சமஷ்டி கேட்பதற்கான காரணம் இது தான்! விக்னேஸ்வரன்

கிருஷாந்தி குமாரசுவாமிக்கு ஏற்பட்டது போன்ற அவலங்கள் இனி மேலும் இடம்பெறாமல் இருப்பதற்கே சமஷ்டி முறையிலான சுயாட்சியை கோருவதாக வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணியில் வைத்து இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது
வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கிருஷாந்தி குமாரசுவாமியை நினைவுகூரும் நிகழ்வுகளும் செம்மணியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் இதன் போது நினைவு கூரப்பட்டு அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை முன்னிட்டு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த உரையை, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வாசித்தார்.
1996 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதி விட்டு, வீடு திரும்பிய கிருஷாந்தி குமாரசுவாமி கைதடி காவலரணில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து ஒன்பது இராணுவத்தினரும் இரண்டு பொலிஸாரும் அடங்கலாக பதினொரு பேர் கிருஷாந்தியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்திருந்தனர்.
கிருஷாந்தி கைது செய்யப்பட்டமை குறித்து விசாரிப்பதற்காக சென்றிருந்த அவரது தாயார் இராசம்மா, சகோதரர் பிரணவன் மற்றும் அயல்வீட்டுக்காரரான சிதம்பரம் கிருபா மூர்த்தி ஆகியோரையும் இராணுத்தினர் கொலை செய்திருந்தனர்.
முதலமைச்சர் அனுப்பி வைத்திருந்த உரையில்,
கிருஷாந்தி குமாரசுவாமிக்கு ஏற்பட்டது போன்ற அவலங்கள் இனி மேலும் இடம்பெறாமல் இருப்பதற்கே சமஷ்டி முறையிலான சுயாட்சியை கோருகிறோம்.
இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்கான அடையாளமாக கிருஷாந்தி குமாரசுவாமியின் பாலாத்காரமும் படுகொலையும் அமைந்துள்ளது.
செம்மணி, அன்று ஒரு திறந்தவெளி கொல் களமாக மாற்றப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு போர்வை அணிந்தவர்களே பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேசம் உத்தரவாதம் வழங்காததால் கிருசாந்தியின் படுகொலைக்கு நிகரான சம்பவங்கள் வடக்கு, கிழக்கில் மேலும் இடம்பெறும் சாத்தியங்கள் உள்ளதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.
இதில் உரையாற்றிய வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு, கிழக்கில் அரச படையினரால் அரங்கேற்றப்பட்ட ஒவ்வொரு படுகொலைகளையும் ஒவ்வொரு தமிழனும் நினைவுகூர வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவரகள் 21 பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் 63 மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila