யார் இந்த கைதுசெய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி சரத்சந்திரா?


காவல்துறையை ஆங்கிலத்தில் பொலிஸ்(P.O.L.I.C.E.) என கூறுமிடத்து, இச்சொல் கண்ணியம், கீழ்படிதல், கேட்டல், விசாரணை, ஆலோசனை, ஒப்படைத்தல் போன்று பல விளக்கங்களை கொண்டுள்ளது.
இன்றைய காவல்துறையினர் இவற்றை மதிக்கின்றனரா என்பதே கேள்வி. சிறிலங்காவின் காவல்துறையினர் முற்றுமுழுதாக மோசமானவர்களே என கூறமுடியாது. அங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் மதிப்பவர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்.
தமிழீழ காவல்துறையினர் நல்ல ஒழுங்கத்திற்கு உலகிலேயே உதாரணமாக விளங்கினார்கள் என்பதை இங்கு நான் கூறவில்லை. இவற்றை மேற்குநாட்டு பத்திரிகையாளர்களும், ஆய்வாளர்களும் கூறியிருந்தனர்.
அன்று வண பிதா கஸ்பராஜ் தமிழீழ காவல்துறை பற்றி புலம் பெயர் வானெலியில் கூறும்பொழுது, “காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து, இருவரும் ஒன்றாக ஒரே துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து காவல் நிலையத்தை அடைவதாக கூறியிருந்தார்”.
சிறிலங்காவின் காவல்துறையினரிடையே உள்ள மாபெரும் குறை என்னவெனில், இவர்களை ஆளும்கட்சி அரசியல்வாதிகளும், மோசடி நிறைந்த தனவந்தர்களும் தமக்கு ஏற்றவகையில் கைப்பொம்மை ஆக்குகின்றனர்.
ஆனால் சரித்திரம் நிரூபித்துள்ள உண்மை என்னவெனில், நீண்ட காலத்தில் இப்படிபட்ட பெயர்வழிகள் ஏதோ ஒரு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவஸ்த்தைபட்டுள்ளனர்.
தற்பொழுது இரு மாவட்ட காவல்துறை அதிகாரிகளும், பல மேல் மட்ட காவல்துறை உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் உள்ளதுடன், ஒரு மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 23ம் திகதி, சிறிலங்காவின் செய்திகளை பார்வையிட்ட வேளையில், சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையின் இளைபாறிய மாவட்ட காவல்துறை அதிகாரியும், முன்னாள் ஜனதிபதி ராஜபக்சவின் பாதுகாப்பு ஆலோசனை அதிகரியுமான கே.எல்.எம்.சரத்சந்திரா, அரச வாகனத்தை துஸ்பிரயோகம் செய்துள்ள காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக படித்தேன்.
இச்செய்தி எனக்கு ஓர் அதிர்ச்சி செய்தியாக காணப்படவில்லை. உண்மையை பேசுவதனால், சிறிலங்காவின் ஊடகங்களில், இவர் ஏதை எதற்காக எப்பொழுது துஸ்பிரயோகம் செய்துள்ளார் என்பதை குறிப்பிட தயங்கியுள்ளனர்.
தமிழீழ ஆயுத போராட்டத்தின் ஆரம்ப சரித்திரத்தை ஒழுங்காக அறியாதவர்களிற்கு, கே.எல்.எம்.சரத்சந்திரா யார் என்பதை அறிந்திருக்க முடியாது. தமிழீழ ஆயுத போராட்டத்த்திற்கு பல அடிப்படை காரணிகள் காணப்பட்ட பொழுதும், இவ் ஆயுத போராட்டத்தை தீவிரப்படுத்தவும், இவ் ஆயுத போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் இணைந்து செயற்பட வழி கோலியவர்களில் ஒருவரே இந்த சரத்சந்திரா. சிலர் இவ்விடயத்தை நன்மையாகவும் கருதலாம் ஆனால் இன்று ஆயிரக்கணக்கான மக்களில் கொலைக்கும், காணமல் போவதற்கும், சித்திரவதைகளிற்கும் வித்திட்டவர்களில் ஒருவரே சரத்சந்திரா.
கைதுசெய்யப்பட்டுள்ள சரத்சந்திரா, 1970 இன் பிற்பகுதியில் யாழ் ஆனைக்கோட்டை காவல்துறை நிலையத்தின் பொறுப்பு அதிகாரியாக இருந்த வேளையில் இவரை நன்கு அறிவேன்.
அவ்வேளையில் இவர் ஓர் சாதராண உதவி பொலிஸ் அதிகாரி. இவரது கொடுமைகள் துஸ்பிரயோகங்கள் என்பது இவரது நிலையத்தின் எல்லைகளுக்கு அப்பால், யாழ் முழுவதும் பரவியிருந்தது. உண்மையை பேசுவதனால், அவ்வேளையில் வேலுப்பிள்ளை பிரபாகரனிற்கு மேலாக, சரத்சந்திராவையே பலர் அறிந்திருந்தனர் என்றால் அதற்கு இவரது கொடுமைகளே காரணம். இங்கு நான் எதையும் மிகைபடுத்தவில்லை.
கே.எல்.எம்.சரத்சந்திரா எப்படியாக சட்டத்தையும் ஓழுங்கையும் தனது கையில் எடுத்து, வன்முறைகளை மேற் கொண்டார் என்பதற்கு அவ்வேளையில் நடைபெற்ற சில சம்பவங்களை இங்கு தருகிறேன்.
இவரது காவல்துறை எல்லைக்குள் உள்ள ஓர் நூலகத்திலிருந்து நான்கு பாடசாலை மாணவர்கள் வீடு செல்வதற்கு வெளியில் வந்த வேளையில், இவர் சீவில் உடையில் வேறு இரு காவல்துறையினருடன், ஓர் தனியார் வாகனத்தில் அவ்விடத்திற்கு வந்து, அவ் நான்கு மாணவர்களையும் ஓரு காரணமுமின்றி, தனது குண்டான் தடி முறிந்து சின்னாபின்னமாகும் வரை மோசமான முறையில் தாக்கினார்.
இச்சம்பவத்தை நூலகத்திலிருந்த எம்மில் சிலர் பார்ந்து கொண்டிருந்தோம். இந்நான்கு இளைஞர்களில் இருவர், சில வருடங்களின் பின்னர் இயற்கை மரணம் எய்தார்கள். என்னை பொறுத்தவரையில் அவர்கள் இருவரும் இயற்கை மரணம் எய்திருந்தாலும், அவர்கள் மிகவும் மோசமான முறையில் சரத்சந்திராவினால் தாக்கப்பட்டமையினால், அவர்களிற்கு சில உட்காயங்கள் ஏற்பட்டடிருக்கலாம்.
இன்னுமொரு சந்தர்பத்தில், இவர் ஓர் இளைய வழங்கறிஞரின் காரியாலய பையனை, காரணமின்றி தாக்கிய காரணத்தினால், இச்சம்பவம் பற்றி, யாழ் காவல்துறை மேல் அதிகாரியிடம் அவ் வழக்கறிஞர் முறைபாடு செய்திருந்தார்.
சரத்சந்திரா ஆனைக்கோட்டை காவல்துறையில் கடமையாற்றிய வேளையில், பல தனியார் வாகனங்களை தனது தனிப்பட்ட தேவைகளிற்கு துஸ்பிரயோகம் செய்ததுடன், இவரது காவல்துறை நிலையத்திற்கு மிக அருகாமையில் வசித்து வந்த குற்றவியல் செயற்பாடுகள் நிறைந்த ஓர் ஆயுர்வேத வைத்தியாருடனேயே நெருங்கிய உறவை கொண்டிருந்தார்.
சரத்சந்திரா ஆனைக்கோட்டையிலிருந்து இடமாற்றம் பெற்று சென்ற சில காலத்திற்குள், இவ் வைத்தியர், தனது கையாட்களில் ஒருவரை கொலை செய்து, வயல்வெளியில் வீசியிருந்த காரணத்திற்காக, சிறிலங்கா காவல்துறையின் ரகசிய பிரிவினரினால் கைது செய்யப்பட்டார். இவ் வைத்தியர், தடுப்பு காவலிலேயே சுகயீனம் காரணமாக மரணித்தார்.
1979ம் ஆண்டு யாழ் படுகொலைகள்
1979ம் ஆண்டு யூலை மாதம் 13ம் திகதி, அதாவது யூலை 14ம் திகதி அன்று, இவரது காவல்துறை பிரிவிற்கு உட்பட நாவாலி என்னும் ஊரில் 27 வயதுடைய (இன்பம்)விஸ்வஜோதி, 29 வயதுடைய (செல்வம்)செல்வரட்ணம் ஆகிய இரு இளைஞர்ககளும், காவல்துறையினரினால் விசாரணைக்கென அழைத்து செல்லபட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ள அவர்களது உடல்கள், பண்ணை பலத்திற்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்டது.
இதே தினம் பரமேஸ்வரன், ராஜேஸ்வரன், ராஜகிளி, பாலேந்திரா ஆகிய நான்கு இளையர்களும் கைது செய்யப்பட்டு காணமல் போயிருந்தனர். இவ் படுகொலைகள் பற்றி, சர்வதேச மன்னிப்புசபை தமது 1980ம் ஆண்டு அறிக்கையில் உள்ளடக்கியுள்ளனர். அதேவேளை பல ஆய்வாளர்கள் இச் சம்பவம் பற்றி பல கட்டுரைகளில் விபரித்துள்ளார்கள்.
இப் படு கொலைகளிற்கும், காணமல் போவதற்கும், யாழில் நிலை கொண்டிருந்த பாதுகாப்பு படையை சேர்ந்தவர்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களில், முக்கியமானவர், ஆனைக்கோட்டை காவல்துறை நிலையத்தின் பொறுப்பதிகரியான சரத்சந்திரா.
இக்கொலைகள், காணமல் போனோர் விடயத்தில் எந்த அரசாங்கமும் எவ்விதமான விசாரணையை இன்று வரை மேற்கொள்வில்லை.
சரத்சந்திரா பற்றிய குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பல கோவைகள் இன்றும் யாழ்பாணத்தை சேர்ந்த பல வழங்கறிஞர்களிடம் உள்ளன. ஆனால் அன்று சாதாரண உதவி காவல்துறை அதிகாரியாக காணப்பட்ட இவர், அதிரடிப்படையின் முக்கிய மாவட்ட காவல்துறை அதிகாரியாகவும், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசனை அதிகாரியாகவும் கடமையாற்றி, அண்மை காலத்தில் எந்தவித சட்ட சிக்கலுமின்றி மகிழ்சியாக இளைபாறியுள்ளார் என்பது வியப்பிற்குரியது.
அன்று இவர் மீது தொடர்ச்சியாக பல முறைபாடுகள் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, சரத்சந்திரா ஆனைக்கோட்டையிலிருந்து வல்வெட்டிதுறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் அங்கு சென்றதும், தனது அரசியல் செல்வாக்கை பாவித்து, வல்வெட்டித்துறையிலிருந்து இடமாற்றம் பெற்றார்.
சில வருடங்கள் சென்றதும், இவர் சிறிலங்காவின் அதிரடிப்படையில் இணைதுள்ளதாக அறிந்த பொழுது, எனக்கு எந்தவிதமான ஆச்சர்யமும் ஏற்படவில்லை. காரணம், சிறிலங்காவின் அதிரடிப்படையினர் காவல்துறை, இராணுவம் ஆகிய இருவரது அதிகாரங்களை கொண்டுள்ளதனால், இவர் தனது கொடுமைகளை தொடர்வதற்கு ஏற்ற இடமாக அதிரடிப்படை விளங்கியது.
அங்கு இவரது மிக நீண்டகால சேவையில், இவரினால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டிதனமான சித்திரவதைகளும், கொலைகளும் எண்ணில் அடங்காதவை. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, அக்கரைப்பற்று, திருகோவில், கல்முனை, காரைதீவு, கொக்கட்டிச்சோலை, பொத்துவில், மட்டக்களப்பு போன்று பல இடங்களில் இவரது கொடுமைகள் மிகவும் மோசமாக இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில், அதிரடிப்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரைவதைகள் கொலைகள் என்பதை விபரிப்பதே மிகவும் கவலைக்குரிய விடயம். அதிரடிப்படையினர் கைது செய்த சிலரை, கடற்கரைகளில் அவர்களது கழுத்துவரை மண்ணினால் மூடிய பின்னர், அவர்களது தலைக்கு தீயிட்டு கொன்றுள்ளனர். சிலரது உடம்பை சுற்றி ரயர்களை போட்டு அவர்களை உயிருடன் எரித்தும் உள்ளனர்.
இவ்விடயங்கள் சம்பந்தமாக, கிழக்கில் முன்னின்று ஆவணப்படுத்தி சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிற்கு வழங்கிய பாரளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மிக குறுகிய காலத்தில் ஒருவர் பின் ஒருவராக படுகொலை செய்யப்பட்டனர்.
மாமனிதர்களான யோசப் பரராஜசிங்கம், சந்திரநேரு அரியநாயகம், தராகி சிவராம், பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசேன் போன்று பலர் இப்பட்டியலில் அடங்குவார்கள்.
தற்போதைய வினா என்னவெனில், நல்லாட்சி என கூறப்படும் அரசின் காவல்துறையின் சிரேஸ்ட அதிகாரி, ஜனதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் அரச வாகன துஸ்பிரோயகத்திற்காக கைது செய்யப்பட்டு பிணையில் அனுமதிக்கப்பட்ட சரத்சந்திராவினுடைய சேவைகாலத்தினுள் அடங்கிய முழு முறைபாடுகளையும் முன்னெடுப்பார்களா? அல்லது வழமை போல் வாகன துஸ்பிரயோகம் என்ற கண் துடைப்பு விசாரணையை மட்டும் மேற்கொள்வார்களா என்பதே.
இப்படியாக இவர்கள் ஓர் கண்துடைப்பு விசாரணையை மேற்கொள்ளும் கட்டத்தில், பிரதம நீதி பதியினால், அவரது சேவை கால குற்றச்சாட்டுகளை முழுதாக பரீசிலித்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
இதேவேளை, 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனதிபதி தேர்தலின் பொழுது, அதிரடிப்படையினர் சர்பாக, இவரது பெயருடன் முன்னாள் ஜனதிபதி ராஜபக்சவை ஆதரித்து வெளியிட்டுள்ள துண்டு பிரசுரம் சம்பந்தமாகவும் விசாரணை செய்ய முடியும்.
தெற்கில் வாழும் பெரும்பாலான மக்கள், முப்பது வருடகால யுத்தத்திற்கு, தலைவர் பிரபாகரனை குறை கூறுவதை நிறுத்தி, சரத்சந்திரா போன்றவர்களே தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
யாழ்பாணத்தில் அரச படைகளினால் ஆறு இளையர்கள் படுகொலை செய்யப்பட்டும், காணமல் போயுள்ள 1979 ஆம் ஆண்டு யூலை காலபகுதியில், பெரும்பாலான மக்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனை சரியாக தெரிந்திருக்கவில்லை.
ஆனால் அவர்கள் சரத்சந்திரா என்பவர் யார் என்பதை நன்றாக அறிந்திருந்தார்கள். ஒர் சாதராண உதவி காவல்துறை அதிகாரியான சரத்சந்திர, கொலை குற்றம் சாட்டப்பட்டிருந்தும், இறுதியாக ஓர் முக்கிய காவல்துறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று இளைபாறியுள்ளார் என்பது விசித்திரமான விடயம்.
சிறிலங்காவின் அரசியல் தற்பொழுது பயணிக்கும் நிலையில், 2020ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஜனதிபதி, பாரளுமன்றம் ஆகிய இரு தேர்தல்களிலும், நிட்சயம் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக்சாவை ஜனதிபதியாகவும், அவரது சகோதரரான மகிந்த ராஜபச்சா பிரதமராக பதவி ஏற்க கூடிய சந்தர்பங்களே நிறைந்து காணப்படுகிறது.
இவ் நிலையில், யாழில் தமிழ் இளைஞர்களின் ஆரம்ப கொலைகளிற்காக குற்றம்சாட்டப்பட்டவரும், வாகன துஸ்பிரயோகத்திற்காக கைது செய்யப்பட்டு பிணையில் அனுமதிக்கப்பட்ட சரத்சந்திரா, சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படலாம்.
இப்படியான நிலை ஏற்படும் கட்டத்தில், சரத் பொன்சேக்கவை இழிவுபடுத்துவதற்காக மேலும் சில மேல்மட்ட இராணுவ அதிகாரிகளிற்கு ‘பீலட் மார்சல்’ பட்டங்கள் வழங்கப்படும். இந் நிலையில், மோசடிகள் நிறைந்த சர்வாதிகாரம், மறுபடியும் நாட்டில் உருவாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
அத்துடன், தற்போதைய அரசின் அமைச்சர்ககள் பழிக்கு பழிவாங்கலுக்கு ஆளாக்கப்படலாம். இதையே சிறிலங்கா ஜனநாயக சோசலீச குடியரசு என்பார்கள்.
குட்டி கதை
மிக அண்மையில் ரசித்த ஒர் குட்டி கதையை இங்கு யாவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஓர் பாரிய தொழிற்சாலையில், ஒருவர் ஓர் வண்டி மீது, ஓர் சிறிய பெட்டியை வைத்து தள்ளி வருவதை தொழிற்சாலையின் காவலாளி கவனித்தார்.
உடனே அவ்வண்டியை தள்ளி வருபவரிடம், இப் பெட்டியினுள் என்ன உள்ளது என விசாரித்தார். வண்டிலை தள்ளி வந்தவர், ‘அதில் அரிந்த மரத்தூள் உள்ளது’ என பதில் கூறுகிறார். காவலாளி இதை என்ன செய்ய போகிறாய் என விசாரித்த பொழுது, ‘இவற்றை நான் குப்பையில் போடப் போகிறேன்’ என்றார். காவலாளி அவரை செல்ல அனுமதித்தார்.
இப்படியாக ஐந்து ஆறு நாட்களாக நடைபெறுகிறது. ஆறாவது நாள் காவலாளி, வண்டியை தள்ளிவருபவரை நிறுத்தி, இன்று இந்த பெட்டிக்குள் என்ன உள்ளது என விசாரித்தார். வண்டிலை தள்ளி வந்தவர் வழமைபோல், ‘அதில் அரிந்த மரத்தூள் உள்ளது’ என பதில் கூறுகிறார்.
காவலாளி கூறுகிறார், உண்மையை பேசுவதனால், ‘எனக்கு நீ எதையோ தினமும் திருடுவதாக மனதில் தோன்றுகிறது. உண்மையை சொல், நான் உனது வேலைக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன்’ என கூறினார். அப்பொழுது வண்டிலை தள்ளி வந்தவர், ‘நீங்கள் எண்ணுவது சரி, நான் தினமும் திருடுகிறேன் ’என பதில் கூறுகிறார்.
காவலாளி, ‘அப்படியானால், நீ என்னத்தை திருடுகிறாய் என்பதை எனக்கு சொல்’ என மிகவும் தாழ்மையாக வேண்டினார். வண்டிலை தள்ளி வந்தவர், ‘நான் தினமும் ஒவ்வொரு வண்டிலாக திருடுகிறேன்’ என்றார். காவலாளி திகைத்து நின்றார்.
காரணம், தினமும் காவலாளியின் பார்வை, வண்டியின் மேல் உள்ள சிறிய பெட்டியிலேயே இருந்தது. அவர் அவ் பெரிய வண்டிலை பற்றி சிந்திக்க தவறிவிட்டார்.
இதே போன்று தான் இன்று நாட்டிலும், புலம் பெயர் வாழ் செயற்பாடுகளும்.
எமது புலம்பெயர் தேசத்து நண்பர்கள் தேசிய கொடி புலி கொடி ஏற்றுவதா இல்லையா, மண்டபம் பெரிதா சிறியதா, பொறுப்பாளரை மாற்றுவதா விடுவதா, கூட்டங்களை குழப்புவதா விடுவதா, ஆபத்தான போலி மனிதர்களை, ‘நல்ல வேலை செய்கிறீர்கள்’ என தட்டி கொடுப்பது போன்ற விடயங்களில் கவனம் செலுத்துகின்றனர். நாட்டில் உள்ள சிலர் தாம் விரும்பாத அரசியல்வாதிக்கு எப்படி தீங்கு செய்யலாம் என்பதையே இரவு பகலாக சிந்திக்கின்றனர்.
இவர்கள் இப்படியாக அற்ப செயற்திட்டங்களில் நேரங்களை விரயம் செய்யும் வேளையில், தாயக பூமியில் சிங்கள குடியேற்றம், பௌத்த விகாரைகள், இராணுவமயம் என தினமும் எமது இருப்பு பறி போகிறது. புலம்பெயர் செயற்பாட்டாளர்களும், நாட்டில் உள்ளவர்களும் கவனம் செலுத்துவது தொழிற்சாலை வண்டி மீது வைக்கப்பட்டுள்ள சிறிய பெட்டியிலேயே, திருடப்படும் வண்டியில் அல்லா.
இப்படியாக எமது செயற்திட்டங்கள் தொடருமானால், இன்னும் ஆகக் கூடியது இரு வருடங்கள். அதாவது அடுத்த பொது தேர்தலில் வன்னி, யாழ் மாவட்டங்களில் சிங்கள பாரளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி அடைந்து பாராளுமன்றம் செல்லும் வேளையில், எந்த அரசியல் உரிமைகளும் அற்ற நாம், தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படவுள்ளது என்பதை யாவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila