்யப் போகிறார்கள்? ஜனாதிபதி செயலகத்தை அடித்து நொருக்குவார்கள். அவ்வளவு தானே என்று மிக அலட்சியமாகவே ஜனாதிபதி கூறியிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் இது அதிகாரத்தைப் பலவந்தமாக கைப்பற்றுவதற்கான ஒரு ஒத்திகையாக இருக்கலாமோ என்ற சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அண்மையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் பேரணி நடத்த முயன்ற போது அதற்கு அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
அப்போது பேரணியாக வந்த மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் லிப்டன் சுற்று வட்டத்தில் மேடை போட்டு போக்குவரத்துக்களைத் தடுத்து கூட்டத்தை நடத்தினர். அப்போது மகிந்த ராஜபக்ச ஒரு விடயத்தைக் கூறியிருந்தார்.
அடுத்தமுறை கொழும்புக்குள் பேரணியாக நுழைந்துவிட்டு வெறும் கையுடன் திரும்ப மாட்டோம். கொழும்பை செயலிழக்கச் செய்வோம் என்று அவர் எச்சரித்திருந்தார். அதனை பலவந்தமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு எச்சரிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
முன்னாள் படையினர் ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த விடயத்தையும், மகிந்த ராஜபக்சவின் முன்னைய எச்சரிக்கையையும் ஒப்பீடு செய்து பார்க்கும் போது இந்தச் சம்பவத்தை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது.
சேவையில் உள்ளவர்களானாலும் சரி, சேவையிலிருந்து விலகியவர்களானாலும் சரி, பாதுகாப்புத் தரப்பை கையாளுவதில் அரசாங்கம் இதுவரையில் வெற்றியைப் பெற்று விடவில்லை என்பதையே முன்னாள் படையினரின் போராட்டம் எடுத்துக் கூறியிருக்கிறது.
இந்தச் சம்பவங்களை அவதானிக்கும் போது தற்போதைய அரசாங்கம் பாதுகாப்புத் தரப்பில் இருந்து இன்னும் கடுமையான சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் போலவே தெரிகிறது.