விடுதலைப் புலிகளுக்கெதிரான போரை முன்னின்று வழிநடாத்திய இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகவிருக்கிறார்.
கடந்த 2010 ஆண்டுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகப் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த இலங்கையில் ஐந்து நட்சத்திர ஜெனரல் தரத்தைக்கொண்ட ஒரேயொரு இராணுவத் தளபதியான பொன்சேகா, அதன்பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
ஆனால் தேர்தல் முடிந்ததுமே ஊழல், மோசடி குற்றச்சாட்டின்பேரில் இராணுவ நீதிமன்றின்முன் நிறுத்தப்பட்ட இவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இதன்காரணமாக இவர் தனது சிவில் உரிமையை இழந்தது மட்டுமன்றி, ஜெனரல் பதவியுள்ளிட்ட இராணுவப் பட்டங்கள், விருதுகள் அனைத்தையும் இழந்ததுடன், இவரது பெயர் கூட இராணுவ பதிவேடுகளிலிருந்து நீக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சரத்பொன்சேகா பறிகொடுத்ததுடன், இதனால் அவருக்கு அடுத்ததாக அவரது ஜனநாயகக் கட்சியின் சார்பில் வாக்குகளைப் பெற்றிருந்த கெட்டகொட பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி இடம்பெற்ற தேர்தலுக்கு முன்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்ட ஜனநாயகக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்தே சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் எனப் புதிய ஆளுங்கட்சி வட்டாரங்கள் கொழும்பு மிரருக்குத் தெரிவித்தன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுடன் தேர்தல் ஒப்பந்தம் செய்துகொண்ட பொன்சேகாவுக்கு, உடன்படிக்கையின் பிரகாரம் பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் மீள கையளிக்க புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கமைய சரத்பொன்சேகாவின் பிரஜாவுரிமையை மீள கையளிக்கப்படவுள்ளதுடன், இராணுவ ஜெனரல் அந்தஸ்த்தும் மீள வழங்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சரத்பொன்சேகா ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டும் முகமாக அவருக்கு பீல்ட் மார்சல் என்ற இராணுவத்தின் அதி உயர் அந்தஸ்த்தையும் வழங்கி, புதிய ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமிக்கப்பட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், புதிய கூட்டணி அரசாங்கமும் தீர்மானித்துள்ளதாக ஆளும்கட்சி வட்டாரங்கள் கொழும்பு மிரருக்குத் தெரிவித்தன.
அநேகமாக, எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடும்போது இவர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகலாம் என்றும் அந்த வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டன.
Add Comments