மகிந்த ராஜபக்ச­ தரப்புக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும்


இராஜதந்திரம் என்பது தனித்து குறுகிய வெற்றிகளையும் குறுங்கால நலன்களையும் கொண்டதாக இரு ந்தால் அதனால் எந்தப் பிரயோசனமும் ஏற்படமாட்டாது.

அரசியல் இராஜதந்திரம் என்பது எப்போதும் முழுமையான - நிரந்தரமான வெற்றிக்கு வித்திட வேண்டும்.
இன்றைய அரசியல் சூழ்நிலை என்பது தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டதென்றும் தமிழர்களின் தவறான முடிவு இலங்கை ஆட்சியாளர்களுக்கு சர்வதேச ஆதரவுக்கு வழிவகுத்தது என்றும் விமர்சிப்பவர்கள் உளர்.

அதாவது மகிந்த ராஜபக்ச­ தரப்பு மீண்டும் ஆட்சி அமைத்திருக்குமாயின் சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பது நூறு வீதம் சாத்தியமாக இருந்திருக்கும். 

இதன் மூலம் மகிந்த தரப்பும், படைத்தரப்பும் தண்டனை பெற வழிவகுத்திருக்கும் என்பது ஒரு சாராரின் கருத்து. அந்தக் கருத்தை அடியோடு நிராகரித்து விடவும் முடியாது.

தமிழ் மக்களின் நீண்ட கால நலனைக் கருத்தில் கொண் டால் மகிந்த ராஜபக்ச­ ஆட்சி அமைந்திருப்பதே நல்லது என்ற விவாதத்தில் நியாயம் இருப்பதாகவே தோன்றும்.

மாறாக தமிழ் அரசியல் தரப்பு குறுங்கால நலனை கருத்தில் கொண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனா திபதியாக்கி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி விட, அதுகண்டு சர்வதேச சமூகம் ஆறுதல் அடைந்தது. இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்குதல் என்பதும், மைத்திரி - ரணில் ஆட்சியால் ஏற்பட்டதுதான்.

மகிந்த ராஜபக்ச­ ஜனாதிபதியாக இருந்திருந்தால் கால அவகாசம் என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காது எனக் கருத்துரைப்போர் இப்போது அதிகரித்து வருகின்றனர். 

பரவாயில்லை! கறந்த பால் முலைபுகா என்பது போல புதிய அரசு அமைந்துவிட்டது. இனி ஆக வேண் டியதை பார்க்க வேண்டும் என்பது புத்திசாலித்தனமானது.

எனினும் தென்னிலங்கை அரசியல் சூழ் நிலையைப் பார்க்கிறபோது மகிந்த ராஜபக்ச­வுக்கான ஆதரவு இன்னும் ஒருபடி அதிகரித்திருக்கிறது என்பது பொதுவான கருத்து. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தா மல் காலம் தாழ்த்துவதன் பின்னணி கூட மகிந்த அணியின் செல்வாக்கு தெற்கில் பலமான இருக்கிறது என்பதுதான்.

அதாவது உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்தினால் அது மகிந்த தரப்பு பல இடங்களைக் கைப்பற்றுவதற்கு வழிவகுக்கும். 

இந்நிலைமையானது மகிந்த அணிக்கு உற்சாகத்தை ஊட்டுவதுடன் நல்லாட்சிக்கு எதிரான போராட்டங்களும் தெற்கில் பலம்பெறும். எனவே தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதில் நல்லாட்சி அரசு பின்நிற்கிறது என்றும் கூறப்படுகிறது.

எது எவ்வாறாயினும் நல்லாட்சியின் காலம் முடிந்து அடுத்த தேர்தலில் மகிந்த தரப்பு ஆட்சியை அமைக்கு மாக இருந்தால் அது மிகப்பெரிய இடைஞ்சலை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும்.

அதாவது மகிந்தவின் ஆட்சி தோற்று மைத்திரியின் ஆட்சி இப்போது நடக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மகிந்த ஆட்சி அமைப்பாராயின் போர்க்குற்றம், கால அவகாசம், ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மான ங்கள் என அனைத்தும் தவிடு பொடியாகிவிடும்.

அதேநேரம் தமிழ் அரசியல் என்பது செல்லாக்காசாக்கப்படும் என்பதுடன் தமிழ் மக்களின் பிரச்சினை என்ற விடயம் எந்தக் கட்டத்திலும் பேசப்படமாட்டாது என்பதும் உண்மை. ஆக, இங்குதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் இராஜதந்திரம் என்பது மிகவும் தெளிவானதாக இருக்க வேண்டியுள்ளது.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை வெளியிடும் கருத்துக்கள், அறிக்கைகள்  மகிந்த ராஜபக்ச­வுக்கு மீளவும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுப்பதாக உள்ளது. 

அதாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? என்ற கூட்டமைப்பின் கேள்வி  மைத்திரிக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி மகிந்த ராஜபக்ச­ இருந்தால் கூட்டமைப்பு இப்படிக் கேட்குமா? என்ற நினைப்பை உருவாக்கும்.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியையோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையோ குறை காணா மல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீதும் தன் மீதும் குறை அளப்பதில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து தம்மைக் கழுத்தறுக்கும் முயற்சியில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது என்ற ஊகத்தை ஜனாதிபதி மைத்திரியிடமும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருடனும் ஏற்படுத்தலாம்.

இத்தகையதொரு கருத்து நிலை ஏற்படுமாக இருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் மகிந்த ராஜபக்ச தலைமையில் உதயமாகும்.

இதற்கு ஜனாதிபதி மைத்திரியின் ஆதரவும் ஆசியும் இருந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலன் கருதி, எதிர்காலம் கருதி தனது இராஜதந்திர வியூகங்களை அமைக்க வேண்டும்.

இதை விடுத்து எடுத்ததற்கெல்லாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீது குறை கூறுவது ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாக பொருள்படும். இத்தகைய பொருள்படும் நிலைமை ஏற்படுமாகவிருந்தால் தமிழர்கள் மீளமுடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கும் என்பது இங்கு மிக நுணுக்கமாக கவனிக்கப்பட வேண்டும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila