காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கு சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றியும் கண்டிருக்கின்றார்.
நாடாளுமன்றத்தில் அந்த சட்ட திருத்தத்தை பிரதமர் சமர்ப்பித்தபோது அந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தரப்புகளின் ஆட்சேபனைகளையோ, கருத்துக்களையோ கருத்திலெடுக்கும் தன்மையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிக்காட்டவில்லை.
அந்தவிவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன், இந்த அலுவலகம் வன்னியில் குறிப்பாக கிளிநொச்சியிலும் அமைய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் வடக்கு-கிழக்கிலிருந்து பல ஆயிரம்பேர் காணாமல் போயிருப்பதாக கருத்துக்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டதுடன், காணாமல் போனவர்களை இந்த அலுவலகம் தேடும்போது அப்படிக் காணாமல் போனவர்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்தால் அங்கும் சென்று தேடவேண்டும் என்று கூறியிருந்தார். அதாவது தேடும் நடவடிக்கைகள் இறுதிவரை எந்த எல்லைக்கும் போகவேண்டும் என்ற அர்த்தப்பட கூறியிருந்தார்.
அதுதவிரவும், இந்த காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டால் யுத்தத்தின் இறுதியில் நடைபெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படும் என்றும், படையினர் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவார்கள் என்றும் எதிரணியினரால் கூறப்படும் கருத்துக்களில் உண்மை இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த அலுவலகம் அமைப்பது என்பது, உலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதான் என்று குறிப்பிட்டதுடன், இந்தஅலுவலகம் முன்னெடுக்கும் தேடுதல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்தி தரவேண்டும் என்றும் குறிப்பிடுவதற்கு மறக்கவில்லை.
அதேவேளை காணாமல் போதல் சம்பவங்களில் படையினரும், விடுதலைப்புலிகள், ஈ.பி.டி.பி உள்ளிட்ட ஏனைய தமிழ் இயங்களும் தொடர்புபட்டிருக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தவிவாதத்தில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, காணாமல் போனோர் விடயமானது விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், பரிகாரமும் கிடைக்கச் செய்வது அவசியம் என்று குறிப்பிட்டதுடன், தமது உறவுகள் காணாமல் போனதாகவும், யாரால் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பது தொடர்பாகவும் செய்த முறைப்பாடுகளில் சிலர் என்ன நடந்தது என்பதை அறியாமலும், தூண்டுதலின் பேரிலும் ,உள்நோக்கத்துடனும் சிலமுறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவ்வாறான பொய்யான முறைப்பாடுகளும், அதைச் செய்தவர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அன்றைய தினம் பிரதமரால் கொண்டுவரப்பட்ட திருத்தத்தில் தமது உறவுகளை பறிகொடுத்த தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் கேள்விகள் எவராலும் முன்வைக்கப்படவில்லை என்பது ஏமாற்றமாகவே தெரிந்தது.
கருத்துக்களை முன்வைத்த தமிழர் தரப்புக்கள் இந்த அலுவலகம் தொடர்பான அரசாங்கத்தின் நோக்கத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொண்டவர்களாகவும். ஆதன் மீது கேள்விகளைத் தொடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எரிச்சலை தேடிக் கொள்ளக் கூடாது என்பதிலும் கவனமாகவே இருந்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகவே தெரிகின்றது.
பிரதமர் முன்மொழிந்த அந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் அலுவலகத்தின் முக்கிய செயற்பாடுகளாக பிரதமர் கூறிய விடயங்களையிட்டு எதுவிதமான கேள்விகளும் அங்கு எழுப்பப்படவில்லை.
அவையாவன, இந்தஅலுவலகம் காணாமல் போனவர்களைதேடும். ஆனால் யாரையும் விசாரிக்காது. யார் மீதும் வழக்குகளை தொடுக்காது. கண்டறியப்படும் உண்மைகள் பாதுகாக்கப்பட வேண்டியதாக இருந்தால் அதை வெளிப்படுத்தாது என்று குறிப்பிட்டதுடன், முக்கியமாக இந்த அலுவலகம் காணாமல் போனவர்களுக்காக சான்றிதழை வழங்கும், நஸ்ட ஈடுகளை வழங்க பரிந்துரைசெய்யும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இங்கேதான் இந்த காணாமல் போனோர் அலுவலகம் மீதான தமிழ்மக்களின் கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன. இந்த அலுவலகம் யாரையும் விசாரிக்காது என்றால் அதன் தேடும் பணியை எங்கிருந்து ஆரம்பிக்கும்? மக்கள் ஆணைக் குழுக்களின் முன்னிலையில் வழங்கிய சாட்சியங்களில் தமது உறவுகளை தாமே கையளித்ததாகவும் கூறியிருக்கின்றனர். சிலர் தமது உறவுகளை யார் பிடித்துச் சென்றார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
அவ்வாறு சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டவர்களை விசாரிக்கும் அதிகாரத்தை இந்த அலுவலகம் கொண்டிருக்காவிட்டால் மக்கள் வழங்கிய சாட்சியங்கள் அவசியமற்றதா? தமது உறவுகள் தாமாகவே மர்மமாக காணாமல் போனார்களா?, அல்லது வேற்று கிரகவாசிகள் வந்து உறவுகளைக் கடத்திச் சென்றுவிட்டார்கள் என்ற கணக்கில் அவற்றை விவாதத்திற்கும், விசாரணைக்கும் எடுக்காமல் விட்டுவிடப் போகின்றார்களா? – போன்ற கேள்விகளுக்கு பதில் என்ன?
சந்தேக நபர்களை விசாரிக்காது – குற்றவாளிகளாக காணப்படுகின்றவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கலை செய்ய முடியாது என்றால் இந்த அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்விதமான நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கப்போகின்றது?
ஆக மொத்தத்தில, கூறப்பட்டிருப்பதன்படி பார்த்தால், இந்த அலுவலகம் கண்களை கறுப்புத் துணிகளால் கட்டிக் கொண்டு தடவப் போகின்றது. கையில் எவருமே தட்டுப்படாவிட்டால், ”நாங்கள் தேடினோம் யாரையும் காணவில்லை” என்று கையை விரிக்கப் போகின்றார்கள்.
அப்படியானால், ஏன் இந்த அலுவலகம்?
ஐ.நா மனித உரிமை ஆணையகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை தாம் நிறைவேற்றுவதாக காட்டிக் கொள்வதற்கு எதாவது, ஒரு முன்னெடுப்பைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஒருபுறம். ஊறவினர்கள் காணாமல் போய் விட்டதாக தமிழ் மக்கள் செய்திருக்கும் சுமார் 6000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு ஒரு சான்றிதழை வழங்கி நஷ்ட ஈடுகளையும் வழங்கி விட்டால், கழுத்தை நெரிக்கும் காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வையும் கண்டு விடலாம் என்பது மறுபுறம்!
ஆகவே அரசாங்கம் அமைத்திருக்கும் காணாமல் போனோரைத் தேடும் அலுவலகம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நியாயத்தையும், பரிகாரத்தையும் வழங்குவதற்கு, திருப்திகரமான பங்களிப்பை வழங்கப் போவதில்லை என்பது உறுதியாகத் தெரிகின்றது.