பிரித்தானிய அரசிடம் இருந்த இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர், 1958களில் இருந்து ஆரம்பித்த பெருமெடுப்பிலான தமிழின அழிப்பானது 2009களில் மனிதாபிமானத்திற்கான நடவடிக்கைகள் என பெயரிட்டு சிங்கள அரசாங்கம் முன்னெடுத்த வன்னிப் படுகொலைகளுடன் உச்சக் கட்டத்தை எட்டி நின்றது.
1983களில் இருந்து சிங்கள பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தமிழ் இனப்படுகொலைகள் தமிழ் பேசும் மக்களை தற்காப்பு யுத்தம் ஒன்றை முன்னெடுக்கும் நிலையை நோக்கித் தள்ளியது. அப்போராட்டத்தின் அரசியல் நியாயம் வன்னியில் இலட்சக் கணக்கான மக்களையும் போராளிகளையும் அழித்து சிங்கள பௌத்த அதிகாரவர்க்கத்தாலும், உலகின் ஏகபோக அரசுகளாலும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது.
முழுத் தமிழ்ப் பேசும் மக்களதும் அடிப்படை ஜனநாயக உரிமையான சுய நிர்ணைய உரிமை, உலகின் வல்லரசுகள் என மார்த்தட்டிக்கொள்ளும் கொலை வெறிகொண்ட ஏகாதிபத்திய அரசுகளாலும் அதன் உள்ளூர் பிரதிநிதிகளான சிங்கள பௌத்த அதிகாரவர்க்கத்தாலும் வன்னி நிலப்பரப்பின் சிறிய மூலையில் இரத்தமும் சதையுமாக அழித்துத் துவம்சம் செய்யப்பட்டது.
வன்னியில் அழிக்கப்பட்டது மனித குலத்தின் ஒரு பகுதியும் அதனை மீட்கப் போராடிய போராளிகளும் மட்டுமல்ல, அவற்றுடன் சேர்த்து தமிழ் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான நியாயமும் தான் அழித்தொழிக்கப்பட்டது.
உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் ஒரு மூலையில் வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உலகின் ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஏகோபித்த ஆசியுடன் ஆதரவுடனும் இலங்கை பேரினவாத அரசு எக்காளமிட்டுக் கோரதாண்டவமாடிய இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இன அழிப்பான வன்னி மனிதப் படுகொலைகள் நடத்தப்பட்டு இன்று ஏழாவது ஆண்டு முடிவடைந்துள்ளது.
தமிழர்களைக் பொறுத்தவரையில் இலங்கையில் இதற்கு முன்னர் ஆட்சி பீடத்தில் இருந்த ஆட்சியாளர்களை விட மேற்குலக நாடுகளின் அனுசரணையுடன் அரசோச்சிக் கொண்டிருக்கும் தற்போதைய நல்லாட்சிக் காலமென்பது அபாயகரமானதாகும்.
இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் போன்று வெளிப்படையாக தமிழின அழிப்பினை முன்னெடுக்காமல் மிகவும் தந்திரோபாயகரமான முறையில் அதனை மேற்கொண்டு வருகிறது.
தாயகத்தில் தற்போது நடைபெற்றுவரும் நில அபகரிப்புக்கள், அரச அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள், புனர் வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னை நாள் விடுதலைப் புலிப் போராளிகளின் கைதுகள், தமிழர் தாயகப்பகுதியில் அதிகரிக்கும் சிங்கள முதலீடுகள், தென்னிலங்கையினைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான அதிகரித்த வேலை வாய்ப்புக்கள் மற்றும் திட்டமிடப்பட்டவகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் போதைப் பொருள் பாவனை மற்றும் கலாசாரப் பிறழ்வுகள் போன்ற எத்தனையோ விடயங்களை கட்டுப்பாடற்ற வகையில் முன்னெடுத்து தமிழ்த்தேசிய இனத்தை வேரறுக்கும் நிலையினை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கி வருகின்றது.
மேலும், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களிற்கான அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ளமுடியும் என அரச தரப்பிலிருந்து சொல்லப்பட்ட செய்திகள், மெது மெதுவாக தமிழ் மக்களின் மனக் காயங்களிற்கு மருந்திட்டு அவற்றை வெல்வது போன்ற மாயையினையும் அரசாங்கம் மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றது. இனி வரும் காலங்களில் மாவீரர் தினத்தையும் தமிழர்கள் அனுஸ்டிக்கலாம் என்று ஒரு அறிவித்தல் வருமாயினும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தற்போதைய அரசாங்கத்தின் மேற்படி மனப்பாங்கு எதனை நோக்கி வழி நடத்துகின்றது என்பதை இங்குள்ள மக்களும் மக்கள் பிரதி நிதிகளும் நன்றாகவே அறிந்துள்ள போதிலும் இதனைத் தடுத்து நிறுத்தவோ குறைந்த பட்சம் எதிர்த்துக் குரல் கொடுக்கவோ முடியாத நிலைமைதான் காணப்படுகிறது.
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனக் கருதிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சித் தலைமையினைக் கைப்பற்றிக் கொண்டு ஏறத்தாழ ஒரு வகையான இணக்க அரசியலை மேற்கொண்டு வருவதால் அவர்களால் தமிழ் மக்களது சுய நிர்ணய உரிமைக் கோரிக்கை தொடர்பில் வாய் திறக்க முடியாத நிலைமையே காணப்படுகிறது. ஏனைய அரசியல் தரப்புகள் கூட எமது போராட்டத்தின் நியாயத்தினை நசுக்குவதற்கு உத்வேகம் கொண்டிருந்த சர்வதேச சமூகத்தின் கைகளில் எமது பிரச்சனையினை ஒப்படைத்து விட்டு எமக்கான தீர்வு அங்கிருந்து வந்து விடும் என்ற தாங்களும் நம்புவதோடு மக்களையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர் என்பது கண்கூடு.
இவ்வாறான சூழல் ஒன்றில் மிக அவதானமாகவும், நிதானமாகவும் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க வேண்டிய கடப்பாட்டில் தமிழ்ப்பேசும் மக்களின் தலைமைகள் உள்ளன.
நாளைய சந்ததியின் சுதந்திரத்தையும் விடுதலையையும் உறுதிப்படுத்தும் இன்றைய செயற்பாடுகள் குவியப்படுத்தப்பட வேண்டும். இந்தப் பின்புலத்தில் சுய நிர்ணைய உரிமைக்கான குரல்கள் மீண்டும் எழுச்சி பெறுவது மகிழ்ச்சிக்குரியதே.
சுய நிர்ணைய உரிமை என்பது, ஒரு தேசிய இனம் விரும்பினால் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான ஜனநாயக உரிமை. அடிப்படையில் சுய நிர்ணைய உரிமையின் நோக்கம் பிரிந்து செல்வதல்ல. அந்த உரிமை தேசிய இனங்கள் விரும்பினால் ஜனநாயக பூர்வமாக உள்ளக வாக்கெடுப்பின் அடிப்படையில் அது பிரிந்து செல்லலாம். அன்றி இணைந்து பெருமதேசிய இனத்துடன் கூட்டாட்சி நடத்த விரும்பினால் அதனையும் மேற்கொள்ளலாம்.
இதனால் தான் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை பிரிவினைவாதம் அல்ல! இலங்கை அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தச்சட்டப்படி பிரிவினைக் கோரிக்கையும் பிரிவினைவாதமும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் சுய நிர்ணைய உரிமை தடைசெய்யப்படவில்லை.
ஐக்கிய நாடுகள் சபை உலகில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணைய உரிமை உண்டு என்கிறது. அது தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என்கிறது. அது எந்த நாட்டிலும் தடைக்கு உட்படுத்த முடியாத ஒன்று.
ஆனால் இன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் சுய நிர்ணைய உரிமை கோரும் அடிப்படை ஜனநாயகக் கோரிக்கையை முன்வைக்கத் அஞ்சுவது வேடிக்கையானது. அதி உச்ச கோரிக்கையாக சமஷ்டியையே முன்வைக்கின்றனர். நீங்கள் சுய நிர்ணைய உரிமையை வழங்குங்கள் விரும்பினால் நாங்கள் இணைந்திருப்போம் அன்றெனின் பிரிந்து செல்வோம் என இலங்கை அரசைக் கோருவதற்குத் தயங்குகின்றன.
இதன் மறுபக்கத்தில் சுய நிர்ணைய உரிமைக்குப் பதிலாக பிரிந்து செல்வதை மட்டுமே ஒரே தீர்வாக முன்வைத்த முதலாவது தீர்மானம் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணியால் முன்வைக்கப்பட்ட வட்டுகோட்டைத் தீர்மானமாகும்.
அன்றைய சூழலில் அதற்கான நியாயங்கள் என்ன என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவது எனது நோக்கமல்ல. இன்றைய சூழலில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானது உலகம் முழுவதும் பிரிவினைவாதமாகக் கருதப்படும் அபாயம் காணப்படுகிறது என்பதை நிராகரிக்க முடியாது, வட கிழக்கில் வாழும் மக்கள் மத்தியிலிருந்து மட்டுமல்ல உலகம் முழுவதும் பரந்துவாழும் ஜனநாயக வாதிகள் மத்தியிலும் அது பிரிவினைவாதமாகக் கருதப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்பதை நிராகரிக்க முடியாது!
ஆனால், உலகம் நிராகரிக்க முடியாத சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையை மக்கள் நிராகரிக்க மாட்டார்கள். உலகம் அதனை நிராகரிப்பதற்கான காரணங்களைக் கூறமுடியாது.
ஆகவே, வட்டுக்கோட்டைத் தீர்மானம் சுய நிர்ணைய உரிமையின் உள்ளார்ந்த அர்த்தங்களின் அடிப்படையில் செழுமைப்படுத்தப்பட்டு மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளோடு இணைத்து புதிய அரசியலாக்கப்பட வேண்டும். விலையற்ற ஈகங்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்த மக்களுக்கு அவர்கள் விருப்பப்படாத தீர்வைத் திணிப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்துத் தரப்பினரதும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.
எங்களது தலைவிதியினை நிர்ணயித்துக் கொள்வதற்கான உரிமை எங்களிடம் உள்ளது என்ற உண்மை அனைத்து மக்களிடமும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதன் அடிப்படையில் சுய நிர்ணய அடிப்படையில் பிரிந்து செல்வதா இணைந்து வாழ்வதா என்ற முடிவை எம் மக்களே தீர்மானிக்கவேண்டும்.
வெறும் எழுத்திலும் பேச்சிலும் காணப்படும் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு ஜனநாயக அடிப்படையில் செயல் வடிவம் கொடுக்கபடுவதனூடாக அதனை எட்டமுடியும். அதற்காக தளத்திலும் புலத்திலும் இருக்கும் தமிழர் நலன் சார் அனைத்து அமைப்புக்களும் தமக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து பொதுவான இலக்கினை நோக்கிப் பயணிக்க வேண்டும்.