உள்ளக விசாரணையை சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பின்றி முன்னெடுக்க உள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் நாம் இரண்டு வருடகால அவகாசத்தை ஐ.நா.விடம் கோரியிருந்தோம். குறித்த கால அவகாசம் எமக்கு கிடைத்துள்ளது. எனவே நாங்கள் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பின்றி எமது திட்டத்திற்கேற்பவே உள்ளக விசாரணையை முன்னெடுக்கவுள்ளோம்.
அத்துடன் சர்வதே நீதிபதிகள் பங்களிப்புக் குறித்த விடயம் இலங்கை தொடர்பான பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள ஒரு பரிந்துரை மட்டுமேயாகும். அதனை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்பதும் இல்லை. எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வை வழங்குவதே எமது நிலைப்பாடாகும். நாம் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.
அத்துடன் காணாமல் போனோருக்காக அலுவலகத்தை அமைத்து, அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்ற உண்மையைக் கண்டறிய வேண்டிய தேவை எமக்குள்ளது.
விசாரணைப் பொறிமுறைக்கு, சர்வதே நீதிபதிகளை உள்வாங்குவதற்கு எமது அரசியலமைப்பில் இடமில்லை. எனவே அரசியலமைப்பை மீறி சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த நாம் தயாராக இல்லை. எனவே நாங்கள் உள்ளக நீதிபதிகளைக் கொண்டே விசாரணைப் பொறிமுறையை முன்னெடுக்கவுள்ளோம்.
அடுத்ததாக இலங்கையில் ஜோசப் முகாம் என்னும் சித்திரவதை முகாம் இருந்ததாக ஜஸ்மீன் சூகா குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அதனால் தற்போது ஜஸ்மின் சூகாவிற்கு மீண்டுமொருமுறை இலங்கை வருமாறு அழைப்புவிடுக்கின்றோம். இங்கு வந்து எதுவிதமான தடைகளுமின்றி அனைத்து இடங்களையும் பார்வையிடலாம். இதன் மூலம் அவர் இங்கு சித்திரவதை முகாம் உள்ளதா என்பது பற்றி அறிந்து கொள்ளமுடியுமென என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.