ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவு அமுலாகுமாயின்...


இனவாதம், மதவாதம் பேசுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவு வரவேற்கப்பட வேண்டியது. ஏனெனில் இலங்கையில் மிகப்பெரிய யுத்த அழிவுகள் ஏற்பட்டுள்ள போதிலும் இன்றுவரை பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு எதிரான தமது போக்கை மாற்றுவதாக இல்லை.

எனவே இனவாதத்தை, மதவாதத்தை தூண்டுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவு நடைமுறைக்கு வருமாக இருந்தால், இலங்கை ஒரு அமைதியான நாடாக மிளிரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

அதேவேளை மதவாதம், இனவாதம் பேசுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கமைய பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுப்பாராக இருந்தால்,

அதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் பிரதம விகாராதிபதி சுமணரத்ன தேரரைக் கைது செய்வதாகவே இருக்க முடியும்.

பிரஸ்தாப தேரர் அண்மையில் பொது இடத்தில் வைத்து கொட்டித் தீர்த்த தகாத வார்த்தைகள் தமிழி னத்தை இழிவுபடுத்துவதாக அமைந்திருந்தது.

ஒரு பெளத்த துறவியிடம் இத்துணை இன வன்மம் இருக்குமாயின் அது மிகவும் ஆபத்தானதாகவே அமையும்.

இத்தகைய பெளத்த பிக்குகள் தமிழ் மக்களுக்கு எதிராகச் சிங்கள மக்களைத் திசை திருப்புவதற்கு தமக்கு இருக்கக்கூடிய மதகுரு என்ற அங்கீகாரத்தை நிச்சயம் பயன்படுத்துவர்.

ஆகையால் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த புத்த பிக்குவைக் கைது செய்வது தவிர்க்க முடியாததாக இருக்கும். 

இருந்தும் அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறுவதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் தமிழ் மக்கள் அனை வரும் விடுதலைப் புலிகள் என்று குற்றம்சாட்டும் வகையிலும் துள்ளிக்குதித்த புத்த பிக்குவைக் கைது செய்யாவிட்டால்,

தமிழ் மக்களுக்கு எதிராக இன வன்மம் பேசி தமது இருப்பையும் தமக்கான அந்தஸ்தையும் காப்பாற்றிக் கொள்வதில் பெளத்த தேரர்கள் முண்டியடிப்பர்.

எனவே மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், பொது மக்கள் என யார் இனவாதம், மதவாதம் பேசினாலும் அவர்கள் சட்டப்படி கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்ற நிலைமை இருந்தால் அது பலருக்கு பலமான எச்சரிக்கையாக அமையும். 

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவை நல்லதாக அமுல்படுத்தும் பொருட்டு சுமணரத்ன தேரரைக் கைது செய்வதே பொருத்துடையது.

தமிழ் மக்களுக்கு எதிராகக் கண்டபாட்டில் தகாத வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்த பிரஸ்தாப தேரரைக் கைது செய்யும் போது அது பலருக்கு மிகப் பெரும் திருத்தமாகவும் பாடமாகவும் அமையும்.

இதேவேளை ஜனாதிபதியின் உத்தரவை அமுல் படுத்துதல் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் அடுத்த கட்டம் வடக்கின் முதலமைச்சருக்கு எதிராக சிங்கள சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பிரசாரங்களை செய்வோர் கைது செய்யப்பட வேண்டும். இவை அமுலுக்கு வருமாக இருந்தால் இனவாதத்தைத் தூண்டு வோர் வாலை மடக்கி அமைதி காப்பர்.

இல்லையேல் இனவாதப் பேய் சன்னதம் ஆடவே செய்யும். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila