நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சுமணரத்தின தேரரை உசுப்பிவிட்டவர் மகிந்த! (அமைச்சர் மனோ கணேசன் குற்றச்சாட்டு)


மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சும ணரத்தின தேரர் எப்போதுமே ஒரு குழப்பக்காரர் தான். அவர் புதிதாக குழப்பம் செய்யவில்லை. அவரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வே சந்தித்து தனது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உசுப்பி விட்டுள்ளார் என அமைச்சர் மனோ கணேசன் தகவல் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் மட்டக்களப்பு மங்களாராமய விகாரைக்கு சென்று விகாராதிபதி சுமணரத்தின தேரரை சந்தித்து கலந்துரையாடி வந்தார். இதன்பிறகே மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது.

ஆகவே இந்த இரண்டுக்கும் தொடர்பு உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்ததாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.     
இது தொடர்பில் தனது முகநூல் பதிவொன்றில் நேற்றையதினம் குறிப்பிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன் இதுதொடர்பில் மேலும் பதிவு செய்துள்ளதாவது,

கடந்த 10ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட அன்று பிற்பகல் நாடாளுமன்ற உணவு விடுதியில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேநீர் அருந்தியவாறு தனது ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடி கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற என்னிடமும் அவர் உரையாடினார். என்னுடன் அமைச்சர் பழனி திகாம்பரமும் இருந்தார்.

சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் நீங்கள் உரையாடுவது நன்று. வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்கள் சிறுபான்மையாக வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றியும் நீங்கள் தமிழ் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இப்போது சிங்கள மக்களை விரட்டியடிக்கும் ஒரு திட்டம் நடைமுறையாகிறது. அது பற்றி நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மகிந்த என்னிடம் கூறினார்.

இதற்கு வட- கிழக்கில் சிங்களவர்கள் சிறுபான்மையாக வாழ்வது எனக்கு தெரியும். அவர்களைப் பற்றிய அக்கறை எனக்கு நிச்சயம் இருக்கிறது. அண்மையில் இலங்கை வந்த சிறுபான்மையினர் தொடர்பாக ஐ.நா அறிக்கையாளர் ரீடா ஐசக்கிடம் தென்னிலங்கை சிறுபான்மையினர் போன்று, வட-கிழக்கில் வாழும் சிங்கள சிறுபான்மையினரையும் நீங்கள் சந்தித்தீர்களா என நான் கேட்டேன் என நான் மகிந்தவுக்கு பதில் சொன்னேன்.

உண்மையில் இந்நாட்டின் எந்த இடத்திலும் சிங்களவர்கள் மட்டுமே பெரும்பான்மை. தமிழ் பேசுபவர்கள் எங்கேயும் சிறுபான்மை தான் என்ற பாரம்பரிய பேரினவாத நிலைப்பாட்டை தளர்த்தி, வட-கிழக்கில் வாழும் சிங்களவர்களை சிறுபான்மை என மகிந்த ராஜபக்ஷ அடையாளப்படுத்தியுள்ளார். இதை இதற்கு முன் எங்கேயும் அவர் சொன்னதாக நான் அறியவில்லை. இதை அவர் எங்கேயோ சொல்லி அது திரிபுபடுத்தப்பட்டு, என்னிடம் வந்து சேரவும் இல்லை. இதை அவர் நேரடியாக என்னிடம் கூறினார்.

எனவே, இது ஒரு முன்னேற்றக்கரமான நிலைப்பாடு என நான் நம்புகிறேன். இது ஒரு புறமிருக்க, மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமணரத்தின தேரர் எப்போதுமே ஒரு குழப்பக்காரர்தான். அவர் புதிதாக குழப்பம் செய்யவில்லை. அவரை மகிந்த சந்தித்து, தனது அரசியல் தேவைகளை நிறைவேற் றிக்கொள்ள உசுப்பி விட்டுள்ளார். இதை தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உறுதிப்படுத்தியுள்ளார் என அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila