நாற்றமடிக்கிறது தமிழரசின் நாடகம் முடிவு இன்னொன்றின் ஆரம்பமாகுமா? பனங்காட்டான்

TNA-Sampanthan-Sumanthiran

முதலமைச்சர் கதிரையில் கண் வைத்திருக்கும் சி.வி.கே.சிவஞானம் இந்த ஓரங்க நாடகத்தின் நாயகன். இயக்குனர் மாவை சேனாதிராஜா. தயாரிப்பாளர் எம்.ஏ.சுமந்திரன்.
———
குற்றம் சுமத்தியவர்கள் விசாரணைக்குச் சமுகமளிக்காததால் அமைச்சர்கள் சத்தியலிங்கமும் டெனீஸ்வரனும் குற்றமற்றவர்களாக முடியாது. இறுதி விசாரணை முடியும்வரை இவர்கள் குற்றவாளிக் கூண்டிலேயே நிறுத்தப்பட வேண்டியவர்கள்.
———-
இது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. எதிர்பார்க்காத ஒன்றுமல்ல.
இப்படியான கூத்துகள் நடைபெறுமென்று பல மாதங்களுக்கு முன்னரே பலருக்கும் தெரியும்.
தங்களின் ஆட்கள்மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், முதலமைச்சர் விக்கினேஸ்வரனை பதவி இறக்க தமிழரசுக் கட்சி எடுத்துள்ள நடவடிக்கையை அவரை ஏகோபித்த வாக்குகளால் தெரிவு செய்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்பது இப்போது உலகறிந்த விடயமாகிவிட்டது.
38 உறுப்பினர்களைக் கொண்ட வடமாகாண சபையில் 30 பேர் கூட்டமைப்பினர். இவர்கள் தமிழரசு, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய நான்கினையும் சேர்ந்தவர்கள்.
இவர்களில் ஒருவரான நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனை முதலமைச்சராக பெயர் சொல்லி அறிவித்தே கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி பெற்று மாகாண ஆட்சியைக் கைப்பற்றியது. இவர் தனித்துப் பெற்ற சுமார் ஒரு இலட்சத்து முப்பதிரண்டாயிரம் வாக்குகள் வேறெவராலும் எண்ணிக்கூட பார்க்க முடியாதது.
இலங்கையில் மற்றைய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுகையில், எந்தக் கட்சியும் தங்களின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முற்கூட்டி அறிவிப்பதில்லை.
கூடிய ஆசனங்களைப் பெறும் கட்சியின் அல்லது குழுவிலிருந்து ஒருவர் முதலமைச்சர் ஆவதே அங்கு வழக்கம். ஆனால் 2013இல் நடைபெற்ற வடமாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் முதலமைச்சராக நீதியரசர் விக்கினேஸ்வரனை முன்னிறுத்தியே கூட்டமைப்பு வாக்குக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
அதிகாரமெதுவுமற்ற 13வது திருத்தத்தின் கீழான மாகாணசபை முறைமையை தமிழர்களிடையே கட்டியெழுப்புவதற்கு, மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒருவரை முதலமைச்சராக தேர்தலுக்கு முன்னரே அறிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதே இதற்கான காரணம்.
ஆனால், நான்கு அமைச்சர்களையும் தெரிந்தெடுத்து நியமித்தவர் முதலமைச்சர். எனவே, தேவையேற்படும்போது இவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் தார்மீக உரிமை அவருக்குண்டு.
இதனையே இந்த வாரம் அவர் நிறைவேற்றினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களையும் (ஐங்கரநேசன், குருகுலராஜா) 15ம் திகதி புதன்கிழமை மதியத்துக்கு முன்னர் பதவி விலக வேண்டுமென அறிவித்தார். அதேசமயம், முறைப்பாட்டாளர்கள் சமுகம் அளிக்காததால் குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களான சத்தியலிங்கம் (தமிழரசு) மற்றும் டெனீஸ்வரன் (ரெலோ) ஆகிய இருவர்மீதும் மேலும் பல குற்றச்சாட்டுகள் கிடைத்துள்ளதால் அதன் மீதான விசாரணை முடியும்வரை, இவர்கள் பதவியிலிருந்து விலகி விடுமுறையில் இருக்க வேண்டுமென அறிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்படவில்லையென்பதால் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று அர்த்தப்படாது என்ற அடிப்படையில் நீதியரசராக இருந்து பெற்ற அனுபவத்தின் வாயிலாக இந்த முடிவை முதலமைச்சர் எடுத்தது நியாயமானது.
ஆனால் இங்கேதான் பிரச்சனையே ஆரம்பமானது.
நான்கு அமைச்சர்களையும் நீக்கினால் முதலமைச்சரையும் மாற்ற நேரிடுமென்று அதிரடி அறிவிப்பு கொடுத்தார் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா.
வடமாகாணசபையின் ஊழல் விசாரணை தொடர்பான தண்டனை விடயத்தில் தாங்கள் தலையிடப் போவதில்லையென்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஏற்கனவே தெரிவித்திருந்த கூற்றை, ‘மீண்டும் போராட்டம் வெடிக்கும்” வாசகம் புகழ் மாவையரின் எச்சரிக்கை நிர்வாணமாக்கியது.
அதேசமயம், முதலமைச்சரின் முடிவை தாங்கள் பூரணமாக ஏற்றுக் கொள்வதாக கூட்டமைப்பின் மற்றைய மூன்று கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிகளின் தலைவர்கள் அறிவித்து, தமிழரசுக்குப் புதிய சவாலை ஏற்படுத்தினர்.
கூட்டமைப்புக்குள் நீண்டகாலமாக நிலவி வந்த பனிப்போர் இதனோடு அம்பலமாகியது.
சந்தர்ப்பம் பார்த்திருந்த சுமந்திரன் இப்போது தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். வடமாகாணசபைக்குள் சில உறுப்பினர்களை ஒன்றாக்கி சுமந்திரன் அணி (இஞ்சிக் குழு என இதனை அழைப்பர்) என ஒன்றை உருவாக்கி முதலமைச்சருக்கு தொடர்ந்து நெருக்கடியைக் கொடுத்து வந்தது இக்குழு.
இந்த மாதம் 14ம் திகதி முதலமைச்சர் நிகழ்த்திய முக்கிய உரையில், வேறெங்கோ இருப்பவரின் பதவி ஆசையானது எம்முள் சிலரை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்று எண்ண வேண்டியதாயுள்ளது எனப் பூடகமாக யாரைக் குறிப்பிட்டார் என்பதைப் புரிந்து கொள்வது இதனூடாக இலகுவாகிவிட்டது.
தமக்கு விசுவாசமாகப் பழகும் அமைச்சர் ஐங்கரநேசனை பதவியிலிருந்து நீக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையில், தமிழரசுக் கட்சியின் குருகுலராஜாவும் அகப்பட்டதை சுமந்திரன் – மாவை சேனாதிராஜாவினால் சீரணிக்க முடியாது போய்விட்டது,
இதுபற்றி முதலமைச்சர் பின்வருமாறு தமதுரையில் குறிப்பிட்டார்: ஓர் அமைச்சரை மட்டும் வெளியேற்ற முற்பட்டு அவர்களின் மதிப்புக்குரிய இன்னொருவரையும் பதவி இறக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள், என்ற முதலமைச்சரின் சொல்லாடல் உள்ளதை உள்ளவாறு கூறும் அவரது அபாரதிறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
இதன் அடுத்த நடவடிக்கையாக முதலமைச்சர்மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை தயாரானது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகமே இதற்கான தளமாக இயங்கியது.
21 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற இப்பிரேரணை அன்றிரவே வடமாகாணசபையின் சிங்கள ஆளுனர் றெஜினோல்ட் கூரேயிடம் கையளிக்கப்பட்டது.
வடமாகாணசபையின் அக்கிராசனரான சி.வி.கே. சிவஞானமே இதனை நேரில் சென்று கையளித்தவர்.
அக்கிராசனர் என்பதன் மறுபெயர் சபாநாயகர் என்பது. வழமையாக சபை நடவடிக்கைகளின் எந்த வாக்கெடுப்பிலும் சபாநாயகர் கலந்து கொள்வதில்லை. எப்போதாவது ஒரு பிரேரணை வாக்கெடுப்பில் சம எண்ணிக்கையில் நிற்கையில், சபாநாயகர் தமது வாக்கை வழங்குவார். அதுவரை அவர் கட்சி சார்பற்றவராக நடுநிலை வகிப்பதே நடைமுறை.
ஆனால், வடமாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அதன் சபாநாயகரான சிவஞானமே ஆளுநரிடம் கையளித்துள்ளாரென்றால், இவர் தொடர்ந்தும் அப்பதவியை வகிக்கத் தகுதியானவரா என்ற கேள்வி எழுகின்றது.
இதற்காகத்தான் சிவஞானத்தை புதிய முதலமைச்சராக்க மாவை சேனாதிராஜா முயற்சிப்பதை இதற்குப் பதிலாகக் கொள்ளலாம். ஆனால் அமைச்சர் சத்தியலிங்கத்தை முதலமைச்சராக்கவே சுமந்திரன் முயற்சித்து வருகிறார்.
மறுதரப்பில் முதலமைச்சர் மீதான நம்பிக்கைப் பிரேரணையை 15 உறுப்பினர்களின் கையொப்பத்தோடு உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் மற்றும் சர்வேஸ்வரன் தலைமையிலானவர்கள் ஆளுனரிடம் கையளித்தனர்.
இவ்வேளையில் கூட்டமைப்பின் சம்பந்தர் புளொட் சித்தார்த்தனின் முன்னெடுப்பில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடன் தொலைபேசியில் உரையாடினார்.
குற்றம் நிரூபிக்கப்படாத இரண்டு அமைச்சர்களையும் பதவியிலிருந்து நிறுத்துவதை நீக்கினால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவதாக சம்பந்தன் உறுதியளித்தார்.
தங்கள் மீதான விசாரணையை குழப்பமாட்டார்களென அவர்கள் இருவரும் உறுதிக் கடிதம் தந்தால், தமது முடிவை மாற்றலாமென முதலமைச்சர் வழங்கிய பதிலுக்கு, சம்பந்தன் தரப்பிடமிருந்து இதனை எழுதும்வரை எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை.  இதனால் சமரச முயற்சி சரவரவில்லை என்பதாகிவிட்டது,
கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும் தொடங்கியதை முடிப்போமென்று அறைகூவியுள்ளார் சுமந்திரன்.
தமது பதவியைக் காப்பாற்ற ரெலோவிலிருந்து விலகி தமிழரசுக் கட்சிக்கு பாய்ந்துவிட்டார் அமைச்சர் டெனீஸ்வரன் என்றொரு செய்தி கூறுகின்றது.
அமைச்சர் பதவியை தக்க வைக்கலாமென்று தம் பக்கத்துக்கு ஐங்கரநேசனை அழைத்த சுமந்திரனின் வேண்டுகோள் அவரால் புறக்கணிக்கப்பட்டதோடு, தமது அமைச்சர் பதவியை துறந்துவிட்டு, முதலமைச்சர் மீதான நம்பிக்கைப் பிரேரணையில் கையொப்பமிட்டு தமது விசுவாசத்தை மீண்டும் காட்டியுள்ளார் ஐங்கரநேசன்.
மகிந்த அணியைச் சேர்ந்த சிங்கள, முஸ்லிம் மற்றும் ஈ.பி.டி.பி. யினரையும் சேர்த்தே விக்கினேஸ்வரனைப் பதவியிறக்க தமிழரசு எடுத்த நடவடிக்கையை, துரோகத்தனமானதென தமிழ் அரசியல் தலைவர்களும் அமைப்புகளும் கண்டித்துள்ளனர்.
இதிலென்ன தவறு, தெற்கில் அவர்களுடன் இணைந்துதானே நாங்கள் செயற்படுகிறோம் என்று உண்மையை மறைக்க விரும்பாது சளாப்பியுள்ளார் மாவை சேனாதிராஜா.
இப்படியான ஓர் அவலச் சூழலை உருவாக்கிய தமிழரசுக் கட்சி, இந்த நாடகத்தை அரங்கேற்ற முடியாது பிசுபிசுத்துப்போன ஒன்றாக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த ஓரங்க நாடகத்தின் நாயகன் முதலமைச்சர் கதிரையில் மோகம் கொண்ட சி.வி.கே.சிவஞானம். இதன் இயக்குனர் மாவை சேனாதிராஜா. தயாரிப்பாளர் எம்.ஏ.சுமந்திரன் என்பது பரமரகசியமாகிவிட்டது,
நம்பிக்கைப் பிரேரணை வென்றால் அது நீதிக்குக் கிடைத்த வெற்றி.  நம்பிக்கையில்லாப் பிரேரணை வென்றால் அது ஊழலுக்கும் துரோகத்துக்கும் கிடைத்த வெற்றி.
இதில் பெறப்படும் முடிவு, இன்னொன்றின் ஆரம்பமாகுமா?
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila