போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்கள் உள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளமை அரசாங்கத்துக்குள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் மற்றும் கொலம்பியாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டு வழக்கு விவகாரம் சர்வதேச நெருக்கடிக்குள் மீண்டும் இலங்கையை தள்ளிவிட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன அமெரிக்கா செல்லவுள்ள நிலை யில் அதற்கு முன்னர், போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பேச்சுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தன . இதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்த போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை கடந்த 8 ஆண்டு காலமாக நிராகரித்து வந்தது.
முன்னாள் ஜனபதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படாத நிலையில் மேற்குலக நாடுகளின் விமர்சனத்திற்கும் இலங்கை உட்பட்டது. ஆனால் தற்போது இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ள நிலையில் சர்வதேசத்துக்கு முற்றிலும் மாறுபட்ட நம்பிக்கைக்கு உரிய வெளிப்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் வெளிப்படுத்தியது.
இதனால் கடந்த காலங்களில் கடும் நடவடிக்கைகளுக்கு வலியுறுத்திய பல நாடுகள் , இலங்கை மீது மென்மையான போக்கைக் கடைபிடிக்க ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக கொள்கையில் இலங்கை விடயங்களை கையாண்டது. இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மை நிலைமைகளைக் கண்டறியவும் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தவும் குறிப்பிட்ட கால எல்லையை சர்வதேசம் இலங்கைக்கு வழங்கியது.
இன்னும் ஓரிரு வாரங்களில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டம் மற்றும் ஐ. நா. மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் என்பன ஆரம்பமாக உள்ளன. இந் நிலையிலேயே இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் வகையில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளதாக ச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
மேலும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, பிரேசிலில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே சரத் பொன்சேகா குற்றம் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசாங்கத்திற்குள்ளும் கடும் கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தலைமையிலான, மனித உரிமை அமைப்புகள் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக போர்க் குற்ற வழக்கை தாக்கல் செய்துள்ளன. 2007ஆம் ஆண்டு தொடக்கம் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற 2009ஆம் ஆண்டு வரை ஜெனரல் ஜெகத் ஜயசூரிய வன்னி படைகளின் தளபதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் உள்ள ஜோசப் முகாமில் இருந்து இவர் இராணுவ நடவடிக்கையை மேற்பார்வை செய்ததாக போர் குற்றவழக்கில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவின் மேற்பார்வையில் இருந்த இராணுவப் பிரிவுகளால், மருத்துவமனைகள் , குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும், காணாமல் ஆக்கப்பட்டதாகவும், சித்திரவதை செய்யப்பட்டதாகவும் இந்த வழக்கில் மேலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜெகத் ஜயசூரிய பிரேசில் மற்றும் கொலம்பியா, பெரு, சிலி, ஆர்ஜென்ரீனா மற்றும் சூரினாம் ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே பிரேசில் மற்றும் கொலம்பியாவில் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை இராஜதந்திர ரீதியில் நட்பு நாடுகளின் ஒத்துழைப்புகளுடன் எதிர்கொள்ள முடிந்தாலும் ,உள்நாட்டில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய குற்றம் செய்ததற்கான ஆதாரம் உள்ளதாக பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளமை குறித்த வழக்கிற்கு வலுசேர்ப்பதுடன் சர்வதேச குற்றச்சாட்டுக்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது போன்றுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது .