முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - தமிழ் மக்கள் பேரவை அறிக்கை!


எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18. எம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சமாக , 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த நூற்றாண்டின்  மிகக்கொடூரமான மனித அவலங்கள்  நிகழ்த்தப்பட்டது.
எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18. எம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சமாக , 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலங்கள் நிகழ்த்தப்பட்டது.
           
நீதிக்கான குரல் எழுப்பிய மக்களை, நீதிக்காய் குரல் எழுப்பினார்கள் அதனோடு இணைந்து நடந்தார்கள் என்பதற்காகவே சர்வதேச யுத்தவிதிகளை புறந்தள்ளி , மனிதத்துவ நடைமுறைகளையெல்லாம் தூக்கியெறிந்து , பாலியல் பலாத்காரங்களை, உயிர்வாழ்வதற்கான உணவை ,மருந்தை கூட ஆயுதமாக்கி, சாட்சியங்கள் முடியுமானவரை அகற்றி , பூகோள அரசியல் போட்டியின் பகடைக்காய்களாக்கப்பட்டு ,சர்வதேசம் கண்மூடி இருக்க , வஞ்சிக்கப்பட்டு எமது மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.
எதுவுமறியாத பாலகர்கள் , முதியவர்கள் அங்கவீனர்கள் என எந்த வேறுபாடுகளும் இன்றி, தமிழர்கள் என்பதற்காகவே ஆயிரம் ஆயிரமாய் எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
அந்த அவலங்களின் உச்சக்கட்டங்கள் நிகழ்ந்தேறிய நாள்தான் மே 18. 2006 ம் ஆண்டு வாகரை மண்ணில் உச்சம் பெறத்தொடங்கிய இந்த கோரத்தாண்டவம் 2009 மே 18 இல் வன்னியின் முள்ளிவாய்க்கால் மண்ணில் வரலாறுகாணாத பேரவலத்தை விதைத்திருந்தது. அந்த மானுடப்பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவுகாலத்தை நாம் இப்போது அனுஷ்டித்து வருகின்றோம்.
உண்மையில் சிறிலங்கா அரசு, தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இழைத்துவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் உச்சம் பெற்ற ஒரு தினமே மே 18 ஆகும். உண்மையில் எம்மீதான இனப்படுகொலையின் ஒரு குறீயீட்டு நாளாகவே இந்த மே 18 ஐ தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒருமுகப்பட்டு அனுஷ்டிக்கின்றோம்.
இந்த தினத்தில், தொடர்கின்ற இனப்படுகொலையில் கொல்லப்பட்டு இந்த மண்ணில் வீழ்ந்த அனைவருக்கும் எமது அஞ்சலிகளை தெரிவிக்கின்றோம். தாயகத்தில் வாழுகின்ற மக்கள் முடிந்தவரை, மானுடப்பேரவல நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மக்களுக்கான தமது அஞ்சலிகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஏனையவர்கள் தாம் வாழும் இடங்களில் அஞ்சலி தீபமேற்றி மூன்று நிமிட மெளன அஞ்சலி செலுத்தி இந்த மண்ணில் வீழ்ந்த எம் உறவுகளை நினைவுகூருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இனிவரும் காலங்களில் , எமது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இனப்படுகொலை நினைவேந்தல் குழுமம் ஒன்றின் மூலம் நினைவாலயம் ஒன்றை முள்ளிவாய்க்கால் மண்ணில் நிறுவுவதும் , இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தலை ஒருங்கிணைப்பதும் அனைவராலும் நேர்மையுடன் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் . இந்த நினைவேந்தல் நிகழ்வுகளானது , இதுவரை காலமும் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு வெறுமனே அஞ்சலி செலுத்தி விளக்கேற்றும் நிகழ்வாக மட்டும் குறுக்கப்படமுடியாதது.
சர்வதேச விதிகளை அப்பட்டமாக மீறி கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்கும் தொடரும் இனப்படுகொலைக்குமான பொறுப்புக்கூறலிற்கான குரலை எந்தவித சமரசமுமின்றி முன்னெடுத்து செல்வோம் என உறுதி பூணவேண்டிய நாளும் இதுதான். எந்த அரசியல் உரிமைக்காக ,மானுட நீதிக்காக குரல் எழுப்பி அதற்காய் கொல்லப்பட்டார்களோ அந்த அரசியல் உரிமைக்கான குரலை தொடர்ந்தும் நீதியுடன் முன்னெடுப்போம் என எம்மை மீள உறுதிப்படுத்தப்பட வேண்டிய தினமும் இதுதான் .
சர்வதேச மனிதாபிமான சட்டங்களை உதாசீனம் செய்து நிகழ்த்தப்பட்ட இந்த இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலிற்கான குரலையும், இனப்படுகொலைக்கான நீதிக்கான சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணைப்பொறிமுறையொன்றையும் எந்த வித மாயைகளுக்குள்ளும் உட்படாது நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் ஒற்றுமையாய் முன்னெடுத்தலும் எமது அரசியல் கோரிக்கைகளில் தெளிவுடனும் உறுதியுடனும் இருத்தலுமே இன்று எம் முன் உள்ள கட்டாய கடமைகளாகும்.
உண்மையில் இதுவே வீழ்த்தப்பட்ட எமது உறவுகளிற்கு நாம் செய்யும் நேர்மையான அஞ்சலியாகவும் அமையும். நீதிக்கான மக்களின் குரலை வன்முறைமூலம் அடக்கிவிடலாம் என்பது அடிப்படைப்புரிதல் அற்ற வன்மம் மிகுந்த செயன்முறையாகும். மறுக்கப்பட்ட நீதியை வழங்குவது மட்டுமே , அந்த மக்களின் குரலை அமைதிப்படுத்துமே தவிர , வரலாறுகளை மாற்றுவதும் சலுகைகள் மூலம் நீதிக்கான் குரல்களை ஒளித்துவைக்க முயல்வதும் அல்ல. ஆனால், சிறிலங்கா அரசானது, தொடர்ச்சியாக இப்படியான ஏமாற்றும் செயன்முறைகளிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது.
நல்லாட்சி என தம்மை அழைத்துக்கொள்ளும் இந்த அரசாங்கமும் அதே ஏமாற்று வழிமுறையையே தனது செல்நெறியாக வரித்துக்கொண்டுள்ளது. இப்படியான மனோநிலை தொடர்ந்தும் இருக்கும்வரையில் சிறிலங்கா அரசாங்கமானது , சர்வதேச தலையீடு இல்லாதவரைக்கும், எமக்கான நீதியை தானே முன்வந்து வழங்கும் என நாம் ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது .
எனவே இந்த வரலாற்று யதார்த்தத்தையும் உண்மையான கள நிலவரத்தையும் புரிந்து கொண்டு , சர்வதேச சமூகம் எமது பிரச்சினையை நேர்மையுடன் அணுக வேண்டும் எனவும் நாம் மீளவும் வலியுறுத்துகிறோம்.
இறுதியாக, எமது கோரிக்கைகளில் தெளிவுடனும் உறுதியுடனும் இருப்போம் எனவும் எம்மிடையேயான பேதங்கள் அனைத்தையும் இந்த இழப்புகளின் பெயரால் தாண்டி , எமது இனத்தின் நீண்டகால நலனை மட்டும் முன்னிறுத்தி நடபோம் எனவும் இந்த மண்ணில் வீழ்த்தப்பட்ட எம் உறவுகளின் நினைவுகள் மீது உறுதியெடுத்துக்கொள்வோம்.
தமிழ் மக்கள் பேரவை.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila