கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார் ஔவையார். இது அன்று கூறியது. இதனை இன்று கூறுவதாயின் கற்றுக்கொண் டிருப்போருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றே ஔவையார் தன் பாட்டை அமைத்திருப்பார்.
எவனொருவன் கற்காமல் விடுகிறானோ அன்றே அவன் கற்பிக்கத் தகுதியற்றவன் என்று இந்திய தேசத்தின் குடியரசுத் தலைவராக இருந்த பேராசிரியர் இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆக, கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் என்பதே உண்மை. இன்றைய உலகில் மாறிவரும் விடயங்களை அன்றாடம் பதிவு செய்து கொள்வது கட்டாயமானதாகிவிட்டது.
உலகம் ஓடுகின்ற ஓட்டத்துக்கு ஏற்ப ஓடப்பழகி கொள்ள வேண்டும். இல்லையேல் வாழ்க்கையில் நாம் பிந்தி விடுவோம். இது ஒருபுறமிருக்க,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றும் இன்றும் பட்டம் பெறும் அன்புக்குரிய சகோதரர்களே! உங்கள் எதிர்காலம் சிறப்புற எங்கள் வாழ்த்துக்கள்.
அதேநேரம் உங்களுடன் சில நிமிடங்கள் பேச விரும்புகின்றோம். பொதுவில் பட்டம் பெற்றவர்கள் அரச வேலைக்காகக் காத்திருத்தல் என்ற ஒரு வழமையில் ஊறிப் போயுள்ளனர்.
இதில் இருந்து நாம் விடுபட வேண்டும். பட்டதாரிகளாகிய நீங்கள் சுயதொழில் மற்றும் விவசாயம், கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபட முன்வர வேண்டும். அப்போதுதான் எங்கள் நாட்டின் பொருளாதாரம் ஏற்றம் பெறும். படித்துப் பட்டம் பெற்றவர்கள் அனைவரும் கோவைகளுடன் இருந்துவிட்டால் எங்கள் நிலைமை என்னவாகும்.
பட்டம் பெற்றவர்களுக்கு அரச வேலை; ஏனையவர்களுக்கு வர்த்தகம் என்றிருந்தால் உழுதுண்டு வாழும் எங்கள் உன்னத வாழ்வு கேள்விக் குறியாகி விடும்.
ஆனால் நிலைமை, பட்டம் பெற்றவர்கள் அரச பணியையும் ஏனையவர்கள் வர்த்தகம் என்பதிலுமே நாட்டம் காட்டுகின்றனர்.
வர்த்தகம் என்பது நாமே உற்பத்தி செய்து விற்பதாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இறக்குமதிப் பண்டங்களை விற்றுத் தீர்க்கும் விற்பனை முகவர் பணி மட்டுமே எங்களிடம் நடந்தாகிறது.
இத்தகைய போக்குகள் எங்களின் பொருளாதாரத்தை அதளபாதாளத்துக்குக் கொண்டு சென்று விடும்.எனவே பட்டம் பெற்றுள்ள நீங்கள் உங்கள் சொந்தக்காலில் நின்று தொழில் புரியத் தயாராகுங்கள்.
மூலதனம் போதாது என்றால் பல்கலைக்கழக நண்பர்களாகக் கூட்டுச்சேருங்கள். கம்பனியாக உங்கள் தொழில் முயற்சிகளை ஆரம்பியுங்கள்.நீங்கள் படித்ததை - பெற்ற பட்டத்தை பிரயோகித்துப் பாருங்கள். வெற்றி நிச்சயமாகும்.
அரச பணியில் இருந்தால் மாதமாதம் சம்பளம் கிடைக்கும் ஓய்வுகாலத்தில் பென்சன் கிடைக்கும் என்ற எல்லைகளுக்குள் எங்கள் வாழ்வை மட்டுப்படுத்திக் கொள்ளும் மடமைத் தனத்தை வெட்டி வீழ்த்தி ஆபத்துக்கு முகம் கொடுத்து சொந்தமாகத் தொழில் ஆரம்பித்து சாதனை படைப்போம் என்று சபதம் எடுங்கள்.
எந்தப் பணியைச் செய்தாலும் அதில் நேர்மை, நீதி, தர்மம், உண்மை என்பவற்றைப் பேணுதல் என்று திடசங்கற்பம் கொள்ளுங்கள்.
பிறரை மதித்தல், அன்பான சொற்களைப் பயன்படுத்தல், கோபம் சினம் தவிர்த்தல், பிறருக்கு உதவுவது என்று நினைத்தல், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று பணி புரிதல் இதுவே எம் கொள்கை என்று நெஞ்சில் தட்டி சூளுரையுங்கள். நீங்களே எம் மண்ணின் நிர்வாகிகள், உற்பத்தியாளர்கள், தொழில் முயற்சியாளர்கள்.
ஆகையால் உங்களால் இந்த மண் பஞ்சம் போக்கும். புகழ் பெறும். இது நிச்சயம். கூடவே இன்னுமொன்று விவசாயத் துறையை வேண்டாம் என்று விரட்டி விடாதீர்கள். விவசாயத் துறைதான் எங்களை வாழவைப்பது.
ஆகையால் விவசாயத்திலும் உங்கள் முயற்சி யாண்மை வெற்றி பெறட்டும். உங்களால் இந்த மண்ணும் மக்களும் உங்கள் உறவுகளும் வாழட்டும்.