வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட காணிகளைபார்க்க சென்ற மக்களில் ஒரு பகுதியினரே தமது காணிகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணிகள் விடுவிப்பின் 2 ஆம் கட்டமாக 590 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டதுடன் அதனை மக்களும் பார்வையிட அனுமதி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேசன்துறை தெற்கு (ஜே - 235 கிராம அலுவலர்), பளை வீமன் காமம் வடக்கு (ஜே - 236 கிராம அலுவலர்), பளை வீமன்காமம் தெற்கு (ஜே - 237 கிராம அலுவலர்), கட்டுவன் (ஜே - 238 கிராம அலுவலர்), தென்மயிலை (ஜே - 240 கிராம அலுவலர்), வறுத்தலைவிளான் (ஜே - 241 கிராம அலுவலர்), தையிட்டி தெற்கு (ஜெ - 250 கிராம அலுவலர்), பலாலி தெற்கு (ஜே - 252 கிராம அலுவலர்) ஆகியவற்றின் காணிகளும் கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் (ஜே - 284 கிராம அலுவலர்) காணிகளும் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பினையடுத்து ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்த மக்கள் திரண்டிருந்தனர்.ஆனால் தாங்கள் படிப்படியாகவே காணிகளை விடுவிக்கப்போவதாக தெரிவி;த்து சில பகுதிகளிற்கே மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் பெரும்பாலான குடும்பங்கள் தங்களது காணிகளினை எட்டிப்பார்க்க கூட முடியாது திரும்பவேண்டியிருந்தது.