மிகப்பெரியதொரு யுத்தத்தில் தமிழ் மக்கள் நொந்து கெட்டுப் போயுள்ளனர்.
சொத்தழிவுகள், இடப்பெயர்வுகள் என்பதற்கு அப்பால், உயிரிழப்புக்கள், காணாமல் போனவர்களின் நிலை,
தமிழ் அரசியல் கைதிகளின் அவலம் என எங்கு பார்த்தாலும் கண்ணீரும் செந்நீரும் என்பதாக தமிழ் மக்களின் வாழ்வு அமைந்துள்ளது.
வன்னிப் பெருநிலப்பரப்பில் கொடும் போர் நடந்தபோது - தமிழின அழிப்பு இடம்பெற்ற போது தமிழ் மக்களைக் கொல்லாதீர்கள் என வாய்திறந்து சொல்லாத முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எவரும் தமிழ் மக்கள் பற்றியோ தமிழ் அரசியல் தலைமை பற்றியோ கதைக்கத் தகுதியற்றவர்கள்.
இந்த நாட்டின் சிறுபான்மை மக்களாக இருக்கக்கூடிய முஸ்லிம் சகோதரர்கள் இன்னொரு சிறுபான்மை இனமாகிய தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. மாறாக விடுதலைப் புலிகள் தங்களை வட பகுதியில் இருந்து வெளியேற்றினர் என்பதைக் குற்றச்சாட்டாக வைப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
ஆனால், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்தவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.
விடுதலைப் புலிகள் பலமாக இருந்த போது புலிகளின் தலைமையுடன் உடன்பாட்டுக்கு வந்த பிற்பாடு; புலிகள் தோற்றுவிட்டனர் என்பதால் வட பகுதியில் இருந்து தங்களை வெளியேற்றியதற்கு வஞ்சம் தீர்க்க முஸ்லிம் அரசியல் தலைமை முற்படுவது எந்த வகையிலும் நியாயமாகாது.
விடுதலைப் புலிகள் இருந்த போது அவர்களுடன் இணங்கிப் போவதற்கு உடன்பட்டவர்கள், அவர்கள் இப்போது இல்லை என்றவுடன் தமிழ் மக்களை பல வழிகளிலும் நசுக்க முனைப்புக்காட்டுவது முஸ்லிம் தலைமைக்கு அவ்வளவு நல்லதல்ல.
பொதுவில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள்; தமிழ் மக்களுக்கு - தமிழ் இனத்துக்கு எதிராகச் செய்யும் எந்தச் செயற்பாடு குறித்தும் தமிழ் அரசியல் தலைமை வாய்திறப்பதாக இல்லை.
ஏதோ! முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எது செய்தாலும் அது சரி அல்லது அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களாக இருக்கக்கூடிய முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்குப் பாதகமாக முன்னெடுக்கும் சதித்திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அவை பற்றி நாம் கண்டுகொள்ளக்கூடாது என்பது போல தமிழ் அரசியல் தலைமை கருதுகிறது.
ஆகையால், மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நடந்து கொள்வதால் அவர்கள் மீது தமிழ் மக்கள் கடும் ஆத்திரம் கொண்டுள்ளனர்.
நிலைமை இப்படியே நகருமாக இருந்தால், சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழலாம்; ஆனால் இவர்களுடன் முடியாது என்பதாக தமிழ் மக்களின் முடிவு இருப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.