இருபதாவது திருத்தச் சட்டம் நடக்கும் என்பார் நடக்காது - பனங்காட்டான்

20
இருபதாவது திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதோடு, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி நாட்டு மக்களின் அனுமதியைப் பெற வேண்டுமென்பதே உயர்நீதிமன்றம் எழுத்து மூலம் அறிவித்துள்ள தீர்ப்பு என்று தெரியவந்துள்ளது.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த முழுக்காலமும் அவரது உத்தியோகபூர்வ செயலாளராகவிருந்த லலித் வீரதுங்க, மகிந்தவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அவரது தோழர் அனு~ பலபிட்டி ஆகிய இருவருக்கும் ஊழல் மோசடி வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் தலா மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கியதால் ஏற்பட்டுள்ள அரசியல் அதிர்வலையில் மகிந்தவே சிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 36வது கூட்டத்தொடர் இந்த மாதம் 11ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானவேளை, அதன் ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் இலங்கை அரசின் சமகால நிலைப்பாடு மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக தெரிவித்த சில முக்கிய கருத்துகள் இலங்கை அரசை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
இலங்கை அரசியலமைப்பில் கொண்டு வரப்படவிருந்த இருபதாவது திருத்தச் சட்டத்தை மைத்திரி – ரணில் அரசு தாம் விரும்பியவாறு நிறைவேற்ற முடியாது, உயர்நீதிமன்றம் 14ம் திகதி வியாழக்கிழமை எடுத்ததாகத் தெரியவந்துள்ள முடிவினால் நல்லாட்சி அரசு இவ்விடயத்தில் முடக்க நிலைக்கு வந்துள்ளது.
இந்த மூன்று செய்திகளுமே கடந்த சில நாட்களின் பிரதான பேசுபொருட்களாக இலங்கை அரசியலில் அமைந்தன.
மகிந்தவின் ஆட்சியின்போது சகல வசதிகளையும் சலுகைகளையும் அனுபவித்தவர்களில் அவரது செயலாளர் லலித் வீரதுங்கவும் முக்கியமானவர். இவரது உறவினர்கள் பலர் பல பதவிகளையும் சலுகைகளையும் பெற்றது பற்றியும், வாகன இறக்குமதிகள் தொடர்பாகவும் லலித் வீரதுங்க பல மட்டங்களில் பேசப்பட்டவர்.
இவரும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் அனு~ பலபிட்டியும் சேர்ந்து 2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அறுபது கோடி ரூபாவைப் பயன்படுத்தி சில் துணிகளை முறையற்ற விதத்தில் விநியோகம் செய்தது தொடர்பான மோசடி வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர்.
இதனால் இருவருக்கும் தலா மூன்று வருட கடூழியச் சிறையுடன் ஐம்பது மில்லியன் ரூபாக்களுக்கும் அதிகமான அபராதமும் விதிக்கப்பட்டது.
இத்தீர்ப்பின் பிரகாரம் சிறைக்குள் தள்ளப்பட்ட இருவரும் மறுநாளே நீரிழிவு நோயைக் காரணங்காட்டி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இவர்களை அங்கு சென்று பார்வையிட்ட மகிந்த ராஜபக்ச மிகக் கொதிப்படைந்த நிலையில் பல கருத்துகளை ஊடகங்களுடன் பகிர்ந்தார்.
ஜனாதிபதி என்ற பதவி வழியாக தான் இட்ட கட்டளைகளை நிறைவேற்றிய அரசாங்க உத்தியோகத்தர்களை எவ்வாறு தண்டிக்க முடியுமென்று இவர் வெளியிட்ட கருத்து முக்கியமானது.
இதுதான் உண்மையென்றால் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மகிந்த ராஜபக்ச நீதிமன்றத்துக்குச் சென்று இதனைத் தெரிவித்து அந்தக் குற்றங்களை ஏற்றுக் கொண்டு ஏன் அவர்களை விடுவிக்கவில்லை என்று பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் இலங்கையின் சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனரத்ன.
மைத்திரி அரசினால் நிறைவேற்றப்பட்ட 19வது அரசியல் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கிருந்த சட்டப்பாதுகாப்பு நீக்கப்பட்டு விட்டது. எனவே 19வது திருத்தத்தின் அடிப்படையில் மகிந்த மேற்கொண்ட தவறுகளுக்காக அவர்மீது வழக்குத் தாக்கல் செய்வதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
நுணலும் தன் வாயால் கெடும் என்ற வாக்கியத்துக்கு உதாரணமாக, மகிந்த தன்னைத்தானே காட்டிக் கொடுத்து நெருக்கடிக்குள்ளாக்கியிருப்பது நன்றாகத் தெரிகிறது.
ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 36வது அமர்வில் அதன் ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் இலங்கை செய்யத் தவறியவைகளை பட்டியலிட்டார்.
இது அரச தரப்பினரை மட்டுமன்றி அனைத்து சிங்களவர்களையும் ஆத்திரமடைய வைத்துள்ளது. ஜெனிவா எங்களுக்கு உத்தரவிட முடியாதென்று அமைச்சர் கிரியெல்ல தெரிவித்திருப்பதனூடாக இதனை உணர முடிகிறது.
“காணாமல் போனோர் பணியகத்தை சிறிலங்கா உடனடியாகச் செயற்படுத்த வேண்டும், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாக இழுபறியிலுள்ள வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக அனைத்துலக மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்” என்று சுட்டிக்காட்டியுள்ள ஆணையாளர், வடக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நடத்தும் போராட்டங்கள் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஏமாற்றத்தை தருவதை சுட்டிக்காட்டுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்த இன்னொரு கருத்து முக்கியமானது. “இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவதை மனித உரிமைகள் பேரவையைச் சமாதானப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக அரசாங்கம் கருதாமல், சகல மக்களுக்கும் உரிமைகளை வழங்குவதற்கான அவசியமான கடமையாக மேற்கொள்ள வேண்டும் என்பது இவர் சுட்டிக்காட்டியுள்ள கருத்து.
மனித உரிமை ஆணையாளர் இவ்வாறு கருத்து வெளியிட்ட அன்றிரவே காணாமல் போனோர் அலுவலகத்தை உடனடியாக நிறுவும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையொப்பமிட்டது கவனிக்கப்பட வேண்டியது.
ஆணையாளர் சுட்டிக்காட்டிய பல விடயங்களை மூடிமறைத்து அதில் ஒன்றை அன்றிரவே செய்துவிட்டதாகக் காட்டும் இலங்கை அரசின் முயற்சி ஜெனிவாவை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையென்பது எல்லோருக்கும் தெரிந்தது.
அடுத்து, இவ்வாரத்தில் முக்கியமாக இங்கு பார்க்கப்பட வேண்டிய விடயம், கடந்த சில நாட்களாக சகல தரப்பிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த இருபதாவது திருத்தச் சட்டம்.
உயர்நீதிமன்றத்தில் பன்னிரண்டு பேர் இந்தச் சட்டத்திருத்தத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் பதினான்காந்திகதி வியாழக்கிழமை எழுதிவிட்டது என்று வெளியில் அதிகாரபூர்வமாக வராத செய்தியை இங்கு கவனிக்கலாம்.
மூன்று நீதியரசர்களும் இந்தத் தீர்ப்பை ஜனாதிபதிக்கும், நாடாளுமன்ற சபாநாயகருக்கும் வியாழக்கிழமையே அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
உறுதிப்படுத்தப்படாவிட்டாலும் ஐயத்துக்கிடமின்றி உண்மையென இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.
அனேகமாக பத்தொன்பதாம் திகதி செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடாளுமன்றத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை அறிவிப்பாரென்று கூறப்படுகிறது.
இருபதாவது திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதோடு, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி நாட்டு மக்களின் அனுமதியைப் பெற வேண்டுமென்பதே உயர்நீதிமன்றம் எழுத்து மூலம் அறிவித்துள்ள தீர்ப்பு என்று தெரியவந்துள்ளது.
தெற்கில் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அரசாங்கத்துக்குச் சாதகமாகக் காணப்படவில்லை.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றதில் ஐக்கிய தேசிய கட்சி 105 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. சுதந்திரக் கட்சியின் 96 உறுப்பினர்களில் 52 பேர் மகிந்தவுடன் இணைந்து கூட்டு எதிரணியில் செயற்படுகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 பேரும் இந்த இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தாலும் சிலவேளைகளில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவது அரசாங்கத்துக்கு ஒரு பலப்பரீட்சையாக அமையலாம்.
சர்வஜன வாக்கெடுப்பென்பது எப்போதுமே சாதகமாக அமைய மாட்டாதென்பது நல்லாட்சியினருக்கு நன்றாகத் தெரியும்.
இப்படியான சூழலில் இருபதாவது திருத்தத்தை கைவிடுவதைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு வழியில்லை.
தோல்வி வருமென நினைக்கும் ஒரு விடயத்தில் வி~சப்பரீட்சை நடத்தி தலைகுனிய மைத்திரியோ ரணிலோ விரும்ப மாட்டார்கள்.
தங்களின் திருத்தங்கள் ஏற்கப்பட்டதால் இருபதாவது திருத்தத்தை ஆதரிப்பதென கூட்டமைப்பு விடுத்த அறிக்கை அவசர குடுக்கைத்தனமானதாக மாறிவிட்டது.
கூட்டமைப்பில் இருக்கும் தோழமைக் கட்சிகள் கூட்டமைப்பு தன்னிச்சையாக எடுத்த முடிவை கண்டித்து அறிக்கைகள் விட்டதையும், கூட்டமைப்பின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு கேட்டதும் கூட்டமைப்புக்குள் இருந்து வந்த நெருக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இருபதாவது திருத்த விடயத்தில் வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எடுத்த தீர்க்கமான நிலைப்பாடு மிகச்சரியானதென்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிழக்கு மாகாணசபை கூட்டமைப்பின் ஆதரவு முடிவை நம்பி, தாமும் ஆதரிக்கும் முடிவை எடுத்து மக்கள்முன் தலைகுனியும் நிலக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அடுத்த சில வாரங்களில் ஆயுட்காலம் முடியவிருக்கும் கிழக்கு மாகாணசபை உட்பட மூன்று மாகாணசபைகளுக்கும் விரைவில் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பால் ஏற்பட்டுள்ளது.
ஆட்சியமைப்பில் இப்போது ஒன்றாக இயங்கும் ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை கிழக்கு மாகாணசபைத் தேர்தல் களத்தில் ஒன்றுக்கொன்று நேரடியாக மோதும் மல்யுத்தத்தை அங்கு வாழும் மக்கள் பார்க்கப்போவது விநோதமான அதிசயமாக இருக்கும்.
அரசியல் என்பதே இதுதான். நடக்கும் என்பது நடக்காது, நடக்காதென்பது நடந்துவிடும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila