கொக்கிளாயில் தமிழ்- சிங்கள மீனவர்களுக்கிடையில் முறுகல்!


முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் இன்று காலை முறுகல் நிலை  ஏற்பட்டது. முகத்துவாரம் பகுதியை அண்டிய கடலில் மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு தொடர்பான அளவீட்டின் போதே, இந்த அமைதியின்மை ஏற்பட்டது.
முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் இன்று காலை முறுகல் நிலை ஏற்பட்டது. முகத்துவாரம் பகுதியை அண்டிய கடலில் மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு தொடர்பான அளவீட்டின் போதே, இந்த அமைதியின்மை ஏற்பட்டது.
           
கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தினால் கொக்கிளாய் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த தமிழ் மீனவர்கள் இடம்பெயர்ந்த நிலையில்,தமிழர்களின் கரைவலைப்பாடுகளை நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த சிங்கள மீனவர்கள், ஆக்கிரமித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி இருதரப்பினருக்குமிடையில் முறுகல் நிலைமை தோன்றுவது வழக்கம்.
மீள்குடியேற்றத்தின் பின்னர் தமக்கான கரைவலைப்பாடு உரிமையைப் பெற்றுத் தருமாறு கோரி, தமிழ் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கை அதிகாரிகள் மட்டத்தில் தீர்வுகள் வழங்கப்படாத நிலையில், இது தொடர்பான விடயம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய கரைவலைப்பாட்டை அளவிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த அளவீட்டுப் பணிகளின் போது, கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி பகுதி அதிகாரிகள், முல்லைத்தீவு நீரியல்வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கொழும்பில் இருந்து வந்த நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது, கொழும்பில் இருந்து வந்த நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள முகத்துவாரம் அமைந்துள்ள தலைப்பாடு என்ற பகுதியில் இருந்து 300 மீற்றருக்கு அப்பால் இருந்தே அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து அளவீட்டு பணிகளை மேற்கொண்டிருந்தனர். இதன் காரணமாக அளவீடு இடம்பெறும் பகுதியில் கடமைக்காக பிரசன்னமாகியிருந்த கரைதுறைப்பற்று காணிப்பகுதி அதிகாரிகள் கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் பக்கச்சார்பான வகையில் முகத்துவாரம் அமைந்துள்ள தலைப்பாடு பகுதியை விட்டு அதிலிருந்து 300 மீற்றருக்கு அப்பால் அளவீட்டை ஆரம்பிக்கும் செயற்பாடானது நீதிமன்றின் உத்தரவுக்கு முரணானது என தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தனர்.
ஏற்கனவே, தமது வசமுள்ள தலைப்பாடு என்ற பகுதியில் இருந்து கரைவலைப்பாட்டுக்கான அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு சிங்கள மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். எனினும், தமிழ் மீனவர்கள் தலைப்பாடு என்ற பகுதியில் இருந்தே அளவீடு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில், ஏற்கனவே நிலஅளவைத் திணைக்களம் அளவீடு செய்து சரியான இடத்தை தமக்கு கொடுத்ததாக தமிழ் மீனவர்கள் கூறியுள்ள நிலையில், இன்றைய தினம் அளவீடு செய்யும் போது, சிங்கள தமிழ் மீனவர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila