மாற்றுத் தலைமை பற்றி இப்போது சிந்திப்பது என்பதற்கு அப்பால், தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிச் சிந்திப்பதே பொருத்தமானது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இது அவரின் பெருந்தன்மை எனலாம். தனக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இளைஞர்கள் தம்பக்கம் நிற்கின்றனர். தமிழரசுக் கட்சி தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து எனக்குத் துரோகம் இழைத்தது.
தமிழ் மக்கள் கடையடைப்புச் செய்து, ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியதனால்தான் இன்று நான் முதலமைச்சராக இருக்கிறேன்.
எனவே மாற்றுத் தலைமை பற்றி நான் சிந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வோம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இடத்தில் எவர் இருந்தாலும் நினைக்கக்கூடிய சூழ் நிலையில்,
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மாற்றுத் தலைமை என்பதற்கு அப்பால்; தமிழ் மக்களின் பிரச்சினைக்கே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசியல் ரீதியில் முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
இச்சூழ்நிலையில் தனிப்பட்ட குரோதங்களை, முரண்பாடுகளை வைத்து பிரிந்து செல்வதென்பது பொருத்தமாக அமையாது என்று கூறியுள்ளார் எனில்,
அவரிடம் இருக்கக்கூடிய பெருந்தன்மை எத்துணை உயர்வானது என்பதை தமிழரசுக் கட்சி இனிமேலாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
பொதுவில் நாம் அனைவரும் தமிழினத்தின் உரிமை என்ற விடயத்தில் ஒன்றுபட வேண்டும். ஒற்றுமைப்பட வேண்டும். குரோதங்களை மறக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் மக்கள் தமிழ் அரசியல் தலைமையை நம்பியிருக்கிறார்கள் என்பதை சதா நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
ஆனால், தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் பாதை மாறிப் பயணிப்பதை நாம் அவதானிக்க முடிகிறது. இச்செயல் மிகவும் அபத்தமானது.
எங்கள் மக்கள் யுத்தத்தின் கொடூரத்தால் இழந்தவை கொஞ்சமல்ல. யுத்தம் பிள்ளைகளின், பெற்றவர்களின், குடும்பத் தலைவர்களின் தலைவிகளின் உயிர்களைக் காவு கொண்டு பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை நிர்மூலமாக்கியுள்ளது.
தாயையும் தந்தையையும் போரில் பலி கொடுத்த சிறார்கள் ஒரு கணப்பொழுதில் அநா தைகளாகி காப்பகங்களில் தங்கியிருக்கின்றனர். அந்தப் பிள்ளைகளின் பரிதாப வாழ்க்கையை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
ஆகையால், இனிமேலாவது தமிழ் அரசியல் தலைமை ஒன்றுபட்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுடன் யுத்தப் பாதிப்பை சதா அனுபவித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு ஏதோவொரு வகையில் உதவுகரமாக இருக்க வேண்டும்.
இதைவிட்டு எங்களுக்குள் நாம் முரண்பட்டுக் கொண்டால் நிலைமை என்ன என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள்.
மக்கள் செல்வாக்கு குறைகிறது என்பதற்காக உங்களை மாற்றாமல் மக்களுக்காக உங்களை மாற்றுங்கள்.
தூய சிந்தையோடும் தமிழ்ப் பற்றோடும் உங்கள் பணிகளைச் செய்யுங்கள். இறைவன் நிச்சயம் உதவுவான்.