சிறுபான்மை இன மக்கள் விவகாரங்களுக்கான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவின் இலங்கை தொடர்பிலான அறிக்கை குறித்து ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் எதிர்வரும் புதன்கிழமை விவாதம் நடைபெறவுள்ளது.
ஜெனிவாவில் கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 34ஆவது கூட்டத்தொடரின் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள அமர்வின் போதே உறுப்பு நாடுகளின் பங்கேற்புடன் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
இதன்போது இலங்கை தொடர்பான தனது அறிக்கையின் சுருக்கத்தை சிறுபான்மை இன மக்கள் விவகாரங்களுக்கான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா முன்வைக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளின் விவகாரம் தொடர்பாக தமது நிலைப்பாடுகளை அறிவிக்கவுள்ளன.
இந்த விவாதத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் ஜெனிவாவுக்கான வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இவ்விவகாரங்கள் தொடர்பிலான தனது நிலைப்பாட்டை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவிக்கவுள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டு, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என ஐ.நாவின் சிறுபான்மையின மக்கள் விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா அண்மையில் தெரிவித்திருந்தார்.
2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இலங்கையில் பயணம் செய்திருந்த சிறுபான்மை இன மக்கள் விவகாரங்களுக்கான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் இனம், மதம், மொழிசார் பிரச்சினைகள் குறித்து நேரடியாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.