முன்னாள் போராளி திடீர் மரணம்! தீவிரமடையும் விச ஊசி விவகாரம்!


எனது கணவருக்கு 5 வருடங்கள் எந்த நோயும் வராது எனக் கூறி தடுப்பில் இருக்கும் போது ஊசிபோட்டார்கள். 5 வருடம் முடிந்தவுடனேயே திடீரென இறந்து விட்டார்.



இறந்து 12 நாட்கள் கடந்தும் எனது கணவரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை என உயிரிழந்தவரின் மனைவி அமலதாஸ் நாகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வின் பின் விடுதலையாகி வவுனியா, புளியங்குளம், பனிக்கநீராவி பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளியான எஸ்.அமலதாஸ் (வயது 46) என்பவர் கடந்த மூன்றாம் திகதி திடீரென மயக்கமுற்று விழுந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். இம் மரணம் தொடர்பிலேயே அவரது மனைவி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது கணவன் அமலதாஸ் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 2009 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து அருணாசலம் முகாமில் தஞ்சமடைந்திருந்த போது இராணுவத்தினரின் அறிவுறுத்தலுக்கு அமைய சரணடைந்திருந்தார்.

அவரை புனர்வாழ்வுக்குட்படுத்தி கடந்த 2011 ஆம் ஆண்டு மருதமடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து விடுதலை செய்தனர். இதன்போது தனக்கு ஊசி ஒன்று போடப்பட்டதாகவும் அதனால் 5 வருடத்திற்கு எந்த நோயும் வராது என இராணுவத்தினர் கூறியதாகவும் அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.

அவருக்கு ஊசி போட்டு 5 வருடம் முடிந்த நிலையில் எனது கணவன் திடீரென மரணமடைந்துள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி கூலி வேலைக்குச் சென்றவர் மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்த போது திடீரென மயங்கி விழுந்தார். நாம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டார் எனக் கூறினார்கள்.

நான் வைத்தியசாலையில் எனது கணவர் கூறிய விடயங்களை தெரிவித்திருந்தேன். அதனால் எனது கணவரின் கண், மூளை, பல், நாக்கு போன்ற உறுப்புக்களை பரிசோதனைக்காக எடுத்துவிட்டே உடலைத் தந்தார்கள்.

இன்றுடன் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், இது தொடர்பான எந்த பதிலும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், எனது கணவரே குடும்பத்தை முழுமையாக நடத்தி வந்தார். தற்போது அவர் இறந்தமையால் பிள்ளைகளுடன் நான் மிகவும் கஷ்டப்படுகின்றேன்.

சமுர்த்தி உதவி கூட எமக்கு கிடைக்கவில்லை. வாழ்வாதாரத்திற்காக பேராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அமலதாஸ் நாகேஸ்வரி இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila