இலங்கையில் தமிழர் அரசியல், சிங்கள அரசியல், சிங்களவரும் தமிழரும் சேர்ந்த அரசியலென எல்லாமே எதிர்பாராத அல்லோலகல்லோல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
எல்லாச் செயற்பாடுகளின் பின்னாலும் பெரும் கேள்விக்குறியொன்று தொக்கிநிற்கிறது.
தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் முற்றுப்பெற முடியாதவையாக நீண்டு செல்கின்றன.
காணாமற்போனோர் தொடர்பாக அவர்களின் உறவினர் நடத்தும் போராட்டம், இராணுவம் அத்துமீறி ஆக்கிரமித்து வைத்திருக்கும் தங்கள் சொந்தக் காணிகளை மீட்டெடுக்க அதன் உரிமையாளர்கள் நடத்தும் போராட்டம் என்பவை எண்ணிக்கையில் பல மாதங்களைக் கடந்துவிட்டன.
வெளிநாடுகளின் பிரமுகர்கள், ஐ.நா. பிரதிநிதிகள், தமிழர்களின் தலைவர்கள் என்று கூறப்படுபவர்கள், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் இவர்களைச் சந்தித்து உரையாடியும் உறுதியான பலனெதுவும் கிடைக்கவில்லை.
காணிகள் மீளளிப்பைப் பொறுத்தளவில் ஆங்காங்கு சில இடங்களில் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளன.
காணாமற்போனவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எவரும் தங்களிடம் இல்லையென்று அரசாங்கம் கைவிரிக்கிறது.
அப்படியாக எவராவது எங்காவது இருக்கிறார்களென்று தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கத் தயாரென்று ஏமாற்றுத்தனமான பதிலளித்துள்ளார் ஜனாதிபதி.
இது ஒருவகையான பந்தடிக்கும் அரசியல் விளையாட்டு.
தமிழரின் போராட்டங்களுள் இப்போது தலையானதாக மாறியுள்ள உயிர்ப்பிரச்சனை அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தப்பட்டது. இதுபற்றி இக்கட்டுரையின் பிற்பகுதியில் பார்ப்போம்.
ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இழுபட்ட புதிய அரசியலமைப்புக்கான அறிக்கையானது, இடைக்கால அறிக்கை என்ற பெயரில் வெளிவந்து சில வாரங்களாகிவிட்டது.
கிட்டத்தட்ட ஷசிசேரியன்| பிரசவம் போன்றது இது வெளிவந்த முறைமை.
இந்த அறிக்கையில் தமிழரின் அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கு எதுவுமே இல்லையென்று சகலரும் சொல்லிவிட்டனர்.
ஷசகலரும்| என்று இங்கு குறிப்பிடுவது தமிழர் தரப்பில் எவரது ஆதரவையும் இந்த அறிக்கை பெறவில்லை. அனைவரும் அடியோடு நிராகரித்துவிட்டனர்.
சிங்களத்தரப்பாவது இதனை ஏற்றுக் கொண்டதா? அதுவும் இல்லை. நாட்டை பிரித்துக் கொடுப்பதற்கான ஆரம்பம் இதுவென்று சிங்களத் தரப்பு சொல்கின்றது.
1970களில் முதலில் சிறிமாவோவும், பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் நிறைவேற்றிய இரண்டு அரசியல் அமைப்புகளும் தமிழர்களின் பங்கேற்பின்றி, சிங்களவரின் பூரணமான அங்கீகாரத்துடன் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டவை.
ஆனால், இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய அரசியலமைப்புக்கு இரண்டு தரப்புமே எதிர்ப்பாக இருப்பதும் ஏற்றுக் கொள்ள மறுப்பதும்தான் விநோதமானது.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைப்பது போன்று அதிரடி அறிவிப்பொன்றை, அஸ்கிரிய – மல்வத்த பௌத்த பீடங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன.
இந்த மாதம் 18ம் திகதியன்று மேற்படி இரண்டு பீடங்களின் செயற்குழுக்களும் ஒன்றுகூடி ஆராய்ந்தபின்னர் விடுத்த அறிக்கையில், “நாட்டில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கோ அல்லது அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கோ தேவையேதும் ஏற்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தேவையற்றது” என்று அறிவித்துள்ளன.
அனேகமாக, பௌத்த பீடங்களின் முடிவு சிங்கள மக்களிடையே அவர்களுக்குச் சாதகமான கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்தும் சூழலே காணப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் பொதுத் தேர்தலின்போதும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு வாக்குப் பெற்று தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த வேளையில் இரண்டு பௌத்த பீடங்களும் ‘கும்பகர்ண படலத்தில்| (ஆழ்ந்த நித்திரையில்) இருந்தார்களா என்று கேட்க விரும்புவதில் பிழையிருக்க முடியாது.
இலங்கையின் அரசாட்சி என்பது நாடாளுமன்ற அதிகாரம், நீதிச்சேவை அதிகாரம், நிறைவேற்று அதிகாரம் என்ற மூன்றும், சிங்கள பௌத்த பீடங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்ற எழுதாத சட்டத்துள் இருக்கும்வரை இவர்களின் சர்வாதிகார முடிவே சிங்கள அரசாங்கங்களின் முடிவானதாக அமைவது வழக்கம்.
நிகழ்காலமும் சிங்கள பௌத்த அதிகாரத்துக்குட்பட்டதாக இருக்குமாயின் இடைக்கால அறிக்கை, இடைக்கால அறிக்கையாகவே மாண்டுவிடும். புதிய அரசியலமைப்பு என்பது கருச்சிதைவு கண்டுவிடும்.
தற்போது தலைதூக்கியிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சனையை இனிப் பார்ப்போம்.
வவுனியா நீதிமன்றத்தில் வழக்கை எதிர்நோக்கி அங்குள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளை திடுதிப்பென அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றியதால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது.
தங்களை மீண்டும் வவுனியாவுக்கு இடம்மாற்றுமாறு கூறி இவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவான போராட்டம் பல இடங்களுக்கும் பரந்து விரிந்து வியாபித்துள்ளது.
வழக்கின் சாட்சிகளான சிங்களப் படையினரின் பாதுகாப்புக் கருதியே வழக்குகள் அநுராதபுரம் மாற்றப்பட்டதாக அரச தரப்பினால் முன்னர் கூறப்பட்டது.
ஆனால், வழக்கினை துரிதமாக விசாரணை செய்து முடிப்பதற்காகவே அநுராதபுரம் மாற்றப்பட்டதாக சட்ட விவகார அமைச்சர் கூறியுள்ளார்.
இரண்டு கருத்துகளுக்கும் இடையேயான வேறுபாட்டை இங்கே கவனிக்கலாம்.
இக்கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இந்த மாதம் 12ம் திகதி வெளியிட்ட அறிக்கையொன்றில் சுட்டிக் கூறிய பின்வரும் கருத்து இங்கு உற்றுநோக்க வேண்டியது:
“தாம் பிடித்துக் கைதிகளாக வைத்திருந்த படையினரை யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் கொலை செய்தார்கள் என்பதை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நிரூபித்துக் காட்டவும், யுத்த இறுதியில் சரணடைந்த புலிகளைப் படையினர் கொன்றனர் என்ற குற்றச்சாட்டையும் அதனால் எழுந்துள்ள சர்வதேச அழுத்தத்தையும் இதன் மூலம் நீர்த்துப் போக வைக்கவும் இந்த சதிமுயற்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கும் திரு. விக்கினேஸ்வரன், உயர்நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றிய நீதித்துறை அனுபவஸ்தர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
கடந்த 13ம் திகதி அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் பூரண கடையடைப்பு நடைபெற்றது. பாடசாலைகள், அரச அலுவலகங்கள் மட்டுமன்றிப் பொதுப்போக்குவரத்துகளும் இடம்பெறவில்லை.
மறுநாள் 14ம் திகதி அகில இலங்கை தமிழ் தின விழாவில் பங்குபற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் சென்றபோது வழியெங்கும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அவ்வழியாக விழா அரங்குக்குச் சென்ற ஜனாதிபதி, ஆர்ப்பாட்டக்காரர்கள் நடுவே தமது வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று அவர்களிடம், “உங்கள் பிரச்சனை என்ன” என வினவினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்னவென்பதை ஏற்கனவே நன்கு தெரிந்திருந்தும், எதுவுமே தெரியாதது போலவும் மக்களின் ஜனநாயக சுதந்திரத்தை மதிப்பது போலவும் அவர் இங்கு நடத்திய ஒரு குறுநாடகம் இது.
ஆக்ரோசத்துடன் நின்ற மக்கள் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிக் கூறியபொழுது, “வாருங்கள் பேசுவோம்” அவர் விடுத்த அழைப்பை அவர்கள் உடனடியாகவே நிராகரித்து விட்டனர்.
உடனடித் தீர்வு தேவையேயன்றி தொடரும் பேச்சுவார்த்தை கால இழுத்தடிப்புக்கானது என்பதை தமிழர் தரப்பு நன்கறியும்.
தென்னிலங்கை ஊடகங்களுக்குப் படம் காட்டவும், சர்வதேச அரங்குக்கு ஷஜனநாயக முகம்| காட்டவும் மைத்திரிபால சிறிசேன நடத்திய குறுநாடகம் பிசுபிசுத்துப் போனது. இருப்பினும் அவர் இதனை அத்துடன் நிறுத்தவில்லை.
தமிழ் தின விழாவில் அவர் பேசும்போது, “என்னைப் பலவீனப்படுத்தினால் பேய்களுக்குத்தான் பலம் கூடும். அவை தலைவிரித்தாடும்” என்று கூறி தமிழ் மக்களுக்கு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்த முனைந்தார்.
பேய் என்று இவர் குறிப்பிட்டது மகிந்த ராஜபக்சவையே. அந்தப் பேயின் கூட்டத்தில் ஒருவராக பத்தாண்டுகள் ஆட்சி மையத்தில் இருந்த ஒருவரே இவர் என்பதால், இவரும் ஒரு பேயாக அல்லது பிசாசாகவே இருப்பார் என்பதை தமிழர்கள் அறியாதவர் அல்லர்.
முள்ளிவாய்க்கால் யுத்தவேளையில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சிறிசேன, இப்போது பெரிய பேய் பற்றிக் கதை அளப்பது வேடிக்கையானது.
இந்த சிங்களப் பேய்களும் பிசாசுகளும், தமிழரைப் பொறுத்தளவில் என்றென்றும் சாத்தான்களே!