ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பங்கேற் புடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைமைகளின் ஒத்துழைப்புடன் அரசியல மைப்பிற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தேசிய அரசாங்கத்தினை ஆட்சிக்கு கொண்டு வந்த தமிழ் மக்களுக்கு நன்றிக்களைத் தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பல்கலைக்கழகங்களில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இடம்பெறமாட்டாது எனவும் உறுதிப்படத் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் யாழ்.பல்கலைக்கழக வளாகமாக விவசாய, பொறியியல் பீடங்களின் வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசாய பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர் திறன் அபிவிருத்தி கட்டடத்தொகுதியும் பொறியியல் பீடத்திற்கான இரண்டு மாடிக்கட்டடமும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், நாங்கள் பாடசாலைக்கு செல்லும் காலத்தில் எங்களுடைய பெற்றோர் யாழ்ப்பாண மாணவர்கள் போன்று கல்வியைப் பயிலுங்கள் என்று கூறிக்கொண்டே இருப்பார்கள்.
எனக்கு தற்போதும் மறக்க முடியாதவொரு விடயம் இருக்கின்றது.நான் ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றேன். எமது வகுப்பறையில் ஆங்கில மொழிமூலமாகவே கற்கைசெயற்பாடுகளும், கலந்துரையாடல்களும் நடைபெறும். எமது வகுப்பில் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள், என அனைத்து இனத்தவர்களும் இருந்தார்கள். அக்காலத்தில் சர்வதேச பாடசாலைகள் இன்மையின் காரணமாக சில இராஜதந்திரிகளும் கல்வி கற்றனர்.
துரதிஸ்டவசமாக அந்த நிலைமைகள் ஐம்பதுகளுக்குப் பின்னர் மாற்றமடைந்திருந்தன. மாணவர்கள் இனங்களின் அடிப்படையில் வெவ்வேறாக பிரிக்கப்பட்டுவிட்டனர். மொழி அடிப்படையில் தனித்தனியாகவும் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. இந்த நிலைமைகள் மாற்றமடைந்து மீண்டும் மூன்று இனத்தவர்களும் வகுப்பறைகளில் பல்கலைகழக பீடங்களில் ஒன்றாக கற்கைகளை மேற்கொள்ளும் நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான நிலைமைகள் உருவாக்கப்படும் பட்சத்தில் எமது நாட்டிற்கு சிறந்த எதிர்காலம் ஏற்படும்.
இந்தியா எமது அயல்நாடு. பல ஆண்டுகளாக எமக்கு நன்கொடைகளை வழங்கும் நாடாகவுள்ளது. ஒவ்வொரு காலப்பகுதியிலும் எமது நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இங்கு வருகை தந்திருந்தபோது நானும் அவருடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தபோது பல விடயங்களில் கவனம் செலுத்தியிருந்தார். நாமும் கவனம் செலுத்தியிருந்தோம். அந்த வகையில் இன்றையதினம்(நேற்று) வருகை தந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கிளிநொச்சி பலசமயங்களில் உச்சகட்ட மோதல்கள் இடம்பெற்ற பகுதியாக காணப்படுகின்றது. தற்போது இங்கு ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளமையானது சிறந்ததொரு விடயமாகவே கருதுகின்றேன். புதிய அரசாங்கத்தினை தமிழ் மக்களான நீங்களே ஆட்சிக்கு கொண்டு வந்திருந்தீர்கள். புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை அங்கீகரித்திருந்தீர்கள். தமிழ் மக்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பல்கலைக்கழகங்கள் சுயாதீனமாக செயற்படும் கொள்கையினையே அரசாங்கம் கொண்டிருக்கின்றது. அதில் அரசியல் தலையீடுகள் இருப்பதை நாம் அங்கீகரிக்கவில்லை. துணைவேந்தர்களுக்கான அதிகாரங்களின் பிரகாரம் சுயாதீனமாக அவர்கள் நிருவாகத்தினை முழுமையான முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படுவதே எமது நோக்கமாகும்.
புதிய ஆட்சியில் துணைவேந்தர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன என்று நம்புகின்றோம். பல்கலைக்கழகங்களின் நிருவாகத்திற்கு தீர்மானம் எடுக்கின்ற உரிமையை வழங்குகின்ற போது தான் சிறந்த முன்னேற்றங்களை காண முடியும். நான் உயர்கல்வி அமைச்சர் என்ற வகையில் உயர்கல்வித்துறையை முன்னேற்றுவதற்கான நடவடிக்ககைளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகின்றேன்.
துணைவேந்தர்கள் சுயாதீனமாக பல்கலைக்கழங்களில் செயற்படுவதற்கும் அரசியல் தலையீடுகளற்ற சூழலில் நிருவாகத்தினை முன்னெடுப்பதற்கும் நாம் எப்போதுமே உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.
தேசிய அரசாங்கமும் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுதுகின்ற அரசியல் கட்சிகளும் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளில் பங்கேற்றுள்ளன. கடந்த காலத்தில் இரண்டு புதிய அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1972ஆம் ஆண்டு முதற்தடவையாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு இரண்டவாது தடவையாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
இருப்பினும் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் அரசியல் கட்சிகள் அதில் பங்களிப்புக்களைச் செய்திருக்கவில்லை. அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளின்போது தமிழ் அரசியல் கட்சிகள் புறக்கணிப்பினையே செய்திருக்கின்றன. அவ்வாறிருக்கையில் வரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்றத்தில் வட்டமேசையில் அமர்ந்து புதிய அரசியலமைப்பிற்கான புது வரைபொன்றை தயாரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் அதிகாரப்பகிர்வுக்கு சம்மதம் தெரிவித்துள்ளன. முதற்தடவையாக பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைமைகளின் பங்கேற்புடன் அரசியலமைப்பிற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்னறன.
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தபோது ஆசிய மற்றும் உலக நாடுகளில் உள்ள அனைவரும் இலங்கையை முன்மாதிரியாக பார்த்தார்கள். உதாரணமாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் எங்களுடைய இலக்கு இலங்கையைப்போன்று வருவதாகும் என்று கூறின.
ஆனால் 1950களில் இனவாத அரசியல் தலைதூக்கியது. அதிகாரத்தினை தமதாக்குவதே பிரதான இலக்காக இருந்தது. யாரும் விரும்பாத ஆயுத கலாசாரம் தோற்றம் பெற்றது. தற்போது முப்பது வருடகாலம் வீணாக்கப்பட்டுள்ளது. தற்போது இனவாத அரசியல் சம்பந்தமாக அனைத்து கட்சிகளும் தம்மை மீட்டிப்பார்த்து ஒரு முடிவுக்கு வந்துள்ளன.
அதனடிப்படையிலேயே அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் வட்டமேசைக்கு வந்துள்ளார்கள் என்று . நான் நினைகின்றேன் அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட், செப்டம்பரில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அத்துடன் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நாம் திட்டமிட்டிருக்கின்றோம்.
இதேவேளை மீண்டும் ஒரு தடவை நான் பழைய பசுமையான நினைவொன்றை மீட்டிப்பார்க்கின்றேன். அதாவது நாங்கள் பாடசாலை மாணவர்களாக கல்விச் சுற்றுலா வந்த காலத்தில் யாழ்ப்பாணத்தின் சென்.பற்றிக்ஸ், சென்.ஜோன்ஸ் பாடசாலைகளின் விடுதிகளில் தான் தங்குவோம். அவர்கள் கொழும்புக்கு வருகின்ற போது அவர்களுக்கு கோட்டை புகையிரத நிலையத்தில் வரவேற்பினை நாம் வழங்குவோம். அவ்வாறானதொரு சகாப்தம் இருந்தது. அந்த சகாப்பதத்தினை மீண்டும் வெகுவிரைவில் உருவாக்க வேண்டும்.
இங்கு பல்கலைக்கழகத்தினை உருவாக்குவதற்காக நன்கொடையளித்த இந்தியாவிற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இங்கு யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இருக்கின்றார்கள். நான் அவரை இன்று தான் முதன் முதலில் காண்கின்றேன். அவருடன் தொலைபேசியில் பேசியது கூட இல்லை. ஆகவே எமது காலத்தில் எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இருக்காது. நீங்கள்(துணைவேந்தர்) திறப்பட உங்களது நிருவாகத்தினை முன்கொண்டு செல்லுங்கள் என்றார்.