வடக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவிடம் வட மாகாணசபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம் சமர்ப்பித்திருந்த இரகசிய அறிக்கை ஒன்றை நேற்றையதினம் அவரே ஊடகங்களிடம் வெளிப்படுத்தியுள் ளார்.
அந்த அறிக்கையில் வடக்கு மாகாண சபை முதல்வருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல்வேறுபட்ட சூழ்ச்சிகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அந்த அறிக்கை முழுமையாகப் பிரசுரிக்கப்படுகிறது.
தலைவர்,
வடக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு, பிரதம செயலாளர் அலுவலகம், வடக்கு மாகாண சபை. 15.01.2017
வடக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைக்குழுவிற்கு சாட்சியம் அழிப்பதற்காக பொய்ச் சாட்சியங்கள் தயாராகி வருவதாக இலத்திரனியல் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் விசாரணைக்குழுவு க்கு இந்த அறிக்கையை சமர்ப்பிக்க முன்வந் துள்ளேன்.
வடக்கு மாகாண சபையால் 09.02.2016 அன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் தொடர் விளைவாக வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு மாகாண சபையின் யாழ்.மாவட்ட மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு உறுப்பினரும் நிதிச் செயலாளரும் ஆகிய கே.என்.விந்தன் கனகரத்தினம் ஆகிய நான் தங்களுக்குத் தெரியப்படுத்துவதாவது,
கடந்த 08.02.2016 அன்று யாழ்.சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கான கூட்டம் முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடந்து முடிந்த பிற்பாடு சக மாகாண சபை உறுப்பினரான பா.கஜதீபன் அவர்களின் முச்சக்கரவண்டியில் எனது அலுவலகத்திற்குச் செல்வதற்காக ஏறியபோது திடீரென உறுப்பினர் கஜதீபன் அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததன் காரணமாக அவர் தொலைபேசியில் பேசுவதற்காக இறங்கிச் சற்றுமுன்னால் சென்றுவிட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் முதலமைச்சரின் அலுலகத்துக்கு எதிர்ப்பக்கமாக உள்ள வளவிற்குள் மாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் அவர்களின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குள்ளிருந்து மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அவர்கள் என்னை நோக்கி வந்து உங்களோடு ஒரு முக்கியமான விடயம் கதைக்க வேண்டும் என அழைத்துச் சென்று ஆனோல்ட் அவர்களின் காருக்குள் அமரச்செய்தார். அப்போது காருக்குள் மாகாண சபை உறுப்பினர்களான ஆனோல்ட், சயந்தன் ஆகியோரும் இருந்தனர்.
அந்தவேளையில் உறுப்பினர் பரஞ்சோதி அவர்களும் அவ்விடத்திற்கு வர அவரையும் அழைத்து உள்ளே அமரவைத்தனர். இதன் பின் அஸ்மின் அவர்கள் என்னிடம் கூறுகையில்,
முதலமைச்சரின் கொட்டத்தை அடக்க வேண்டும். அவரை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும். அவரின் நடவடிக்கைகள், போக்குகள் எம்மை மீறிச் செல்கின்றன. அவருக்கு பக்க பலமாக அமைச்சர் ஐங்கரநேசன் இருந்து செயற்படுகிறார். முதலில் ஐங்கரநேசனை வீழ்த்த வேண்டும். அதற்கு சில வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் தான் பொருத்தமான ஆள். சுமந்திரன் சேர் உம் உங்கள் மீது நல்ல நம்பிக்கை வைத்துள்ளார். எனக் கூறி அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் மீது சில குற்றச்சாட்டுக்களை எல்லோரும் கூட்டாக சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அது மட்டுமல்லாது முதலமைச்சரின் வலக்கை ஐங்கரநேசன் தான். எனவே வலக்கையை உடைக்க வேண்டும் என அமர்ந்திருந்த ஆசனத்தின் கைப்பிடியை தட்டிக்காட்டினார் அஸ்மின். வலக்கையை உடைத்தால் ஆசனத்தில் இருந்து முதலமைச்சரை இலகுவில் வீழ்த்தி விடலாம் எனவும் கூறினார். இவற்றினை இவர்கள் கூறிக்கொண்டிருந்தபோது உறுப்பினர்கள் ஆனோல்ட்டும் சயந்தனும் வாங்கோ யு.எஸ் ஹோட்டலில் நாங்கள் சந்தித்துப் பேசுவோம் என்றனர்.
அப்போது நான் கூறினேன் அலுவலகம் செல்வதற்கு என்னிடம் தற்போது வாகனம் இல்லை. கஜதீபனின் வாகனத்தில் தான் செல்ல வேண்டும் என்று கூற இல்லை. யு.எஸ்.ஹோட்டலில் சந்திப்பு முடிய உங்களை உங்கள் அலுவலகத்தில் இறக்கிவிடுவோம் என்று கூறினர். பின்பு நாம் எல்லோரும் யு.எஸ்.ஹோட்டலுக்குச் சென்றோம். யு.எஸ்.ஹோட்டல் மேல் தளத்தில் பிரத்தியேகமாக எமக்கு ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. நாங்கள் அந்த இடத்திற்கு சென்ற போது மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய பிரதி அவைத் தலைவருமான கமலேஸ்வரனும் அவ்விடத்திற்கு வந்தார். எல்லோரும் நாம் கூடிப் பேசிக்கொண்டிருந்தபோது,
என்னை நோக்கி மீண்டும் ஆனோல்ட், சயந்தன் மற்றும் அஸ்மின் ஆகியோர் ஐங்கரநேசன் அவர்களுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுக்களைச் சொல்லி அவருக்கு எதிராக ஒரு பிரேரணையை சபையில் கொண்டு வரும்படியும் என்னை வலியுறுத்தினர். குற்றச்சாட்டுக்களைச் குறிப்பிடுமாறு நான் வினவிய போது பல குற்றச்சாட்டுக்களை மாறி மாறி மூவருமாகச் சொன்னார்கள்.
அக்குற்றச்சாட்டுகள் அடிப்படையிலேயே ஆதாரங்கள், ஆவணங்கள், நம்பிக்கைத் தன்மை ஏதுமில்லாமல் உண்மைக்குப் புறம்பானதும் ஒரு கற்பனை ரீதியிலான எழுந்தமான வாய்மூல குற்றச்சாட்டுகளாகவும் அவர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே இவர்களின் குற்றச்சாட்டுக்கள் அமைந்து காணப்படுவதாகவும் எனக்குத் தென்பட்டதால் நான் இப்பிரேரணையைக் கொண்டு வரமாட்டேன் என நிராகரித்துவிட்டேன்.
உடனே அதிலே இருந்துகொண்டு, தமிழீழ மக்கள் விடுதலைக்கழக (புளொட்) கட்சி சார்ந்த உறுப்பினரும் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினருமாகிய ஜி.ரி.லிங்கநாதன் அவர்களுடன் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு அஸ்மின், ஆனோல்ட் மற்றும் சயந்தன் போன்றோர் மாறி மாறி அவருடன் உரையாடினார்கள்.
உரையாடலிலே அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அவர் பிரேரணை யாகக் கொண்டுவரவேண்டும் என்றும் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பிரேரணையை தாம் இரவோடு இரவாகத் தயாரித்து அவருக்கு மறுநாள் சபை அமர்வில் சமர்ப்பிக்க மின்அஞ்சல் ஊடாக அனுப்பிவைப்பதாகவும் குறிப்பிட்டனர்.
அத்தோடு சில ஆசைவார்த்தைகளையும் அவர்கள் குறிப்பிடத்தவறவில்லை. உங்கள் மீது எங்கள் கட்சித் தலைமைக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. சுமந்திரனும் நன் மதிப்பு வைத்திருக்கின்றார். நாங்கள் இப்பிரேரணையைக் கொண்டுவந்தால் தமிழரசுக்கட்சி, சுமந்திரன் அணி என இணையத்தளங்களும் பத்திரிகைகளும் எங்களை விமர்சிக்கும் எனவே நீங்கள் தான் கொண்டு வரவேண்டும். உங்களைத்தான் அடுத்த விவசாய அமைச்சராக்குவதற்கும் தாங்கள் யோசித்திருப்பதாகவும் அவரிடம் தெரிவித்தார்கள்.
அத்தோடு அருகில் விந்தன் அண்ணையும் இருக்கின்றார். அவரும் இதற்கு ஆதரவு என்ற ஒரு பொய்யையும் கூறினார்கள். அத்தோடு யார், யார் அங்கு கூடியிருக்கின்றோம் என்ற விடயத்தினையும் தொலைபேசி ஊடான அந்த உரையாடலில் அவர்கள் அவருக்குத் தெரிவித்தார்கள்.
மறுநாள் மாகாணசபை அமர்வில் சபை ஒழுங்குப்பத்திரத்தில் இவ்விடயத்தைச் சேர்க்காமல் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகக் கருதி, அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கவேண்டும் என்றும் அதற்கு ஒரு குழுவை முதலமைச்சர் நியமிக்கவேண்டும் என்றும் லிங்கநாதன் அவர்கள் பிரேரணையைக் கொண்டுவந்தார்.
குறித்த பிரேரணை கொண்டுவந்த முறைமையை ஆட்சேபித்து பின்னர், பல மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் அவர்களுக்கு ஆட்சேபனைக் கடிதம் ஒன்றை வழங்கியிருந்தமையையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அதன் பிற்பாடு நீண்டகாலமாக அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்களை லிங்கநாதன் அவர்களும் இதை ஆதரித்து நின்றவர்களும் முதலமைச்சர் அவர்களிடம் கையளிக்கவில்லை. தற்பொழுது எல்லா அமைச்சர்களையும் விசாரிக்கும் முகமாக முதலமைச்சர் அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவிடம் சாட்சியங்கள் பதியப்படுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதேவேளையில், பல நபர்கள் பொய் சாட்சியங்களை பதிவுசெய்வதாகவும் இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்தநிலையில் இத்தகவலையும் தங்களின் கவனத்திற்கு ஆவணமாக நான் சமர்ப்பிக்கின்றேன் என உறுப்பினர் விந்தன் அதில் தெரிவித்துள்ளார்.