பூமித்தாயில் மனிதர்கள் ஒட்டுண்ணிகளாக வாழ்வதன் விளைவே இயற்கைப் பேரழிவுகள்!

பூமித்தாயில் மனிதர்கள் ஒட்டுண்ணிகளாக வாழ்வதன் விளைவே  இயற்கைப் பேரழிவுகள்!

பூமி எமது தாய். தமிழ்மொழியில் மாத்திரம் அல்ல. உலகில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளிலுமே பூமியை அன்னை என்றும் பூமாதேவி என்றும் பூமிக்கு உயிர்கொடுத்துத்தான் அழைத்து வருகிறார்கள். ஆனால், பூமியின் குழந்தைகள்போல நாங்கள் நடந்து கொள்வதில்லை. பூமியில் நாங்கள் ஒட்டுண்ணிகளாகவே வாழ்ந்து வருகிறோம். அதன் விளைவுதான் இயற்கைப்பேரழிவுகள் என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை (26.12.2016) முல்லைத்தீவு மாவட்டத்தில், செம்மலை மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இயற்கைப்பேரிடர்களை முற்றாகத் தவிர்க்க இயலாமற் போனாலும், அவற்றின் பாதிப்புகளைத் தணிவிக்க இயலும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு அமர்வாக இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பூமிக்கு உயிர் உண்டு. பாடங்களை நாங்கள் இரசாயனவியல், பௌதீகவியல், புவியியல், உயிரியல் என்று தனித்தனியாகப் படித்து வருவதாலேயே பூமியின் முழுப்பரிமாணங்களையும் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறோம். எங்களது உடலின் வெப்பநிலையை, குருதியில் உள்ள குளுக்கோசின் செறிவை உடல் மாறாமற் பேணி வருகிறது. அதேபோன்று, பூமியும் தன் வெப்பநிலையை, வளியில் உள்ள வாயுக்கலவையின் வீதாசாரங்களைச் சீராக வைத்திருக்கிறது. மனிதனின் உடலில் ஒரு சீர்த்திடநிலை காணப்படுவதைப்போன்றே, பூமியிலும் அது பேணப்பட்டு வருகிறது. இது குழப்பப்டுகின்றபோதே அழிவுகள் ஏற்படுகின்றன.
எங்களது உடலில் கிருமிகளின் தொற்று ஏற்படும்போது உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் கிருமிகளுடன் போரிடுகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் பலமாக இருந்தால் கிருமிகள் அழிக்கப்பட்டுவிடும். கிருமிகளின் தாக்குதல் வீரியமாக இருந்தால் நாங்கள் நோய்வாய்ப்பட்டுக் கடைசியில் இறக்க நேரிடுகிறது. இதேபோன்றதொரு யுத்தம்தான் பூமித்தாய்க்கும் மனிதக்கிருமிகளுக்கும் இடையில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
மனிதர்களின் இப்போதைய சனத்தொகை 740 கோடி. இவ்வளவு பேரும் பூமித்தாயின் வளங்களை அளவுக்கு அதிகமாகச் சூறையாடி ஒட்டுண்ணி வாழ்கையையே நடாத்தி வருகிறோம். பூமியின் நலனில் நாங்கள் அக்கறை கொள்ளாததால், தன் நலனில் தானே அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் பூமிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் புயல், மழை, வெள்ளம், கடும் வரட்சி, கடற்கோள் என்று இயற்கைப் பேரிடர்களை ஏற்படுத்திப் பூமி எங்களை அழித்து வருகிறது.
பூமிக்கும் எங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த யுத்தத்தில் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டிய இறுதிக் கட்டத்திலேயே நிற்கிறோம். எங்களது உணவுக்குழாயில் இ.கோலி என்ற பக்ரீறியாக்கள் கோடிக்கணக்கில் குடியிருக்கின்றன. நாங்களும் இ.கோலி பக்ரீறியாக்களும் ஒன்றுக்கொன்று நன்மை பயப்பனவாக வாழ்வதால் ஒன்றையொன்று அழிப்பதற்கு முற்படுவதில்லை. அதேபோன்று, நாங்களும் பூமித்தாய்க்கு நன்மைகள் செய்து, அவளிடம் இருந்தும் நன்மைகள் பெற்று ஒன்றியவாழிகளாக வாழ்வதால் மட்டுமே இயற்கையின் சீற்றங்களைத் தணிவிக்க இயலும். மாறாக, தொடர்ந்தும் ஒட்டுண்ணிகளாகவே வாழ்ந்து பூமியின் வளங்களை உறிஞ்ச முற்படுவோமானால் நாங்களும் அழிந்து பூமியும் அழிவது தவிர்க்க இயலாமற் போய்விடும் என்றும் தெரிவித்துள்ளார்.
07 11 01 02 15-1 16-1 14
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila