தமது குளத்தில் பங்கு கேட்கும் சிங்கள குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தக் கோரிய தமிழ் பூர்வீகவாசிகள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் நேற்று திங்கட்கிழமை முல்லைத்தீவு அரச அதிபர் செயகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது.
அந்தக் கூட்டத்தில் பேசவென பதவியா பக்கமிருந்து 20 வரையிலான சிங்களவர்களும், தண்ணிமுறிப்பு பகுயில் இருந்து 30 வரையிலான தமிழர்களும் வந்திருந்தனர்.
தண்ணிமுறிப்பு குளம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் தென் எல்லையில் இருக்கின்ற மிகப்பெரிய குளங்களுள் இதுவும் ஒன்று. அந்தக் குளத்தின் கீழ் வருகின்ற ஆயிரக்கணக்கான வயல் நிலங்களுக்கு இங்கிருந்து தான் நீர் பாய்ச்சப்படும்.
இதுமட்டுமல்லாது தண்ணிமுறிப்பு குளத்தில் இருந்து பிடிக்கப்படும் நன்னீர் மீனினை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் தமிழர்களும் அங்கிருக்கின்றனர். அந்தக் குளத்து மீனை பிடித்து விற்று வரும் வருமானத்தில்தான் பல குடும்பங்களின் வயிறு ஆறுவதை வன்னியில் வாழும் பலரும் அறிந்திருப்போம்.
விவசாய வருமானம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான். இடைக் காலத்துக்கான வருமானத்தை இந்தக் குளத்திடமிருந்தே பெற்றுக்கொள்கின்றனர். இப்போது இந்தக் குளத்து மீனிலும் பங்கு கேட்க வந்திருக்கின்றனர் சிங்களவர்.
மாவட்ட அபிவிருத்தி கூட்டத்துக்கு வந்திருந்த சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இது தொடர்பில் பலத்த வாக்குவாதமே இடம்பெற்றது. இது எங்களின் குளம். நாங்கள் காலம் காலமாக மீன்பிடியில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை நடத்தி வரும் குளம். இதில் நீங்கள் அடாத்தாக நுழைந்து மீனை அள்ளிப் போவது எங்கள் வயிற்றில் அடிக்கும் செயல். இதற்கொரு தீர்வைத் தாருங்கள். எங்கள் குளத்தில் நாங்கள் மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுக்கப் பொலிஸில் சிங்கள மீனவர்கள் முறைப்பாடே செய்திருக்கின்றனர். எங்களு நீதி தாருங்கள் எனத் தண்ணிமுறிப்பு வாழ் தமிழர்கள் கேட்டனர்.
இல்லை. நாங்கள் 1983 ஆம் ஆண்டிலிருந்து இந்தக் குளத்தில் மீன்பிடிக்கிறோம். எங்களுக்கும் இதில் பங்குண்டு. முல்லைத்தீவு மாவட்டம் சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் பல்லினமாக வாழும் மாவட்டம். நீங்களும், முஸ்லிம்களும் மட்டும் தண்ணிமுறிப்புக் குளத்தில் மீன்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சிங்களவர்கள் கேட்டனர். வாக்குவாதம் முற்றியதும், இரு தரப்பும் வெளியேற்றப்பட்டனர்.
அரச அதிபர் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொக்கிளாய் விகாரைக்கு அனுமதியளித்த நபரொருவரே முல்லைதீவு அரச அதிபராக பதவியேற்கவுள்ளமை தெரிந்ததே.