சுமந்திரனின் பெயர்ப்பலகையில்லாத சமஷ்டிக் கதையும், மாவையின் புதிய கண்டுபிடிப்பான புலிக்கண்ணீரும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவமானப்படுத்தி தொடர் கடிதங்கள் எழுதிய சங்கரியின் இலட்சியப் போராளி கருத்தும் தேர்தல் காலத்தில் வேடம் கலைந்து நிற்பவர்களின் உச்சாடனங்கள்.
இலங்கையின் உள்ராட்சித் தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதமும் சில நாட்களுமே உள்ளன. முற்கூட்டிய வாக்களிப்புக்கான நாட்களும் அறிவிக்கப்பட்டுவிட்டது.
கிராமங்களிலும், ஊர்களிலும், நகரங்களிலும் உள்;ர் மக்களிடையே காவடி, கரகாட்டமின்றி இதுவரை நடைபெற்ற இத்தேர்தல் களம், இம்முறை பொதுத்தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் போன்று அமர்க்களப்படுகிறது.
முற்காலங்கள்போல இவை இப்போது ஒரு குட்டித்தேர்தலல்ல. முக்கியமாக இம்முறை மாபெரும் தேர்தலாகிவிட்டது.
இதற்குக் காரணம், அடிமட்டக் கட்சிகளிலிருந்து தேசியக்கட்சிகள் ஈறாக, புதிதாக முளைத்த கட்சிகளும், நூறுக்கும் அதிகமாக சுயேட்சைக் குழுக்களும் கரணமடிக்க களத்தில் குதித்துள்ளதே.
நாட்டின் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர், முன்னாள் பிரதமர்கள், தள்ளாடும் கட்சிகளின் வயோதிபத் தலைவர்கள், கொள்ளையர்கள், கள்வர்கள், இலஞ்சவாதிகள் என்று பல தரப்பினரும் எந்த வேறுபாடுமின்றி ஒரே தளத்தில் ஏறி நிற்பதால் இந்தத் தேர்தல் அதிபிரசித்தி பெற்றுள்ளது.
தேர்தல்நாள் நெருங்க நெருங்க அம்புகளும், வில்லுகளும், குண்டுகளும், ரவைகளும் களத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளன.
தாயகத் தமிழர் அரசியல்களம் வேறுவிதமாகச் சூடுபிடித்துள்ளது. “இளைஞர்களே! காத்திருங்கள்! உங்களுக்கான காலம் நெருங்குகிறது” என்ற நாடிபிடிக்கும் பீடிகையுடன் சில வாரங்களுக்கு முன்னர் அறிக்கைவிட்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்பார்த்ததிலும் வேகமாக இரண்டாவது அறிக்கையை விடுத்தார்.
மற்றைய அரசியல்வாதிகள் விடுவதுபோன்று இது வெறும் |வளவளா| அறிக்கையன்று. மிகமிக ஆழமான விடயங்களைத் தொடுகின்ற ஒன்று.
ஒரே வரியில் கூறுவதானால், தமிழரசுக் கட்சியினரை காரண காரியங்களோடு நேரடியாகச் சுட்டெரிக்கின்ற அறிக்கை.
தவறிழைக்கும் தலைமைப்பீடத்தின் போக்கு, கொடுத்த வாக்கைத் தவறவிடும் அரசியல் சுயநலம், தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம், திருமலைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கூட்டு முடிவை மீறி நடப்பது, எவ்வாறு முதலமைச்சர் தேர்தலுக்கு இழுத்து வரப்பட்டமை, 2015ன் தேர்தல் அறிக்கை என்ன கூறுகிறது, தமிழ்த் தலைவர்களின் கொடுக்கல் வாங்கல்கள், வடமாகாணசபை இனப்படுகொலையை வலியுறுத்தி நிறைவேற்றிய ஏகமனதான தீர்மானம், மக்கள் தீர்ப்பை மதிக்காத எதேச்சாதிகாரப் போக்கு என்று ஒவ்வொன்றையும் துல்லியமாக எடுத்துச் சொல்லியுள்ள முதலமைச்சர், தாம் எந்தவொரு கட்சியையும் சேர்ந்தவரல்ல என்றும், தமிழரசுக் கட்சி தம்மைக் கட்டுப்படுத்த முடியாதென்றும் இவ்வறிக்கையில் அழுத்திக் கூறியுள்ளார்.
இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு விடயமும் மறுக்க முடியாத உண்மைகள் என்பதால், கூட்டமைப்பின் சம்பந்தனோ, தமிழரசு தலைவர் மாவை சேனாதிராஜாவோ இதற்குப் பதிலளிக்க முடியாது.
இதனை எழுதும்வரை இவர்களிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.
ஆனால், தமிழரசுக் கட்சியின் செயலாளர் கே.துiராஜசிங்கம் முதலமைச்சருக்குப் பதிலளிக்கப்போய் சம்பந்தாசம்பந்தமற்ற விதண்டாவாத அறிக்கையொன்றை வெளியிட்டார்.
முதலமைச்சர் பதவி ஆசை கொண்டவரென்றும், அரசியல் முன்னனுபவம் அற்றவரென்றும், அடிமட்ட மக்கள் பிரச்சனையை அறியாதவரென்றும் இவரது அறிக்கை தனிநபர் தாக்குதலை நடத்தியுள்ளது.
இவ்வாறான ஓர் அறிக்கையைத் தயாரிக்கக்கூடிய ஆற்றல் துரைராஜசிங்கத்துக்குக் கிடையாது என்றும், கூட்டமைப்பின் பேச்சாளராக விளங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே இதனைத் தயாரித்து துரைராஜசிங்கத்தின் பெயரால் வெளியிட்டதாகவும் கூட்டமைப்பின் பிரமுகர்கள் பூடகமாகத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவி மாவை சேனாதிராஜாவுக்குச் சென்றதால், அப்பதவியை எதிர்பார்த்திருந்த விக்னேஸ்வரன் குழப்பமடைந்துள்ளார் என்றவாறு துரைராஜசிங்கம் தெரிவித்துள்ள கருத்தை நகைப்புடன் விமர்சித்துள்ள விக்னேஸ்வரன், “கேவலம், ஒரு கட்சியின் தலைமைப்பதவிக்காக கனாக்காண நான் எனது சில மாணவர்களைப் போன்றவனா” என்று பதிலளித்துள்ளார்.
இங்கு எனது சில மாணவர்கள் என்று விக்னேஸ்வரன் குறிப்பிடுவது சுமந்திரனைச் சுட்டுவது என்பதையும், அவரே துரைராஜசிங்கத்தின் அறிக்கையைத் தயாரித்தவர் என்பதையும் நிரூபணமாக்கி நிற்கிறது.
பாவம் துரைராஜசிங்கம்! விக்னேஸ்வரனின் பலமறியாது சுமந்திரன் கொடுத்த தடியை வாங்கி அடிக்கப்போய் அதில் சிக்குப்பட்டுள்ளார்.
பதவி ஆசை என்ற கூற்றை வெளிப்படுத்திய சுமந்திரனை, விக்னேஸ்வரன் அடையாளம் கண்டதையடுத்து ஆப்பிழுத்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
முதலமைச்சரின் மூன்றாவது அறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் நிகழ்கால, வருங்கால தமிழ் அரசியலுடன் சம்பந்தப்பட்டவை என்பதால் அவற்றை இங்கு நோக்குவது அவசியமாகின்றது:
• இடைக்கால அறிக்கை தமிழரை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது. எனவே அதனை நிராகரித்ததில் தவறில்லை.
• நான் கட்சிகள் அரவணைப்பில் வளர்ந்தவனல்ல. என்னைக் கட்சிகளுக்குள் கட்டுப்படுத்துவது சற்றுக் கடினமாகவிருக்கும்.
• யாருக்கும் மண்டியிட்டு மலர்மாலை பெறவேண்டிய அவசியம் தம்பி பிரபாகரனுக்கு என்றுமே இருந்ததில்லை.
• 2016ல் தக்க தீர்வைப் பெற்றுவிடுமோமென்று முரண்படாது வாழ்ந்துவரும் எமது தலைவர் (சம்பந்தன்) கூறினார்! பெற்று விட்டோமா?
• ஒற்றையாட்சி என்றால் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் என்று பொருள்படும். எமக்கு நேர்ந்த அரசியல் துயரங்கள் யாவும் இந்த ஆதிக்கத்தின் பிரதிபலிப்பே.
• சிங்கள இனத்தின் ஆதிக்கத்தையேற்று, அவர்கள் தருவதைப் பெற்றுக்கொள்வோம் என்றால், எமக்கு என்ன கிடைக்கப்போகிறது?
• காணி பறிபோகிறது, வாழ்வாதாரங்கள் பறி போகின்றன, வாணிபம் பறி போகின்றது, சுற்றுலாவும் எமது வளங்களும் சுமந்து செல்லப்படுகின்றன, காணாமல் போனோர் பற்றி கடுகளவும் சிந்தனையில்லை. இவற்றுக்காக திடமான குரல்கூடக் கொடுக்காது, தருவதை ஏற்போம் என்பது சரியாகப்படுகிறதா?
மேற்சொன்னவை உட்பட மொத்தம் 20 அம்சங்களைக் கொண்ட மூன்றாவது அறிக்கையை சுத்தத் தமிழில் ஒரு கட்டுரையாகத் தந்துள்ளார் முதலமைச்சர்.
உள்ராட்சித் தேர்தலுக்கு முன்னர் இது தொடர்பாக சம்பந்தனோ, சுமந்திரனோ பதிலளிக்கும் வாய்ப்பில்லை.
தேர்தலுக்கு நாட்கள் குறுகி வருவதால் நாவடக்கம் நல்லது என்று இவர்கள் நினைக்கக்கூடும். புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக மூன்று விடயங்களைப் பார்க்கலாம்.
2002ம் ஆண்டு நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரமே புதிய அரசியலமைப்பு உருவாகுமென சுமந்திரன் பல கூட்டங்களில் தொடர்ந்து கூறிவருகிறார்.
விடுதலைப் புலிகள் அன்று முடிவெடுத்த அரசியல் தீர்வையே தாங்கள் இப்போது பின்பற்றுவதாக தமிழ் மக்களுக்கு படம் காட்ட சுமந்திரன் எடுக்கும் இந்த முயற்சி அப்பட்டமான பொய்யை அடிப்படையாகக் கொண்டது.
ஒஸ்லோ உடன்படிக்கை ஒரு தீர்வையொட்டிய முடிவல்ல.
உள்ளக சுயநிர்ணய கோட்பாட்டுக்கமைய தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் சம~;டி ஆட்சி முறை தழுவிய தீர்வு பற்றி ஆராய்ந்து பார்க்கவே ஒஸ்லோவில் இரு தரப்புக்குமிடையில் உடன்படிக்கை காணப்பட்டது.
ஆனால், இதனை ஒஸ்லோவில் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்ட தீர்வாக சுமந்திரன் பொய்யுரைப்பது தமிழரசுக் கட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கே.
அடுத்ததாக, அரசியல் அமைப்பில் சம~;டி என்ற பெயர்ப்பலகை இருக்காதென்றும், ஆனால் அதற்குள் சம~;டித் தீர்வு முறை உள்ளடங்கியிருக்கிறது என்றும் இன்னொரு பச்சைப் பொய்யை சுமந்திரன் அவிழ்த்து விட்டுள்ளார்.
பெயர்ப்பலகையில்லாத பேருந்தில், அது எங்கே செல்கிறது என்று தெரியாது எவராவது ஏறுவார்களா? தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாதென்பதை சுமந்திரன் இன்னும் ஏனோ புரிந்து கொள்ளவில்லை.
“மீண்டும் போராட்டம் வெடிக்கும்” என்ற கோ~த்தின் பிதாமகரான மாவை சேனாதிராஜா மட்டக்களப்பு மாவட்ட நற்பிட்டிமுனையில் நடைபெற்ற தேர்தல் கூட்டமொன்றில் புதிய கண்டுபிடிப்பொன்றை வெளியிட்டுள்ளார்:
“எமது பலமாகத் திகழ்ந்த புலிகளை இழந்துவிட்டோம்” என்பது இவரின் திருவாய் மொழி. புலிகளின் பெயரைக் கூறி வாக்கு வேட்டைக்கு மாவையர் இறங்கிவிட்டார் என்பதே இதன் அர்த்தம்.
2000ம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உடைத்தெறிந்து, 2014ல் கூட்டணியை தனித்துப் போட்டியிட வைத்துத் தோல்வி கண்ட வி.ஆனந்தசங்கரி இப்போது தமது புதிய அணியின் கூட்டமொன்றில் பின்வருமாறு கூறியுள்ளார்:
“பிரபாகரன் இலட்சியப் போராளி, அவர் ஒரு இலட்சிய வீரன். தமிழர் விடுதலைக் கூட்டணியை அப்போது உடையாது பார்த்திருந்தால் அவர் இன்று உயிருடன் இருந்திருப்பார்” என்பது இவரின் இன்றைய கூற்று.
யாரை நோக்கி சங்கரி விரலை நீட்டுகிறார். அந்த விரல் அவரை நோக்கி நீட்டப்பட வேண்டியதாகும்.
சுமந்திரனின் பெயர்ப்பலகையில்லாத சம~;டிக் கதையும், மாவையின் புதிய கண்டுபிடிப்பான புலிக்கண்ணீரும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவமானப்படுத்தி தொடர் கடிதங்கள் எழுதிய சங்கரியின் இலட்சியப் போராளி கருத்தும், தேர்தல் காலத்தில் வேடம் கலைந்து நிற்பவர்களின் உச்சாடனங்கள்.
இந்த உச்சாடனங்களை நம்பி அவர்கள்பால் அள்ளுப்பட மக்கள் இனியும் மடையர்களாக இருக்க முடியாது.