முயலோடும் வேட்டை நாயோடும் சேர்ந்தோட முடியாது –சிறீகாந்தா?

வாள் வெட்டு சம்பவங்களைச் சாட்டாக வைத்து, ஆயுதம் தாங்கிய இராணுவம் மக்கள் மத்தியில் களமிறக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதென தமிழீழ விடுதலை இயக்க செயலாளர் நாயகம் ந.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் இருந்து ஓடிப் போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ, அதே போல் யுத்தப் பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச் செயல்களில் எடுபட வாய்ப்பிருக்கின்றது. குற்றச் செயல்கள் எங்கு நடைபெற்றாலும் எமது எல்லா வளங்களையும் உள்ளேற்று அவற்றைத் தடுக்கவோ உரிய விதத்தில் நடவடிக்கை எடுக்கவோ வேண்டும்.
எனவே இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் ஒருவர், எது நடந்தாலும் அவர்களுடைய ஒத்துழைப்பை கோரக்கூடாது என்று அதற்கு அர்த்தமில்லை. அப்படியானால் எது நடந்தாலும் நாங்கள் சும்மா இருக்க வேண்டும் என்று பொருள்படும். மேலும் இராணுவத்தை அவசரத்துக்கும் அழைக்கக் கூடாது, அவர்கள் களமிறக்கப்படுவதை எதிர்க்க வேண்டும் எனக் கேட்பவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமானவர்களாகவே இருப்பரென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பதற்கே சிறீகாந்தா பதிலளித்துள்ளார்.
இத்தகைய கருத்துக்களை, ஓர் சராசரி அரசியல்வாதியோ அல்லது அரச அதிகாரியோ கூறியிருந்தால் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால், வடமாகாண தமிழ் மக்களின் பேராதரவுடன் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இக்கருத்துக்களைக் கூறுவது என்பது, மிகவும் பாரதூரமானது. ஜீரணிக்க முடியாதது.
கறுப்பு ஆடுகளும் கட்டாக்காலிகளும் எல்லா வட்டங்களிலும், எல்லா மட்டங்களிலும் உண்டு. ஆனால் அதற்காக ஒரு துறையில் உள்ள அனைவரும் அல்லது ஒரே வழி நடந்த அனைவரும் அப்படித்தான் என்று அர்த்தப்படுத்தக் கூடிய விதத்தில், அமையக் கூடிய எந்தக் கருத்தும் அபத்தமானது.
பல்லாயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கின்றார்கள். இளமையைத் தொலைத்துவிட்டு, இன்னல்களைச் சுமந்தபடி, அன்றாட வாழ்க்கையுடன் போராடிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு சங்கடத்தையோ அல்லது சஞ்சலத்தையோ ஏற்படுத்தக் கூடிய எந்தக் கருத்தும், அதை யார் கூறியிருந்தாலும், கண்டனத்திற்குரியது.
அதேநேரத்தில், விட்டு விட்டுத் தொடரும் வாள்வெட்டு சம்பவங்களைச் சாட்டாக வைத்து, ஆயுதம் தாங்கிய இராணுவம் மக்கள் மத்தியில் களமிறக்கப்படுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
கொலை, கொலை முயற்சி, கொள்ளை, கடத்தல், வன்புணர்வு போன்ற பாரிய குற்றச் செயல்கள் உட்பட, சகல குற்றங்கள் தொடர்பிலும் புலன் விசாரணை மேற்கொண்டு, சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் காவல்துறைக்கு உரியது.
ஆனால், தேசிய நெருக்கடி, உள்நாட்டு குழப்பம், இயற்கை அனர்த்தங்கள் அல்லது அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் போன்றவற்றால் நாட்டில் ஏற்படும் அவசரகால நிலைமை என்பனவற்றின் போது, நிலைமையை எதிர்கொள்ள காவல்துறையுடன்; சேர்த்து இராணுவம் மட்டுமல்ல, முப்படையினரும் சேவைக்கு அழைக்கப்படுவது அவசியமானது. நமது நாட்டுக்கு இது ஒன்றும் புதியது அல்ல.
ஆனால், யாழ் குடாநாட்டில் அங்குமிங்குமாக இடைக்கிடையே நிகழும் வாள்வெட்டுச் சம்பவங்கள், கோஸ்டி மோதல்கள் போன்றவற்றை எதிர்கொள்வதற்காக, இராணுவத்தை வரவழைப்பது என்பது அர்த்தமற்றது.
இராணுவம் தான் வந்தாக வேண்டும் எனில், காவல் படை என ஒன்று செயற்பட வேண்டிய அவசியம் கிடையாது. வேலி – வாய்க்கால் தகராறுகளுக்கும், விபத்து மற்றும் தற்கொலை மரணங்களுக்கும், போக்குவரத்து ஒழுங்குகளுக்கும் மாத்திரம் காவல்துறையின் சேவையை மட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
காவல்துறையால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. உடனடியாகத் தேவைப்படுவது எல்லாம், பொதுமக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் காவல்துறை பெற்றுக்கொள்வதே ஆகும்.
இதைவிடுத்து, வடக்கில் நிலைமை மிக மோசமாகப் போய்விட்டது என்ற தோற்றப்பாட்டைக் காட்டி, இராணுவத்தின் பிரசன்னத்தை நியாயப்படுத்த முயற்சிக்கும் தென்னிலங்கையின் அரசியல் தேவைகளுக்கு உதவக்கூடிய விதத்தில், தமிழ் மக்கள் மத்தியில் இருந்தே, அதுவும் மிகப் பொறுப்பு வாய்ந்த பதவிநிலையில் இருந்தே, தெரிந்தோ தெரியாமலோ வரும் கருத்துக்கள் கூட, எமது மக்களின் அபிலாசைகளுக்கு எதிரானதாகவே கருதப்படும்.
முயலோடு ஓடிக்கொண்டு, அதேநேரத்தில் வேட்டை நாயுடன் சேர்ந்து வேட்டையிலும் ஈடுபடுவது இயலாது என்பதை தெரிவித்தே தீரவேண்டுமெனவும் சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila