யுத்தத்தில் அழிவுகளை ஏற்படுத்தியவர்களுக்கு ஒரு நீதியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதியுமாக தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற இந்த அரசாங்கம் நடந்துகொள்வது மிகுந்த வேதனை அளிக்கிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் வவுனியா கணகராயன்குளம் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த 30 வருட கால யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், போராளிகள் உயிர்நீத்திருக்கிறார்கள், அவயவங்களை இழந்திருக்கிறார்கள். யுத்தம் முடிந்து 8 வருடங்கள் ஆகின்றன. இற்றை வரைக்கும் உயிர் நீத்தவர்களுக்கான நட்டஈடோ, ஊனமுற்றவர்களுக்கான நிரந்தர வாழ்வாதரத்திற்கான கொடுப்பனவோ வழங்கப்படவில்லை.
யுத்தத்தை நடாத்தி பல்வேறு அழிவுகளையும் ஏற்படுத்தி போர் குற்றத்தில் ஈடுபட்ட மற்றும் மனித உரிமைகளை மீறிய முப்படையினரில் உயிரிழந்தவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் பல்வேறுவிதமான விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவருகிறது.
மறுபுறத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சில தமிழ் மக்களுக்கு ரூபா 4 ஆயிரம் வீதம் கொடுக்கப்படுவதைத் தவிர, தற்போதைய வரவுசெலவுத் திட்டத்தினூடகவும் வேறு எந்த விதமான கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லலை.
யுத்தத்தில் அழிவுகளை ஏற்படுத்தியவர்களுக்கு ஒரு நீதியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதியுமாக தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற இந்தஅரசாங்கம் நடந்துகொள்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.
போரினால் தமது அவயவங்களை இழந்த ஒவ்வொருவருக்கும் முப்படையினருக்கு வழங்கப்படும் அதே விதமான சலுகைகள் வழங்கப்படுவதுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேசசட்ட நடைமுறைகளுக்கு அமைவாக புதிய அரசியல் யாப்பில் அவர்கள் தொடர்பான விசேட சட்ட ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பு, கல்வி, வாழ்வாதாரம், மருத்துவம் போன்ற விடயங்களில் அவர்கள் தொடர்பில் அதி கூடியகவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.