யாழ்ப்பாணக் குடாநாட்டின் அமைதியை குழப்புவதற்காக சதித்திட்டங்கள் அரங்கேறுவது தெரிகின்றது.
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களை நோக்கிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆரம்பிக்கப்பட்ட விவகாரம் இப்போது வேறொரு வடிவில் நகர்த்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
நேற்று முன்தினம் கொக்குவில் பகுதியில் வைத்து இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டு நடந்துள்ளது.
வாள்வெட்டு கோஷ்டி ஒன்று இப்பயங்கரச் செயலைச் செய்ததாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாண குடாநாட்டில் வாள்வெட்டு கோஷ்டிகளின் நடமாட்டத்தால் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வருகின்ற செய்திகளைப்பார்த்தால் வாள்வெட்டு என்ற செய்திக்கு குறைவே இல்லை எனலாம்.
அந்தளவுக்கு வாள்வெட்டு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்துள்ளன. இதற்கு மேலாக நீதிபதி இளஞ்செழியன் மீது நல்லூரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றி பொலிஸ் நிர்வாகம் விடுத்த முதலாவது அறிக்கை நீதிபதியை நோக்கி துப்பாக் கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெறவில்லை என்பது தான்.
தன்னை நோக்கியே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட நீதிபதி கூறும்போது, அதனை அவசரமாக மறுப்பதில் பொலிஸார் ஈடுபட்டமை பாதுகாப்புச் செயல் ஒழுங்கில் சில குழப்பங்கள் உண்டென்பதையே சுட்டி நிற்கிறது.
இதுதவிர, நேற்று முன்தினம் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை வாள்வெட்டு கோஷ்டி ஒன்று வெட்டியுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நீதிபதி மீது துப்பாக்கிச் சூடு, அவரின் மெய்ப் பாதுகாவலர் பலி, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள்வெட்டு என்ற சம்பவங்கள் சாதாரணமானவை அல்ல. இச்சம்பவங்களுக்கு பின்னணி உண்டு.
இதுதொடர்பில் தமிழ் அரசியல் தலைமை கூடி ஆராய வேண்டும். இவ் விடயத்தில் வெளி நாடுகளில் கரிசனையை ஏற்படுத்த வேண்டும்.
யாழ்ப்பாண குடாநாட்டில் ஓர் அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதே நடந்த சம்பவங்களின் பின்னணி என்பது உணரப்பட வேண்டும்.
அதேநேரம் இராணுவ பிரசன்னத்தை வட மாகாணத்தில் தொடர்ந்து மேற்கொள்வற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதான நிலைமையை உணர முடிகிறது.
எது எப்படியாயினும் யாழ்ப்பாண குடாநாட்டில் நடக்கின்ற இச்சம்பவங்கள் தொடர்பில் நாம் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும்.
நீதிபதி மீது துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மேற்கொள்கின்ற தினத்தன்று இராணுவத்தின் மீது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்ததாகவும் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றதுமான செய்திகள் வெளிவந்திருந்தன.
எனினும் அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தபோது அது வெறும் வதந்தி என செய்தியாளர்கள் அறிந்து கொண்டனர்.
இவ்வாறான வதந்திகள் எதற்கானது? அந்த வதந்திகளை தொடர்ந்து இப்போது நடக்கின்ற சம்பவங்கள் என்பன தொடர்பில் நிதானமாக ஆராய்ந்தால், யாழ்ப்பாண குடாநாட்டின் அமைதிக்கு பங்கம் வரக்கூடியதை உணர முடிகின்றது.
எனவே இது விடயத்தில் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.