கொடுத்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றவில்லை! அமைச்சர் ராஜித யாழில் ஒப்புதல்


வடக்கு மக்களின் பிரச்சினைகளை நிறைவேற்றுவதாக  தேர்தலின் போது நாம் அளித்த வாக்குறுதிகளை இன்னும் நாம் நிறைவேற்றவில்லை என ஏற்றுக்கொண்ட  சுதேச சுகாதார போசனை அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்ன, மக்களின் பிரச்சினைகள் யாவும் மந்த கதியில் தான் நிறைவேற்றப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார். 

ஐனநாயக தேசிய அமைப்பால் “வடக்கு தெற்கு சங்கமிக்கும் மனித நேயம்” என்னும் கருப்பொருளில் தொழிலாளர் தின நிகழ்வு நேற்றைய தினம்  யாழ் நல்லூர் சங்கிலியன் தோப்பு பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாங்கள் ஜனாதிபதி தேர்தலின் போது இந்த சங்கிலியன் பூங்காவில் தேர்தல் பரப்புரைக்காக வந்திருந்தோம். அப்போது பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தோம். 
அதாவது  உங்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட அனைத்தையும் மீட்டு தருவோம், சிறைகளில் வாடும் சகோதர சகோதரிகளை விடுதலை செய்வோம், காணாமல் போனோர் தொடர்பில் பதிலை கூறுவோம், இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவோம்,  வீடற்றவர்களுக்கு வீடுகள் வழங்குவோம் என பல வாக்குறுதிகளை கூறினோம். 

ஆனால் நாம் அளித்த வாக்குறுதிகள் இன்னமும் சரியாக நிறைவேற்றப்படவில்லை. இந்த பிரச்சினைகள் யாவும் மந்த கதியில் தான் மெதுமெதுவாக தீர்க்கப்பட்டு  வருகின்றன. 
மக்களின் காணிகளை கொஞ்சம் கொஞ்சமாக இராணுவத்தினரிடம் இருந்து பெற்றுத் தந்துள்ளோம் ஆனால் உங்களுக்கு உரித்துடைய ஒவ்வொரு அங்குலத்தையும் எம்மால் பெற்று தர முடியாமல் போயுள்ளது. அபகரிக்கப்பட்ட அனைத்தும் மீண்டும் பெற்று தருவோம்.

உங்கள் பிள்ளைகள் வேறு நாட்டு பிள்ளைகள் அல்ல, இந்த நாட்டு பிள்ளைகள், இங்கே போராட்டங்களினால் மரித்தவர்கள் அதேபோல சிங்கள் மக்களின்  பிள்ளைகளும் இராணுவம் பொலிஸில் இணைந்து உங்களுடைய பிள்ளைகள் போல் மரித்தார்கள், கடந்த கால பிரச்சினைகள் முடிந்து விட்டது. ஆனால் தொடர்ந்து பிரச்சினை உள்ளது. 

அதாவது அரசியல் கைதிகளாக பலர் இருக்கிறார்கள். குற்றவியல் சட்டக்கோவை யில் உள்ளது போன்று வழக்கு இல்லாதவ ர்கள் மற்றும் குற்றம் செய்யாதவர்களை விடு தலை செய்ய வேண்டும் என்பது எமது கோரி க்கையாகவுள்ளது. 

மேலும் காணாமல்போனவர்களின் உறவுகள் என்னை சந்திக்க கேட்டார்கள்.  அவர்கள் தமது உறவுகளை தான் கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து தாருங்கள் என கேட்கிறார்கள், 
மேலும் வீடுகள் இன்றி முகாம்கள், வேறு இடங்களில் பலர் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் வீடுகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறேன். வீடமைப்பு திட்டத்தின் மூலம்அதை  முழுமையாக நிறைவேற்றுவோம்.

இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயற்திட்டங்களிலும்  இப் பகுதியில் இருப்பவர்களை தான் வேலையில் அமர்த்த வேண்டும். தெற்கில் இருந்து வரும் யாரையும் வேலையில் அமர்த்த  முடியாது. உங்கள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து விட்டு தான் அடுத்த வருட மே தினக் கூட்டத்துக்கு வருவேன் என அமைச்சர் ராஜித மேலும் தெரிவித்தார்.     
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila