அன்னியராட்சியில் பசுவதை இடம்பெறுவதை எதிர்த்து இந்த நாட்டை விட்டு வெளியேறிய யோக்கியவான்கள் பற்றி அறியும் போதெல்லாம் நெஞ்சம் நெகிழும்.
அந்தளவுக்கு பசுவதைக்கு எதிராக நம்மவர்கள் குரல் கொடுத்தனர்.
ஆனால் இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகர சபை மாட்டிறைச்சிக் கடைகளை அமைத்து அதற்கு குத்தகைப் பணம் பெற்று மாட்டிறைச்சி விற்பதற்கு அனுமதி வழங்கி வருகிறது.
இந்த வழக்கம் நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாயினும் இனிமேலாவது யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சிக் கடைகளை இல்லாது செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
முன்பு தொடக்கம் பிழை நடந்து வருகின்றது என்பதற்காக அந்தப் பிழை தொடர வேண்டும் என்ற நியமங்கள் எதுவும் கிடையாது.
ஆகையால் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு மாட்டிறைச்சி விற்பனைக்குமான தடையை யாழ்ப்பாண மாநகர சபை முதலில் அமுலுக்குக் கொண்டு வர வேண்டும்.
இதற்கான கோரிக்கையை சைவ மக்கள் மட்டுமன்றி கத்தோலிக்க மக்களும் முன் வைக்க வேண்டும்.
எல்லா மதங்களும் கொல்லாமை பற்றி பேசுகின்றன. அதிலும் நம் தமிழர்களின் அடையாளச் சின்னம் நந்தி.
நந்திக் கொடி ஏற்றப்பட்டால் அது தமிழர்களின் வாழ்விடம் என்பது பொருளாகும். அதனால்தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலட்சணையில் நந்திக்கு முன்னுரிமை கொடுத்துள்ளது.
ஆக, தமிழர்களின் அடையாளமாக இருக்கக்கூடிய எருதுவை, பசுவைக் கொன்று அந்த இறைச்சியை விற்பனை செய்தவதென்பது தமிழர் தாயகத்தில் இடம்பெறக்கூடாது.
பசுவதை மிகப்பெரும் பாவம். இந்தப் பாவத்திலிருந்து இனிமேலாவது நாம் விடுபடவேண்டும்.
நல்லூர்க் கந்தப் பெருமான் கோயில் கொண்ட யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சிக் கடை இயங்குவதென்பது தமிழ் மக்களுக்கு இழுக்கைத் தருவது.
மாட்டிறைச்சிக்குத் தடை செய்வது நியாய மானதல்ல என்றால், ஆமை, உடும்பு, மான், மரை இவற்றின் இறைச்சிக்கும் தடை செய் திருக்கக்கூடாதல்லவா?
ஆகையால் மாட்டிறைச்சி விற்பதற்கும் மாட்டிறைச்சிக் கடை இயங்குவதற்குமான தடையை யாழ்ப்பாண மாநகர சபை முதலில் ஆரம்பித்து வைக்க அதன் விரிவாக்கம் வடக்கு கிழக்கு என தமிழர் தாயகம் எங்கும் பரவட்டும்.
தமிழர் தாயகத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை வருமாக இருந்தால், பெளத்தர்கள் நிச்ச யம் தங்கள் பிரதேசங்களிலும் மாட்டிறைச்சி விற்பனைக்கும் தடை விதிப்பர்.
எங்கே? பொது அமைப்புக்கள், சமய நிறு வனங்கள் தங்கள் கோசத்தை ஆரம்பிக்கட்டும்.
இதற்கு எங்கள் முஸ்லிம் சகோதரர்களும் நிச்சயம் ஒத்துழைப்பு வழங்குவர்.