வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த யுத்தத்தில் உயிரிழந்த எங்கள் உறவுகளுக்காக நினைவேந்தல் எதிர்வரும் 18ஆம் திகதி இடம் பெறவுள்ளது.
இறுதி யுத்தம் நடந்து முடிந்த முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வின் போது காலை 9.30 மணிக்கு அனைவரும் மூன்று நிமிட நேரம் மெளன அஞ்சலி செலுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எங்களோடு வாழ வேண்டியவர்கள் கொடும் யுத்தத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட நிட்டூரம் இந்த உலகம் இருக்கும் வரை பேசப்படும்.
அதேவேளை வன்னிப் பெரு நிலப்பரப்பில் அநியாயமாகக் கொல்லப்பட்ட எங்கள் உறவுகளை நினைந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து தமிழ் உறவுகளும் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடி மனம் மெய் மொழிகளில் எங்கள் உறவுகளுக்கான அஞ்சலியைச் செலுத்த வேண்டும்.
அதேவேளை மே 18 என்பது நினைவேந்தலுக்கான நாளாகவும் நினைவேந்தலை செய்யும் பொருட்டு வடக்கு மாகாண சபை, தனது அதிகாரத்துக்குட்பட்ட வகையில் விடுமுறை வழங்குவது பற்றியும் சிந்திப்பது அவசியம்.
பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் மாணவர்களாகப் பாடசாலைகளில் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் அரச அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் இருக்கக் கூடியவர்கள் தங்கள் உறவுகளுக்கான அஞ்சலியைச் செலுத்துவதற்கு வசதியாக விடுமுறை அல்லது பதிலீட்டுடனான விடுமுறைக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இதற்கு அப்பால் வன்னிப் பெருநிலப்பரப்பில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் என்பது ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் ஒன்று சேர்ப்பதாக இருக்க வேண்டும்.
பொதுவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்த வகையில் புலம்பெயர் தமிழ் உறவுகளையும் ஒன்றுசேர்க்கக்கூடிய வலிமையும் ஆத்மபலமும் மே 18 நினைவேந்தல் நிகழ்வுக்கு உண்டு.
இந்த வருடம், அடுத்த வருடம் என்ற குறுங்காலத்தில் சாத்தியமாகாவிட்டாலும் நீண்ட காலத்தில் மே 18 நினைவேந்தல் உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் ஒன்றுகூடி வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்பை நினைத்துப் பார்க்கின்ற நாளாகப் பிரகடனமாகும்.
இதற்கு உலக அங்கீகாரம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆகையால், இதற்கெல்லாம் வழி செய்வது போல இறுதி யுத்தம் நடந்த முள்ளிவாய்க்காலில் பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்படுவது கட்டாயம்.
இந்தப் பணியை செய்வதில் அனைத்துத் தமிழ் மக்களும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் அமைக்கப்படும் நினைவாலயம் உலக நாட்டவர்களும் அகவணக்கம் செலுத்தும் அமரராலயமாக மிளிரட்டும்.