வன்னிப் போரில் தாயையும் தந்தையையும் இழந்த பதின்மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் சில நாட்களுக்கு முன் மயங்கி விழுந்து மரண மானான் என்ற செய்தியை அறிந்ததில் இனம் புரியாத வேதனை வாட்டி வதைக்கிறது.
சீ... என்ன வாழ்க்கை என்று நினைக்கு மளவில் அந்தச் சிறுவனின் மரணம் நெஞ்சை எரித்துவிட்டது எனலாம்.
இதை எழுதும் போதும் கன்னத்தின் ஓரங் கள் நனைந்து கொள்கின்றன.
எவ்வளவுதான் ஆதரவும் அரவணைப்பும் இருந்தாலும் தாயும் தந்தையும் இல்லையே என்ற மனவேதனை அந்தப் பாலகனின் ஆன் மாவை வேரறுத்துவிட்டதோ என்று எண்ணு வது தவறன்று.
இத்தகையதொரு பரிதாபம் முல்லைத் தீவில் தமிழ்ச் சிறுவனுக்கு ஏற்பட்டதால்தான் உங்கள் பரிதவிப்பும் வேதனையும் என்று யாரும் நினைத்து விடாதீர்கள்.
மாறாக இதேகதி ஒரு சிங்கள சிறுவனுக்கு அல்லது இஸ்லாமிய பாலகனுக்கு ஏற்பட்டிருந்தாலும் இதேயளவு பரிதாபமும் வேதனையும் எம்மைச் சூழ்ந்திருக்கும் என்பது சத்தியம்.
ஆக, வன்னிப் போரில் தன் பெற்றோரை இழந்த பதின்மூன்று வயதுப் பாலகன் வீழ்ந்து இறந்து போனான் என்ற செய்தி சிங்கள ஊடகங்களில் இடம்பிடித்ததா?.
அது சிங்கள மக்களைச் சென்றடைந் ததா? அல்லது இதேசெய்தி தமிழின விரோதத்துடன் வேறுவிதமாக சிங்கள மக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டதா? என்பது நமக்குத் தெரியாது.
ஆனால் நாம் கேட்பதெல்லாம் இலங்கைத் திருநாட்டின் செல்வ மக்களால் வன்னிப் போரில் பெற்றோரை இழந்த 13 வயதுச் சிறு வன் நிலத்தில் வீழ்ந்து இறந்தான் என்ற போது ஏன் அது நடந்தது? என்று கேட்க வேண் டாமோ?
இந்த அவலத்தை அறிந்த போதேனும் இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, இந்த நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்ற சிந்தனை ஏற்பட வேண்டாமோ!
ஓ! பெளத்த தேரர்களே! உலகத்தில் மிகப் பெரிய துன்பம் இளமையில் பெற்றோரை இழத் தல்தான்.
கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது என்றார் ஒளவையார். அந்த ஒளவை யாரின் கூற்றில் பெற்றோரின் இழப்பு உள்ளடங்கியுள்ளது.
ஆம், வள்ளுவரின் சகோதரியாகிய ஒளவையை அவரது பெற்றோர்கள் பெற்றவுட னேயே கைவிட்டுச் சென்றதாகவே செய்தி சொல்லப்படுகிறது.
அப்படியானால் பெற்றோரின் இழப்பும் அத னூடனான வறுமையும் ஒளவையாரை வாட்ட இளமையில் வறுமை கொடிது என அவர் கூறியிருக்கலாம்.
நம்மைப் பொறுத்தவரை கொடிது கொடிது இளமையில் பெற்றோரை இழத்தல் கொடிது என்பதுதான்.
ஆக, இனியும் இனவாதம் பேசாமல் இந்த மண்ணில் நாட்டில் எல்லோரும் இன்புற்று வாழ வழி செய்வதே பொருத்துடையதாகும்.