தமிழ்ப் புத்திஜீவிகள் இன்னும் மெளனம் காக்கலாமோ!


தமிழர்களின் பிரச்சினைக்கு இலங்கை ஆட்சியாளர்கள் எவரும் எதுவும் தரமாட்டார்கள் என்பது சர்வ நிச்சயம்.

ஐ.நா சபைத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு இரண்டு வருட கால அவகாசம் பெற்றுக் கொண்டதே காலம் தாழ்த்தும் வேலை என்பது தெள்ளத்தெளிவு.

நிலைமை இதுவாக இருக்கையில், தமிழ்ப் புத்திஜீவிகள் தொடர்ந்தும் மெளனம் காப்பது அவ்வளவு நல்லதல்ல.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கூட்டமைப்பு என்ற பதத்தை முற்றுமுழுதாக இழந்து விட்டது.
மாறாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இருவர் நடத்துகின்ற ஒரு கட்சியாகவே அதனைப் பார்க்க முடிகின்றது.

இந்நிலையில் அரசுடன் இணைந்து போதல்  என்ற பெயரில் தமிழ் மக்களின் உரிமைகள் விலைபேசப்பட்டு விட்டன.

அரசுடன் பகைக்க முடியாது - எதிர்க்க இயலாது என்பது ஏற்புடையது. அதற்காக ஆட்சியாளர்களின் காலில் வீழ்ந்து மண்டியிட்டு உரிமை கேட்க வேண்டிய தேவை இல்லை என்பது நம் கருத்து.

தமிழினம் இந்த மண்ணில் ஆயுதப் போராட்டம் நடத்திய இனம். இந்த நாட்டின் எண்பது சதவீதமான மக்கள் சிங்களவர்களாக இருந்த போதிலும் பன்னிரெண்டு சதவீதமான தமிழர்கள் தங்கள் தியாகத்தால் இந்த நாட்டைத் திகைக்க வைத்தவர்கள். ஏன்? நாட்டை மட்டுமல்ல இந்த உலகத்தையே இலங்கை மீது திசை திருப்பியவர்கள்.

எனினும் கால சூழ்நிலைகளும் கூட இருந்தவர்களின் குழிபறிப்புக்களும் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்கச் செய்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்க வேண்டும் எனக் கூறிய இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் அதனூடாக தமிழ் மக்களை வஞ்சித்தனர். புலிகளை அழிப்பதற்கான போர் என்பதனூடு தமிழின அழிப்பைச் செய்தனர்.

இவையயல்லாம் நடந்தும் நமக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்றால், அதற்கு இலங்கை அரசுதான் காரணம் என்று கூறுவது முற்றுமுழுதான உண்மையல்ல.

மாறாக தமிழர்களின் அரசியல் தலைமையின் இனப்பற்றற்ற போக்கும் தமிழ்ப் புத்திஜீவிகளின் பொறுப்பற்ற நிலைப்பாடும் இதில் அதிகூடிய காரணமாக அமைகிறது எனலாம்.

வன்னிப் போரில் தமிழ் மக்கள் சந்தித்த அவலங்கள் கொஞ்சமல்ல. இருந்தும் நம் தமிழ்ப் புத்திஜீவிகள் நமக்கேன் இஃது என்றவாறு நாமுண்டு நம் குடும்பம் உண்டென்பதாக வாழப்பழகிக் கொண்டனர். இதன் விளைவுதான் தமிழினம் இக்கதிக்கு ஆளாகக் காரணமாயிற்று.

தமிழினத்தின் ஒட்டுமொத்தப் புத்திஜீவி களும் ஒன்றுசேர்ந்து இப்படித்தான் தமிழ் அரசியல் தலைமை செயற்பட வேண்டுமெனக் கூறியிருந்தால், இன்றைக்கு கால அவகாசம் என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்க மாட்டாது. இப்போது என்னவாயிற்று என்பது தெரிந்த விடயமே. 

எனவே தமிழ்ப் புத்திஜீவிகள் உடனடியாக ஒன்றுசேர்ந்து, எம் இனத்துக்கு ஏற்படக் கூடிய நிட்டூரத்தை தடுக்க வேண்டும். புத்திஜீவிகளின் ஒன்றிணைவு என்பது பகுதி பகுதியானதல்ல. 

எங்கள் இனத்துக்கு ஏற்பட்ட நாசகாரத்துக்கு இதுவும் ஒரு காரணம். புத்திஜீவிகள் சிலர் தாம் சார்ந்த மதக் குழுக்களாக இணை ந்து தமக்கும் தமது குழுவுக்கும் தாம் சார்ந்த மதப் பிரிவுக்கும் ஏற்றாற்போல செயற்பட்டனர். அறிக்கை விட்டனர். இதனால் தமிழினம் பெரும் பாதிப்பைச் சந்தித்தது.

ஆகவே இனியும் இவ்வாறான குழுமக் கூட்டம் என்பதை விடுத்து ஒட்டுமொத்த தமிழ்ப் புத்திஜீவிகளும் ஒன்றுசேர்ந்து தமிழினத்துக்கு  நேரவுள்ள பெரும் பாதிப்பை தடுக்க வேண்டும். அதற்கு வியூகம் அமைக்க வேண்டும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila