அம்பலத்திற்கு வந்த “ஆவா“ குழு -நேரடி றிப்போட்


கடந்த இரண்டு வாரங்களாக யாழ்ப்பாணத்தையும்
கொழும்பையும் ஆட்டிப்படைத்த “ஆவா குழு“ தொடர்பான முக்கிய விடயங்கள் தமிழ்கிங்டொத்தின் விசேட செய்திப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் உண்மையிலேயே ஆவா குழு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது அதன் உறுப்பினர்கள் யார் யார் செயற்படுகின்றார்கள் என்ற விடயங்களை விசாரித்தபோது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவாகுழுவோ அல்லது இன்னொரு பிரிவாக செயற்படுவதாக சொல்லப்படும் சன்னாகுழு எனப்படுவதன் தோற்றம் மற்றும் அதனை தோற்றுவித்தன் நோக்கம் என்பன முன்னாள் யாழ்ப்பாண கட்டளை தளபதியாகவிருந்த மேஜர் ஜென்ரல் கத்துருசிங்கவுக்கும் அவருக்கு கீழே செயற்பட்ட புலனாய்வு அதிகாரிக்குமே தெரிந்த விடயங்கள்.

எவ்வாறு சிக்கினர் அப்பாவி இளைஞர்கள்

இந்த ஆவா குழு எனப்படுவது உண்மையிலேயே பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தமிழனுக்காக குரல்கொடுக்கும் ஒரு அமைப்பாக சித்தரிப்பதாகவே மறைமுகமாக ஆரம்பமாகியது சமூக வலைத்தளங்களில் பதிவுகளையிட்டு பிரபலமாகியதிலிருந்து அதனை அவதானித்த அப்பாவி இளைஞர்களான குறிப்பாக 15 முதல் 25 வரையான இளைஞர்களே அவர்களின்பால் ஈர்க்கப்பட்டதாக அப்பகுதி இளைஞர்களிடமிருந்து அறியக்கிடைக்கிறது. இந்த விலைப்பின்னல் பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்.

இதில் செயற்பட்டதாக சொல்லப்படும் இளைஞர்களின் சமூக வலைத்தள பதிவுகளை நோக்குபவர்கள் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் அவர்களுடைய வெளிப்படையான பதிவுகளும் அதனை 400இற்கு அதிகமான இளைஞர்கள் வரவேற்று விருப்பங்களையும் தமது ஊக்குவிப்பு கருத்துக்களையும் இட்டிருக்கிறார்கள்.

சாதாரணமாக ஒரு கூட்டத்திற்கோ அல்லது குறிப்பாக நடைபெற்றுமுடிவுற்ற எழுகதமிழ் பேரணிகூட அனைத்துகட்சிகளின் அழைப்பு மற்றும் பொது அமைப்புக்கள்,பல்கலைக்கழக சமூகம் என்பவற்றின் ஆதரவு இருந்த காரணத்தினாலேயே பெருமளவான மக்கள் அச்சமின்றி அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்றார்கள்.


ஆனால் எந்த பின்னணியும் செல்வாக்குமில்லாத குறித்த நான்கைந்து இளைஞர்களின் பதிவுகள் குறிப்பாக நடைபெற்று முடிவுற்ற சரஸ்வதி பூசைநிகழ்வைக்கூட ஒருவர் பெரிய வாழை இலைஒன்றில் அதில் பத்திற்கு மேற்பட்ட வாள்கள்,கத்தி,கோடரி போன்ற கூரிய ஆயுதங்களை வைத்து அத்துடன் பிரசாதம் வைத்து கொண்டாடியிருக்கின்றார் அதனையும் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பார்வையிட்டும் ஊக்குவித்தும் இருக்கிறார்கள். சாதாரண ஒரு பொதுமகனால் இவ்வாறான ஒரு செயலை செய்யவோ அல்லது அதனை செய்து சமூக வலைத்தளத்தில் தன்னை இவர்தான் என அடையாளப்படுத்தி பிரசுரிக்கமுடிந்திருக்கிறது என்றால் நிச்சயமாக இதன் பின்னணி முக்கியமாக பாதுகாப்பு படையினரின் புலனாய்வு பிரிவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் இவர்களின் கருத்துக்களையோ பதிவுகளையோ பார்த்தும் அண்மைக்காலங்களில் நடைபெற்றுவரும் பௌத்த மயமாக்கல் மற்றும் நில ஆக்கிரமிப்பு, இராணுவ அச்சுறுத்தல்கள் என விரக்தியுற்ற சில இளைஞர்கள் இவர்களின் உண்மையான பின்னணி தெரியாமல் இவர்கள்தான் தற்போது எமக்கு தேவையானவர்கள் இவர்களின் பாதை தான் இவற்றுக்கு தீர்வுதரும் என்று எண்ணி அவர்களின் பின்னால் சென்றிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.

இதில் இன்னொரு முக்கியமான விடயம் கடந்த  மகிந்த ஆட்சி காலத்தில் ஆவாகுழு தலைவர் கைது எனச்சொல்லப்பட்டு கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இளைஞர் அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடியதாகவும் அதற்கு 400 வரையான இளைஞர்கள் கலந்துகொண்டதாகவும் அப்பகுதி இளைஞர்களிடமிருந்து அறியக்கிடைக்கின்றது.

கீழ்குறித்த படம்கூட அந்த இளைஞர் வட்டத்தில் ஒருவரின் பதிவில் காணப்படுகிறது.




அண்மையில் கைதுசெய்யப்பட்ட அலெக்ஸ் அரவிந்தன் என்ற நபர்கூட முன்னைய காலத்தில் இளைஞர்குழுக்களுடன் செயற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். இவர் ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு பின்னர் த.தே.மக்கள் முன்னணி சட்டத்தரணி ஒருவரின் உதவி நாடப்பட்டு அப்பாவி இளைஞர் என்ற காரணத்திற்காக அவரும் உதவியிருக்கின்றார். அதன்பின்னர் அந்த இளைஞனும் கடந்த தேர்தலுக்கு பின்னர் முன்னணியினரின் தேசியம் சார்ந்த செயற்பாடுகளுக்கு தனது நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் இவ்வாறு மிகவும் விசுவாசமாக செயற்பட்டது அவர் நேர்மையாக செயற்படுவதாக நம்பி முன்னணி கட்சியினரும் பணிகளில் ஈடுபடுத்தியிருக்கின்றார்கள்.


அந்த வகையில் அண்மையில் இடம்பெற்ற எழுகதமிழ் நிகழ்வு ஒழுங்கமைப்பிலும் தீவிர விசுவாசியாக செயற்பட்ட அரவிந்தன் பல்வேறுபட்ட சமூக பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு இளைஞர் குழுக்களுடன் தொடர்பு இல்லை என்றும் அவர் 2015 தேர்தலுக்கு பின்னர் மிகச்கடுமையாக தேசியத்திற்காக பாடுபட்டதாக த.தே.முன்னணி ஊடக சந்திப்பில் அதன் தலைவர் தெரிவித்திருக்கின்றார்.

இவற்றை வைத்து பார்க்கும்போது இலங்கை புலனாய்வுத்துறையின் அனுசரணையோடு இயங்கிய ஆவா மற்றும் சின்னா தலமையிலான குழுவால் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும் எழுகதமிழ் நிகழ்வு விடயங்களையும் மற்றும் இவர்களின் செயற்பாடுகளுக்கு முன்னாள் புலிகள் யாராவது வந்து ஒத்துழைப்பு வழங்குவார்களா மீள ஒன்றுணைய முற்படுகின்றார்களா என்பதையும் அவதானிக்கும் முகமாக இவர் உள்நுழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இது அவரோடு செயற்பட்ட இளைஞர்களுக்கு கூட தெரிந்திருக்கவாய்ப்பில்லை என்றும் தெரியவருகின்றது.

இது த.தே.மக்கள் முன்னணிக்குள் மட்டுமல்ல த.தே.கூட்டமைப்பில் தேசியவாதிகளாக இனங்காணப்பட்டுள்ளவர்களுடனும் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகிய அமைப்புக்களிடையேயும் இந்த ஆவாகுழு உறுப்பினர்கள் ஊடுருவியிருக்கலாம் என்ற அச்சம் ஊடகப்பரப்பில் பேசப்பட்டுவருவது கவனிக்கவேண்டிய ஒன்றாகும்.


இந்த ஆவாகுழு எனச்சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டவர்களில் சிலருக்கு உண்மையிலேயே அந்த குழுவின் செயற்பாடு எப்படிப்பட்டது அது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது போன்ற விபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது அவர்களது பதிவுகளை ஆழமாக பார்க்கும்போது புரிகின்றது.


 இந்த கைது எப்படி இடம்பெற்றது?

நாம் முன்னர் தெரிவித்ததுபோல அரச புலனாய்வால் உருவாக்கப்பட்ட அமைப்பை ஏன் அரசே கைதுசெய்ய வேண்டும் என்ற சாதாரண கேள்வி எழலாம் ஆனால் இதனை தோற்றுவித்தது மகிந்த ஆட்சிகாலத்திலுள்ள நிர்வாக கட்டமைப்பு. வடக்கில் வன்முறைகள் தலைதூக்கியபோது அவர்களை கைதுசெய்ய எந்த நடவடிக்கையையும் அரசு செய்யவில்லை இரு மாணவர்களின் கொலை அதன் பின்னரான இருபொலீசார்மீதான வாள்வெட்டு என்பவற்றின் பின்னர் அரசுக்கு இது பெரும் தலையிடியாக தோன்றவே அதன் உண்மையை வெளிப்படுத்தினார் அமைச்சர் ராஜித சேனாரத்தின இது கோத்தபாஜ காலத்தில் மகிந்த கத்துருசிங்கவால் குறிப்பாக வடக்கில் தேசியத்திற்காக குரல் கொடுப்பவர்களை கண்காணிப்பது.







ராஜித இந்த கருத்தை கூறியும் அதற்கான நடவடிக்கை எதனையும் அரசு செய்யவில்லை காரணம் அரச புலனாய்வு கட்டமைப்பு யாழில் மாறவே இல்லை இதன்காரணமாகவே உடனடியாக மாற்றபட்டிருக்கிறார் புலனாய்வுப் பணிப்பாளர் இதன் அடிப்படையிலேயே மேற்படி கைதுகள் இடம்பெற்று வருகின்றது..

உண்மையாக அரசின் நோக்கம் என்ன?

மகிந்தவின் காலத்தில் முன்னாள் போராளிகளும், தமிழ் இளைஞர்களும் குறிப்பாக தெருச் சண்டியர்களும் புலனாய்வாளர்களின் முகவர்களாக மாற்றப்பட்டனர். முன்னாள் போராளிகள் பலர் மிரட்டியும் முகவர்களாக்கப்பட்டனர். அவ்வாறுதான் புலனாய்வு பிரிவுக்குள் தமிழ் இளைஞர்கள் உள்வாங்கப்பட்டனர் சிலர் விரும்பியும் வேலை செய்தனர்.

மகிந்த ஆட்சியை விட்டு போவார் என யாரும் நம்பியிருக்கவில்லை. ஆனால் எல்லாம் தலைகீழ் ஆனாதும், புதிதாக இணைந்தவர்கள், புலனாய்வு துறைக்குள் புதிதாக உருவாக்கப்பட்ட அணிகள் என அனைத்தையும் என்ன செய்வது என்று பழைய புலனாய்வுக் கட்டமைப்பினருக்கு தெரியவில்லை. புதிய அரசாங்கம் பொறுப்பு ஏற்றவுடன் செய்த முதல் வேலை புலனாய்வுத் துறையை சீர்படுத்தியதுதான். பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு, தேசிய பாதுகாப்பு பிரிவு, நிதி குற்றவியல் பிரிவு என மூன்றாகப் பிரித்து இராணுவ தர அடிப்படையில் உத்தியோகபூர்வமாக அரசால் நியமிக்கப்பட்டவர்களை மட்டும் புலனாய்வுத்துறைக்குள் வைத்துக்கொண்டு மீதிப் பேரை வீட்டுக்கு அனுப்பியதுதான்.

மகிந்தவின் காலம்வரை நாட்டின் முழு அதிகாரமும் இராணுவததின் வசமும், புலனாய்வாளர்களின் வசமும் தான் இருந்தது. இந்த அரசாங்கம் அனைத்தையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விசாரணைகளை மூன்றாகப் பிரிக்கப்பட்ட புலனாய்வு பிரிவுக்குள் உள்ளீர்த்தது. இதில் சில பழைய புலனாய்வாளர்கள் தர அடிப்படையில் புலனாய்வாளர்கள் புலனாய்வு விசாரணை அதிகாரிகள் ஆனார்கள். பொலிஸார் புலனாய்வாளர்கள் ஆனார்கள்.

பொலிஸ்காரனின் பலம் ஓங்கியதும் மீளவும் பழைய புலனாய்வாளர்கள் வேலைகளை ஆரம்பித்தனர். ஆனால் மகிந்த காலத்தில் அனுபவித்த விடயங்கள் எதுவும் இப்போது இல்லை, எனவே அதிகம்பேர் மகிந்த விசுவாசியாகத்தான் தொழிற்பட்டனர். எனவே வடக்கில் எப்படியாவது குழப்பங்களை உண்டு பண்ணி, நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் நாட்டைபிரிக்கும் செயல் என தெற்கிற்கு காட்டி, மகிந்தவை மீளக்கொண்டுவர வேலைபார்த்தார்கள். அதன் ஒரு வேலைத்திட்டம்தான் ஆவா குழுக்கள் இதையெல்லாம் அறிந்துகொண்ட தற்போதைய அரசில் விசுவாசமுள்ள புலனாய்வு அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவே, பழைய தலைவரை மாற்றி, புதிய தலைவரை கொண்டு வந்ததும், அவர் வந்தவுடன் கைதுகள் ஆரம்பமாகியுள்ளது.

கைதுகள் இடம்பெறுவதும் அதில் சம்பந்தப்பட்டவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தில் உள்ளே தள்ளுவதுமாக இல்லாமல் உண்மையாகவே இந்த இளைஞர்கள் என்ன செய்தார்கள் அவர்களின் பின்னணி என்ன அந்த வலையமைப்பின் தலைமைப்பீடம் யாரால் கையாளப்பட்டது என ஆராய்ந்து அந்த முடிவுகள் தமிழ்மக்களுக்கு தெரியப்படுத்தப்படுமா என்பது இலங்கை வரலாற்றில் நடைபெறாத ஒன்றாகவே இருக்கப்போகின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila