ஆனால் மறுநாளே சுமந்திரன் இதற்கு எதிராக தெளிவாகவும் தீவிரமாகவும் செயற்படத் தொடங்கினார். இந்தப் 11 பேரில் மூவர் மூளைச் சலவை செய்து ஏமாற்றிக் கையெழுத்திடப்பட்டதாக அறிக்கை விட்டார். அதன்படி மூவர் கையெழுத்திடவில்லை என்றும் கூறினார். ஆனால் இரண்டு நாட்களில் அதாவது 9ஆம் தேதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது கையெழுத்திடவில்லை என்று சுமந்திரன் கூறிய மூவரில் “டெலோ” உறுப்பினரான கோடீஸ்வரன் தான் கையெழுத்திட்டதாக சபையில் அறிவித்தார். அடுத்த இரு உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராஜாவும், சிறிநேசனும் தலையைக் கவிழ்ந்தபடி இருந்தார்கள். எனவே அவர்கள் தங்கள் சம்மதத்தை விலக்கிக் கொண்டார்கள் என்பதே அர்த்தம் என்று கொண்டாலும் மொத்தம் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 9 உறுப்பினர்கள் காலநீட்டிப்பிற்கு எதிர்ப்பு என்ற வகையில் 2 மேலதிக வாக்குக்களினால் காலநீட்டிப்பிற்கு எதிரான நிலைப்பாடு முன்னின்றது.
இந்நிலையில் சுமந்திரன் – சம்பந்தன் ஆகிய இருவரும் சதிகாரத்தனமாக ஒரு புதிய அறிவித்தலை சபையில் வெளியிட்டனர். அதாவது காலநீட்டிப்பிற்கு எதிராக கையெழுத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும்தான் தேசிய கூட்டமைப்பு என்றில்லை. எனவே மாகாணசபை உறுப்பினர்களையும் இணைத்து இதனை தீர்மானிக்கலாம் என்று கூட்டத்தை மறுநாளுக்கு ஒத்திவைத்தனர்.
அடுத்து 11ஆம் தேதி சனிக்கிழமை அவசர அவசரமாக தமக்கு ஆதரவான மாகாணசபை உறுப்பினர்களையும் உள்ளடக்கிய கூட்டத்தைக் கூட்டினர். அந்த 48 மணித்தியால இடைவெளிக்குள் அவர்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை சுமந்திரன் கூறிய வார்த்தையில் மூளைச்சலவை செய்வதில் வெற்றிபெற்றனர். வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஒருவரைத் தவிர ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சனிக்கிழமைக் கூட்டத்தில் மௌனிகளாயினர்.
வுpயாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதனும், தர்மலிங்கம் சித்தார்த்தனும் தாம் காலநீட்டிப்பு யோசனையை எதிர்ப்பதாக தமது நிலைப்பாட்டை தெளிவுற வெளியிட்டனர். இவ்விரு நிலைப்பாட்டையும் கண்டு அப்போது அஞ்சிய சுமந்திரன் மூவர் கையெழுத்திடவில்லை என்ற தனது கருத்தை பின்பு மேலும் பேசாது கைவிட்டு கூட்டத்தை ஒத்திவைத்தார். இதன்பின்பு அவர் சிறிதரன் உட்பட்ட அனைவருக்கும் 48 மணிநேரத்தில் மூளைச் சலவை செய்வதில் வெற்றி பெற்றார்.
சனிக்கிழமை கூடிய கூட்டத்தில் சுமந்திரனும், சம்பந்தனும் அரசாங்கத்திற்கு எதிராக போர்க் கொடி தூக்குவோர் போல தங்கள் சுருதியை மாற்றிப் பேசி இனி கண்டிப்பான நிபந்தனைகளுடன் ஒரு குறுகிய கால காலஅவகாசம் அரசாங்கத்திற்குக் கொடுப்போம் என்று தங்கள் பேச்சை முடித்தனர். இக்கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டாளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் சதிகார நோக்குடன் அழைக்கப்பட்டிருக்கவில்லை. அங்கு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் மட்டும் எழுந்து காலநீட்டிப்பு என்ற சுமந்திரன், சம்பந்தனின் திட்டத்திற்கு எதிராக பேசினார். மாவை சேனாதி வாய்திறக்காது மௌனமாக இருந்தார். இறுதியில் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்படுவதாக சம்பந்தனும், சுமந்திரனும் கூறி கூட்டத்தை முடித்தனர். அந்த கூட்டத்தில் வாக்கெடுப்பு எதுவும் நிகழவில்லை. அதேவேளை சிவசக்தி ஆனந்தனைத் தவிர ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மௌனமாக இருந்தனர். இப்படியொரு புதிய நாடாகத்தை சுமந்திரன் அரங்கேற்றி தங்கள் திட்டத்தில் வெற்றி பெற்றனர்.
காலநீட்டிப்பை எதிர்க்கும் மனுவில் கையெழுத்திட்ட 11 பேரில் இருவர் பின்வாங்கிவிட்டனர் என்று எடுத்துக் கொண்டாலும் 9 பேர் அதை மறுக்காமல் இருந்தது மட்டுமன்றி வியாழக்கிழமை கூட்டத்தில் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூவரும் காலநீட்டிப்பு வழங்கக்கூடாது என்று கூறி ஆக்ரோஷமாக பேசியிருந்தனர். ஆனால் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இவர்களும் மௌனிகளாயினர். அந்த 48 மணிநேர இடைவெளியில் இவர்களுக்கு ஏற்பட்ட மௌனத்திற்கு என்ன காரணம் என்பது கண்டறியப்பட வேண்டிய விடயமாகும்.
எப்படியோ தமிழ்மக்களை 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் காட்டிக் கொடுத்துவிட்டனர் என்பதே உண்மை. இப்படிப்பட்ட ஒரு அநீதியான நிலைப்பாட்டை இவர்கள் ஏன் எடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு இவர்கள் ஒருபோதும் பதில் சொல்லப்போவதில்லை என்பதுமட்டும் உண்மை.
இங்கு சுமந்திரனுக்கும் – ரணிலுக்கும் இடையில் ஆரம்பகாலத்தில் இருந்தே ஒரு சதிக்காரத் திட்டம் இருந்துள்ளது. ரணிலின் கையாளாகவே சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் நுழைந்தார். சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் கொண்டுவருவதற்கு சம்பந்தன் ஊடாக ரணில் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ஆரம்பத்தில் ஐதேகாவின் சார்பில் சுமந்திரன் கொழும்பில் நாடாளுமன்றத் தேர்தலின் போது போட்டியிடுவதாக முடிவிருந்தது. இதன்பின்பு அத்திட்டத்தை மாற்றி சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் நுழையவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் கிளையாக மாற்றிவிடுவதென சுமந்திரனம், ரணிலும் முடிவெடுத்தனர். இத்தகைய திட்டத்துடன் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் புகுத்தப்பட்டார்.
சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் கொண்டுவந்த சம்பந்தன் சுமந்திரனைப் பற்றி வெகுவாக புகழ்ந்து பேசினார். அவர் ஆங்கில அறிவுள்ளவர் என்றும், வல்லவர் என்றும், நல்லவர் என்றும் அவர் தமிழ் மக்களுக்கு இந்நேரத்தில் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றும் கூறினார். ஏனைய உறுப்பினர்கள் ஆங்கில அறிவு இல்லாதவர்கள் என்ற உணர்வு மேலோங்கச் செய்யப்பட்டது.
இவ்வாறு ஆங்கிலம் தெரிந்தவர், நிபுணர், வல்லவர் என்ற அடைமொழிகளுடன் சுமந்திரன் கட்சிக்குள் தலையெடுக்கத் தொடங்கினார். இவ்வாறு தலையெடுத்த சுமந்திரன் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேரும் காலநீட்டிப்பிற்கு எதிராக கையெழுத்திட்ட நிலையில் பருத்தித்துறையில் மக்கள் மத்தியில் 8ஆம் தேதி புதன் கிழமை பேசும் போது கையெழுத்திட்ட 11 பேரும் முட்டாள்கள் என்று பேசினார்.
அடுத்து மறுநாள் வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரையும் கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றைய கட்சித் தலைவர்கள், செயலாளர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய கூட்டத்தில் தர்மலிங்கம் சித்தார்த்தன் பேசுகையில் கையெழுத்திட்ட 11 பேரும் முட்டாள்கள் என்றால் அவர்களுக்கு வாக்களித்த மக்களும் முட்டாள் என்றுதான் அர்த்தம் என்று கோபத்துடன் பேசினார்.
இதைக் கண்ட சம்பந்தன் தீடீரென சுமந்திரனை நோக்கி பின்வருமாறு நாடகபாணியில் பேசினார். அதாவது “நீர் நல்லவன், வல்லவன் ஆனால் கண்டபடி பேசி என்னை சிக்கலுக்குள் உள்ளாக்குகிறீர்” இப்படி அடிக்கிறது போல அடிக்க சுமந்திரன் தலையைக் கவிழ்ந்தபடி அதற்கு தான் பணிவது போல நடித்தார். இந்த நாடகத்தைக் கண்டு சபையில் உள்ளோர் சம்பந்தனின் நல்மனம் கண்டு அசந்துபோய்விட்டனர். இவ்வாறு அசந்துபோய் இருக்கும் போது சுமந்திரன் கூட்டத்தை ஒத்திவைத்து 48 மணித்தியாலத்திற்குள் மூளைச்சலவை செய்யும் தனது திட்டத்தில் வெற்றி பெற்றார்.
இப்போது பிரச்சனை சுமந்திரனை குறைகூறுவதைவிட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நோக்கி விரல் நீட்டுவதுதான். அதாவது எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை முட்டாள்கள் என்று சுமந்திரன் சொன்னாரோ அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது சுமந்திரனை வால்பிடிக்கத் தொடங்கிவிட்ட விந்தையை எப்படிப் புரிந்து கொள்வது.
இப்போதைய பிரச்சனை சிவசக்தி ஆனந்தன் ஒருவரைத் தவிர ஏனைய 15 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே குப்பைக்கூடைக்குள் தூக்கிப் போட வேண்டியதுதான். சிறிதரன் வெளியே ஒரு வேடமும், உள்ளே இன்னொரு வேடமு; தரிக்கிறார் என்று பரவலாக பலரும் பேசத் தொடங்கியுள்ளனர்.
இனி தமிழ் மக்களின் கதி என்ன? இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அனைவரும் ஐதேகாவின் வடக்கு-கிழக்கு கிளை உறுப்பினர்களாகிவிட்டனா. இந்நிலையில் தமிழ் மக்கள் நேரடியான ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்காது. ஆனால் அதற்குத் தலைதாங்குவதற்கு பலமான சக்திகள் தேவை. ஆதை எப்படி ஈட்டுவது. இதனை களநிலையிற்தான் சாதிக்க வேண்டும். எனவே இது தொடர்பாக களநிலையில் அரசியலை மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.