தமிழீழத்தில் அத்துமீறும் சாவக-ஹம்பேயர்கள் - கலாநிதி சேரமான்

Mannar demo 2

ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாகிய வடக்குக் கிழக்கின் குடிசனப் பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் கடந்த அறுபத்தொன்பது ஆண்டுகளாக சிங்கள அரசு முன்னெடுத்து வரும் சிங்களக் குடியேற்றங்களுக்கு நிகராக அண்மைக் காலங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகளால் முஸ்லிம் குடியேற்றங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
தமிழீழம் என்று 1922ஆம் ஆண்டு முதல் தமிழர்களால் அழைக்கப்படும் ஈழத்தீவின் இன்றைய வடக்குக் கிழக்கு மாநிலங்களும், புத்தளம் மாவட்டமும் ஐரோப்பிய ஏகாதிபத்திய படையெடுப்புக்களுக்கு முன்னர் தமிழ் அரசுகளினதும், சிற்றரசுகளினதும் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பகுதிகளாகத் திகழ்ந்தவையாகும். 1640ஆம் ஆண்டு ஈழத்தீவில் பணிபுரிந்த போர்த்துக்கேயத் தளபதியான கப்டன் ஜோவாவோ ரிபெய்ரோ அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூலில், ஈழத்தீவில் 1505ஆம் ஆண்டு முதன் முதலாகப் போர்த்துக்கேயர்கள் கால் பதித்த பொழுது தென்புலத்தில் இயங்கிய சிங்கள இராச்சியமாகிய கோட்டை இராச்சியத்திற்கு நிகராக வடபுலத்தில் யாழ்ப்பாண இராச்சியமும், மாந்தோட்டைச் சிற்றரசும், வன்னிமைகளும், கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய சிற்றரசுகளும் இயங்கியமை பதிவாகியுள்ளது.Mannar demo 2
இதற்கு முன்னர் 1344ஆம் ஆண்டு ஈழத்தீவிற்குப் பயணம் செய்த ஈபன் பற்றுற்றா என்ற மொறக்கோ தேசத்து வணிகர் ஒருவரின் வரலாற்றுக் குறிப்பில், ஈழத்தீவில் வலிமை வாய்ந்த அரசாக யாழ்ப்பாண இராச்சியம் விளங்கியதாகவும், சிலாபம் வரை வியாபித்திருந்த இவ் இராச்சியத்தில் தமிழர்களே வாழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் யாழ்ப்பாண இராச்சியத்திற்கு உட்பட்ட முந்தல் பகுதியில் (இன்றைய புத்தளம் மாவட்டத்தின் ஒரு பகுதி) அரபு தேசத்தைச் சேர்ந்த ஒரேயொரு இஸ்லாமியரை மட்டும் தான் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ் வரலாற்றுக் குறிப்புக்கள், புத்தளத்தையும், வடக்குக் கிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய இன்றைய தமிழீழ தாயகத்தின் பூர்வீகக் குடிகள் தமிழர்கள் மட்டுமே என்பதை உறுதி செய்கின்றன. ஏறத்தாள ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஈழத்தீவிற்கு அரபு வணிகர்கள் வந்து சென்றமையும், அவர்களில் சிலர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் முடித்தமையும் வரலாற்று ஆவணங்கள் சிலவற்றின் மூலம் தெரிய வருகின்ற பொழுதும், யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்தியின் இராச்சியத்தில் ஒரேயொரு அரபு முஸ்லிமைத் தவிர வேறு எந்த இஸ்லாமியரையும் தான் காணவில்லை என்று மொறக்கோ வணிகர் ஈபன் பற்றுற்றா எழுதியிருப்பதைப் பார்க்கும் பொழுது, தமிழீழத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன எனலாம். அதிலும் தன்னை மிகவும் அன்புடன் யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்தி உபசரித்தார் என்று ஈபன் பற்றுற்றா எழுதியிருப்பதானது, தமிழீழத்திற்கு வணிகர்களாக மட்டுமே முஸ்லிம்கள் வந்து சென்றார்கள் என்பதும், அப்படி வந்தோரும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் என்பதும் தெளிவாகின்றது.
ஆனால் 1734ஆம் ஆண்டில், ஒல்லாந்தரின் ஆட்சியில், யாழ்ப்பாணத்தில் வாழ்;ந்த மாதகல் மயில்வாகனப் புலவர் என்ற தமிழ்ப் புலவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலில் மட்டும் ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள தென்மிருசுவில், சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள், முகாவில் ஆகிய பகுதிகளிலும், பின்னர் வலிகாமம் நல்லூரிலும் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான குறிப்புக்கள் உள்ளன. அதுவும் இப்பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் இனரீதியில் தமிழர்கள் என்றும், இவர்கள் சந்தச்சாய்பு என்ற ஒருவரால் முஸ்லிம்களாக மதம் மாற்றம் செய்யப்பட்ட சைவர்கள் என்றும் யாழ்ப்பாண வைபவமாலையில் மயில்வாகனப் புலவர் எழுதியிருக்கின்றார்.
இன்று தமிழீழ தாயகத்திலும், மலையகத்திலும், தென்னிலங்கையிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பேசும் மொழி தமிழ். ஆனால் இவர்கள் தோற்றத்தில் வெவ்வேறு வகையானவர்கள். சிலர் தமிழர்கள் போன்று இருப்பார்கள். இன்னும் சிலர் சீனர்கள் போன்று இருப்பார்கள். ஏனையவர்கள் அரபு இனத்தவர்கள் போன்றும், ஆப்கானிஸ்தானியர் மற்றும் பாகிஸ்தானியர்கள் போன்றும் இருப்பார்கள். இதில் தமிழர்கள் போன்று இருப்பவர்களைத் தவிர ஏனைய தோற்றத்தைக் கொண்ட முஸ்லிம்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளம் காட்டிக் கொள்வதற்கு விரும்புவதில்லை. இதற்குக் காரணங்கள் உள்ளன.
முதலாவதாக சீனர்கள் போன்ற தோற்றத்தைக் கொண்ட முஸ்லிம்கள் இந்தோனேசியாவின் ஜாவா (சாவகம்) பிராந்தியத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். யாழ்ப்பாண வைபமாலை எழுதப்பட்டதற்குப் பின்னரான காலப்பகுதியில், அதாவது பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பின்னர், ஒல்லாந்தர்களால் ஈழத்தீவிற்குக் கொண்டு வரப்பட்ட இந்தோனேசியாவைச் சேர்ந்த மலாய் வம்சாவழி முஸ்லிம்கள் இவர்கள்.
இரண்டாவதாக அரபு இனத்தவர்கள் போன்றும், ஆப்கானிஸ்தானியர், பாகிஸ்தானியர் போன்றும் தோற்றத்தைக் கொண்ட முஸ்லிம்கள். பிரித்தானியர்களின் ஆட்சியில் வணிகத் தேவைகளுக்காக ஈழத்தீவிற்கு வருகை தந்த அரபு, பாகிஸ்தான், ஆப்கான் வம்சாவழியினர் இவர்கள். பிரித்தானியர்களின் ஆட்சியில் இவர்கள் அதிக அளவில் வந்திறங்கிப் புழங்கிய துறைமுகம், பின்னாளில் ஹம்பாந்தோட்டை எனப் பெயர்பெற்றது.
இந்த சாவக-ஹம்பேய முஸ்லிம்கள் பற்றி ஏற்கனவே 2014ஆம் ஆண்டு ஈழமுரசில் வெளிவந்த தொடர் பத்தியொன்றில் நான் எழுதியிருக்கின்றேன்.
இப்படியான சாவக-ஹம்பேயர்களின் வழித்தோன்றல்களே இன்று தமிழீழ தாயகத்திலும், ஈழத்தீவின் ஏனைய இடங்களிலும் வாழும் அனைத்து முஸ்லிம்களினதும், அதாவது தமிழ் வம்சாவழி முஸ்லிம்களினதும் அரசியல் தலைவர்களாகத் திகழ்கின்றார்கள். இந்துக்கள், கிறித்துவர்கள், முஸ்லிம்கள் என்று மூன்று மதங்களை பின்பற்றும் தமிழர்களிடமிருந்து இஸ்லாமியத் தமிழர்களைப் பிரித்தெடுத்து, அவர்களை ஏனைய (இந்து-கிறித்துவ) தமிழர்களுக்கு எதிராக இவர்கள் திருப்பி விட முற்படுகிறார்கள்.
இதில் இன்னுமொரு சூட்சுமமும் இருக்கின்றது. உலகெங்கும் பரந்து வாழும் இஸ்லாமியர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: சுன்னா, சியா, சுபி ஆகிய பிரிவுகளே அவையாகும். இதில் சுன்னா, சியா ஆகிய பிரிவுகள் முறையே அரபு, பாரசீக வழிமுறையிலான மார்க்கங்களாகும். ஆனால் சுபி இஸ்லாமிய பிரிவு இதிலிருந்து வேறுபட்டது. இவர்கள் அல்லாஹ்வைத் தமது தெய்வமாக வழிபட்டாலும், தென்னிந்தியாவில் இந்துக்கள் பின்பற்றும் வழிபாட்டு முறைகளை உள்வாங்கியே தமது வழிபாடுகளை மேற்கொள்கின்றார்கள். அதாவது இவர்கள் தமிழ்ப் பண்பாடு உட்பட தென்னிந்தியாவின் பண்பாட்டு முறைகளை உள்ளடக்கியே தமது சமய வழிபாடுகளை மேற்கொள்கின்றார்கள். இதில் ஈழத்தீவில் வசிக்கும் தமிழ்பேசும் முஸ்லிம்களில் தமிழர்கள் போன்ற தோற்றப்பாட்டைக் கொண்ட முஸ்லிம்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சுபி இஸ்லாமிய மதத்தவர்களாவர்.
தமது பெயர்களோடு தமிழ்ப் பெயர்களை இணைத்து வாழும் இந்த சுபி இஸ்லாமியத் தமிழர்களை ஈழத்தீவின் முஸ்லிம்களில் பெரும்பான்மையினரான சுன்னா மார்க்கத்தைச் சேர்ந்த சாவக-ஹம்பேயர்களுக்கு அறவே பிடிக்காது. அடிக்கடி தென்தமிழீழத்தில் முஸ்லிம்களிடையே நடக்கும் மோதல்கள், தமிழர்களான சுபி இஸ்லாமியர்களுக்கு எதிரான சுன்னா இஸ்லாமியர்களின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும். இவர்களின் நோக்கம் ஈழத்தீவின் முஸ்லிம்களின் வாழ்வில் இருந்து சுபி இஸ்லாமை இல்லாதொழிப்பதாகும்.
கடந்த காலங்களில் தென்தமிழீழத்தில் இந்து மற்றும் கிறித்துவ சமயங்களைச் சேர்ந்த தமிழர்களுக்கு எதிராக ஜிகாத் குழு என்ற பெயரில் இயங்கிய முஸ்லிம் ஊர்காவல் படையினரால் இழைக்கப்பட்ட படுகொலைகள் கூட தமிழர்களான சுபி இஸ்லாமியர்களுக்கும், இந்து-கிறித்துவத் தமிழர்களுக்கும் இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து, அதன் மூலம் சுபி இஸ்லாமியர்களைப் பலவீனப்படுத்தி, அதனூடாக சுபி இஸ்லாமை இல்லாதொழித்து ஈழத்தீவின் அனைத்து முஸ்லிம்களையும் சுன்னா இஸ்லாமியர்களாக்கும் நோக்கத்தைக் கொண்டவையாகும்.
இப்பொழுது தமிழீழத்தில் நிகழும் முஸ்லிம் குடியேற்றங்களைப் பார்ப்போம்.
தமிழீழம் என்பது தமிழர்களின் வரலாற்றுத் தாயகம் ஆகும். தமிழர்கள் சைவ வழிவந்த இந்துத் தமிழர்களாக இருந்தாலும் சரி, போர்த்துக்கேயரின் வருகைக்குப் பின்னர் கிறித்துவத்தைத் தழுவிய கிறித்துவத் தமிழர்களாக இருந்தாலும் சரி, யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிடப்படும் சந்தச்சாய்புவால் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்ட இஸ்லாமியத் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழர்கள் என்ற முறையில் இவர்கள் அனைவருக்கும் தமிழீழம் பொதுவான தாயகம். இதேநேரத்தில் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியில் தமிழீழத்தைத் தமது தாயகமாக வரித்துக் கொண்ட சாவக-ஹம்பேயர்கள், சிங்களவர்கள், பறங்கியர்கள் போன்ற தமிழீழத்தின் சிறுபான்மையினரையும் தமிழீழத்தின் குடிமக்களாகத் தமிழீழ தேசம் ஏற்றுள்ளது. இதனை சோசலிச தமிழீழம் என்ற கொள்கை விளக்க நூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
அதேநேரத்தில் தமிழீழத்தின் குடிசனப் பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் கடந்த அறுபத்தொன்பது ஆண்டுகளாகத் தமிழீழ தாயகத்தில் சிங்கள ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஊடாகக் குடியமர்த்தப்படும் சிங்களக் குடியேற்றவாசிகளையோ, அன்றி முஸ்லிம்கள் என்ற பெயரில் இப்பொழுது குடியமர்த்தப்பட்டு வரும் சாவக-ஹம்பேயர்களையோ தமிழீழத்தின் குடிமக்களாக எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழீழ தேசம் ஏற்றுக் கொள்ளாது.
வணிக, கல்வி மற்றும் தொழில் தேவைகளின் நிமித்தமும், உயிர்த் தஞ்சம் கோரியும் தத்தமது பூர்வீக நிலங்களை விட்டு மக்கள் புலம்பெயர்வதும், தாம் புலம்பெயர்ந்த நிலங்களில் அவர்கள் நிரந்தரமாக வாழ்வதும் இன்றைய உலகமயமாக்கல் சூழலில் வழமையாகிவிட்டது. அந்த வகையில் இவ்வாறான காரணங்களுக்காகத் தமிழீழத்திற்கு வருகை தரும் அல்லது குடியேறும் ஏனைய இனத்தவர்களை வரவேற்காது விரட்டியடிப்பதற்குத் தமிழர்கள் ஒன்றும் இனவெறி கொண்டவர்கள் அல்ல.
ஆனால் அதேநேரத்தில் தமிழீழத்தின் குடிசனப் பரம்பலை மாற்றியமைத்து, அதன் மூலம் தமிழீழத் தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்கு சிங்களவர்களோ, அன்றில் முஸ்லிம்கள் என்ற பெயரில் சாவக-ஹம்பேயர்களோ முற்படுவதை ஒரு காலத்திலும் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இன்று தமிழீழத்தில் சாவக-ஹம்பேய வம்சாவழி முஸ்லிம் அரசியல்வாதிகளால் அமுல்படுத்தப்படும் முஸ்லிம் குடியேற்றத் திட்டங்கள் இவ்வாறான நோக்கத்தைக் கொண்டிருப்பதன் காரணமாகவே இவற்றைத் தமிழர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றார்கள். இதனை தமிழீழத்தின் தமிழ் வம்சாவழி முஸ்லிம்கள் புரிந்து கொண்டு இவ்வாறான குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும்.
அவ்வாறு அல்லாது கடந்த காலத்தில் தென்தமிழீழத்தில் தமிழர்களை ஜிகாத் குழு அடிப்படைவாதிகள் கொன்றுகுவித்த பொழுது மத அடிப்படையில் சாவக-ஹம்பேயர்களின் இஸ்லாமிய மதவெறியைக் கண்மூடி வேடிக்கை பார்த்தது போன்று இம்முறையும் தமிழ் வம்வாசழி முஸ்லிம்கள் நடந்து கொள்வார்களாயின், ஏனைய தமிழர்களிடம் இருந்து தமிழீழத்தின் தமிழ் வம்சாவழி முஸ்லிம்கள் அந்நியப்பட்டுப் போகும் நிலையே ஏற்படும்.
முதல் முஸ்லிம் மாவீரன் லெப்.ஜுனைதீன் தொடக்கம் இறுதிப் போரில் மடிந்த லெப்.கேணல் குன்றத்தேவன் வரையான ஒவ்வொரு முஸ்லிம் புலிவீரர்களும் தம்மைத் தமிழீழ தேசத்தின் அங்கமாகக் கருதியே தமிழீழ தாய்மண்ணின் விடுதலைக்காகப் போராடித் தமது உயிர்களை ஈகம் செய்திருக்கின்றார்கள். இதனைப் புரிந்து கொண்டு இனியாவது தமிழ் வம்சாவழி முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும்.
நன்றி – ஈழமுரசு
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila