தன்னெழுச்சி கொள்ளும் தமிழினம் - கலாநிதி சேரமான்

keppapulavu relaces 02

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்குப் பின்னரான கடந்த எட்டாண்டு காலப்பகுதியில் என்றுமில்லாத அளவிற்குக் கடந்த சில வாரங்களாகத் தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்களால் தன்னெழுச்சியுடன் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த எட்டாண்டுகளில் தமிழீழ தாயக மக்களின் அரசியல் செயற்பாடுகளில் பெரும்பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்து வந்தது. இதிலிருந்து விதிவிலக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலும், காணாமல் போகச்செய்யப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டிலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், து.ரவிகரன், ம.க.சிவாஜிலிங்கம் போன்றோரின் அரசியல் செயற்பாடுகளும் அமைந்திருந்தன. இவை தவிர சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் அமைந்திருந்தன.keppapulavu relaces 02
ஆனால் கடந்த சில வாரங்களில் இவையெல்லாவற்றிற்கும் விதிவிலக்காகத் தமிழீழ தாயக மக்கள் தாமாகவே எழுச்சி கொண்டு அரசியல் செயற்பாடுகளில் களமிறங்கியிருக்கின்றனர். கோப்பாப்புலவு மக்களின் நிலமீட்புப் போராட்டத்தில் தொடங்கிய இந்தத் தன்னெழுச்சி கொண்ட மக்களின் அரசியல் செயற்பாடுகள், புதுக்குடியிருப்பு, வலிகாமம் வடக்கு என நீட்சி பெற்றிருப்பதோடு, ஓட்டுக்குள் ஒழிந்திருக்கும் ஆமை போன்று பதுங்கிக் கிடந்த பல அரசியல்வாதிகள் வெளியில் வந்து மீண்டும் அரசியல் பணிகளை முன்னெடுப்பதற்கும் வழிசமைத்திருக்கின்றது.
மறுபுறத்தில் புலம்பெயர் தேசங்களிலும் பரந்துபட்ட முறையில் கட்டமைப்பு ரீதியாகவும், தன்னெழுச்சியுடனும் மக்களால் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாசி மாதம் பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவாலும், அதன் உப அமைப்புக்களாலும் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தமிழர் தன்னாட்சியுரிமை பற்றிய மாநாடு, 28.02.2017 அன்று தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெற்ற மாநாடு, கடந்த 06.03.2017 அன்று ஜெனீவாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எழுச்சிப் பேரணி போன்றவை இவற்றுக்கான சில உதாரணங்கள் ஆகும்.Geneva Tamil Protest 2017 02
இவ்வாறு தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மக்களால் தன்னெழுச்சியுடனும், கட்டமைப்பு ரீதியாகவும் முன்னெடுக்கப்படும் அரசியல் செயற்பாடுகள், உலகிற்கும், தமிழர்களின் தலைமைகள் என்று உரிமை கோருவோருக்கும் இரண்டு செய்திகளை இடித்துரைப்பதாக அமைகின்றன. அதாவது, இனிவரும் காலங்களில் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் ஏகோபித்த சக்தியாக எந்தவொரு அரசியல் கட்சியோ, அன்றி அமைப்போ இருக்க முடியாது என்பதும், தமது உரிமைகளும், தமக்கான நீதியும் கிட்டும் வரை மக்களும் சரி, செயற்பாட்டாளர்களும் சரி ஓயப்போவதில்லை என்பதுமே அவையாகும்.
2009 வைகாசி 18உடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்டம் இடைநிறுத்தம் பெற்றதைத் தொடர்ந்து தமிழீழ தாயக மக்களின் ஏகோபித்த அரசியல் தலைமை என்ற உரிமை கோரலை இராஜவரோதயம் சம்பந்தரின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டது. ஆயிரமாயிரம் மானமாவீரர்களும், மக்களும் உயிர்த் தியாகம் செய்து முன்னெடுத்த தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமைப் போராட்டத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அதிகாரம் தனக்கும், தனது பட்டத்து இளவரசர் மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரனுக்கும், தமக்குப் பரிவட்டம் கட்டுவோருக்கும் மட்டுமே உரித்தானது என்ற இறுமாப்புடன் இதுகாறும் சம்பந்தர் நடந்து கொண்டார்.
சம்பந்தரின் ஏகோபித்த தலைமைத்துவ உரிமை கோரலுக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் சவாலாக அமைந்த பொழுதும்கூட, இவற்றை எல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாது, சிங்களத்தின் சுதந்திர தினத்தில் ‘சிறீலங்கா மாதா, நமோ, நமோ மாதா’ என்று சம்பந்தர் இராகம் பாடினார். சிங்களம் வழங்கிய எதிர்கட்சித் தலைவர் என்ற சிம்மாசனத்தில் ஓய்யாரமாகக் குந்தியிருந்து பலரது கண்களில் விரலை விட்டு ஆட்டினார்.
சம்பந்தரின் ஏகபோக தலைமைத்துவ உரிமை கோரலுக்கான சாவுமணி இப்பொழுது தமிழீழ தாயக மக்களால் அடிக்கப்படத் தொடங்கியுள்ளது. 2013 கார்த்திகை மாதம் யாழ்ப்பாணத்திற்கு முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் வருகை தந்த பொழுது நிகழ்ந்த காணாமல் போகச்செய்யப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்புப் போராட்டங்களும், அவ்வாறான போராட்டம் ஒன்றின் பொழுது போராட்டவாதிகளால் சம்பந்தர் நையப்புடைக்கப்படும் நிலை ஏற்பட்டதும், கடந்த ஆண்டு கார்த்திகை 27ஆம் நாளன்று தமிழீழ தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்கள் தன்னெழுச்சியுடன் சுடரேற்றியதும், இவ்வாறான சூழல் எழும் என்பதற்குக் கட்டியம்கூறுவதாகவே இருந்தன.
ஆனால் எதிர்பார்த்ததை விட வேகமாகத் தளிர்விடத் தொடங்கியிருக்கும் தமிழீழ தாயக மக்களின் எழுச்சி, சம்பந்தரையும், அவருக்குப் பரிவட்டம் கட்டுவோரையும் ஆட்டம் காண வைத்துள்ளது என்பதில் ஐயமில்லை.
மறுபுறத்தில் புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நிகரான தமிழர்களின் தலைமை தாமே என்று இதுகாறும் எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகளாரின் உலகத் தமிழர் பேரவையும், பிரித்தானிய தமிழர் பேரவையும் போட்டி போட்டுக் கொண்டு மேற்கொண்டு வந்த உரிமை கோரல்களையும் புலம்பெயர் தமிழ் மக்களின் கட்டமைப்பு ரீதியானதும், தன்னெழுச்சி கொண்டதுமான அரசியல் செயற்பாடுகள் தவிடுபொடியாக்கியுள்ளன என்றே கூறவேண்டும். அலிபாபாவும், நாற்பது திருடர்களும் அரசியல் செய்த கேலிக்கூத்துக் கதையாக விசுவநாதன் உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கனவுலகில் ஆட்சிசெய்யும் கும்பலினதும், அதன் மறுமுகமான தலைமைச் செயலகம் என்ற கும்பலினதும் நடவடிக்கைகள் அமைவதால், இவ்விடத்தில் அவற்றைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஈழத்தமிழர்களின் விடயத்தில் எவ்வாறான தீர்மானம் கொண்டு வரப்படும் என்பதை எவராலும் உறுதியாகக் கூறமுடியாது. அது சிறீலங்கா அரசாங்கத்திற்குக் கால அவகாசம் வழங்கும் தீர்மானமாகவும் அமையலாம். அல்லது அது 2015 புரட்டாதி மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நிலுவையில் உள்ள சரத்துக்களை அமுல்படுத்துமாறு சிறீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அமையலாம். எது எவ்வாறிருந்தாலும் சிறீலங்கா அரசாங்கத்தின் மீது எள்ளளவிற்கும் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நிகழ்ந்தேறும் மக்களின் அரசியல் செயற்பாடுகள் உணர்த்துகின்றன.
ஒருவேளை இவ்வாறான மக்களின் அரசியல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்று வைத்துக் கொள்வோம். நிச்சயமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உலகத் தமிழர் பேரவையும், பிரித்தானியத் தமிழர் பேரவையும் ஜெனீவா சென்று சிறீலங்கா அரசாங்கத்தின் தாளத்திற்கு ஆட்டம் போட, அதனையே தமிழீழ தாயக மக்களினதும், புலம்பெயர் தமிழர்களினதும் அரசியல் நிலைப்பாடாக முழு உலகமும் கருதியிருக்கும்.
நாம் முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகள் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டித் தருகின்றனவா? இல்லையா? என்பது முக்கியமல்ல. எமது அரசியல் செயற்பாடுகள் எமது எதிரிக்கும், உலகிற்கும் என்ன செய்தியை உணர்த்துகின்றன என்பதுதான் முக்கியம். நல்லாட்சி எனும் மாயமானைக் காண்பித்து ஈழத்தீவிலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழர்களை மயக்கமடைய வைத்திருப்பதாகச் சிங்களம் களிப்படைந்திருந்த வேளையில் மக்களின் அரசியல் செயற்பாடுகள் உத்வேகம் பெற்றுள்ளன.
அடக்குமுறை தொடரும் வரை போராட்டங்களும் தொடரும் என்பதுதான் இயங்கியல் நியதி. தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மீண்டும் உத்வேகம் பெற்றுள்ள மக்களின் அரசியல் செயற்பாடுகள், நல்லாட்சி என்ற மாயமானை ஏவி விட்டு சிங்களம் விரித்த வலைக்குள்; தமிழர்கள் வீழ்ந்து விடவில்லை என்பதை மட்டும் இடித்துரைப்பதாக அமையவில்லை. மாறாகத் தமிழ் மக்களுக்கு எதிரான சிங்களத்தின் அடக்குமுறை நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கின்றது என்பதையும், காலம் கனியும் பொழுது இதற்கு எதிராகக் களமிறங்கத் தமிழ் மக்கள் தயங்க மாட்டார்கள் என்பதையுமே உணர்த்துகின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila