இலங்கை கடற்பகுதியில் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உழவு இயந்திரம் ஊடாக கடற்றொழிலை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டபோது அது அனுமதி அல்ல, உழவு இயந்திரம் ஊடாக தொழிலை செய்து பார்க்கும்போது அதன் பாதிப்புக்கள் தொடர்பாக மக்கள் எமக்கு தெரியப்படுத்துவார்கள் அது பாதகமாக இருந்தால் அதனை நாங்கள் நிறுத்துவோம் என கூறி இந்த அனுமதி தற்காலிகமானது என்றே கூறப்பட்டது.
ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றளவும் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி தென்னிலங்கை மீனவர்களால் தொழில் செய்யப்பட்டு வருகின்றது.
இதேபோல் டைனமைற் பயன்படுத்தி மீன்பிடித்தல், வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற தடைசெய்யப்பட்ட தொழில்களும் செய்யப்பட்டே வருகின்றது.
இது தொடர்பாக பல தடவைகள் முறைப்பாடு கொடுத்தும் எந்தவிதமான பயனும் கிடைப்பதில்லை.
அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்காக செயற்படாமல் தென்னிலங்கை மீனவர்களுக்காகவே செயற்படுகின்றது.
மேலும் கொக்கிளாய் பகுதியில் கரைவலைபாடு தொடர்பான பிரச்சினை எழுந்தபோது அது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அந்த விடயம் இறுதியாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டது.
அவர்கள் முல்லைத்தீவில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தபோது மாவட்ட செயலர், கடற்றொழில் திணைக்களம் ஆகியன அங்கு சென்றிருக்கின்றன.
அங்கு சென்ற கடற்றொழில் திணைக்களம் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு சார்பாக செயற்படாமல் தென்னிலங்கை மீனவர்களுக்கு சார்பாகவே செயற்பட்டிருக்கின்றதெனவும் மரியராசா தெரிவித்துள்ளார்.