ஈழம் கோரிய விடுதலைப் புலிகள்.. சிறைக்கம்பிகளுக்குள் நெரிக்கப்படும் கூட்டமைப்பு!! விடுதலை பெறுவார்களா கைதிகள்?

இறுக்கிப் பிழியும் அரசியல் கைதிகளின் குரல்கள் ஈமானிய நெஞ்சங்களின் செவிகளை இன்னும் எட்டவில்லையா? உண்மையில் யார் இந்த அரசியல் கைதிகள்? தாய் மண்ணை தாரை வார்த்தவர்களா அல்லது விடுதலை வேண்டும் என்று துடிக்கும் விடுதலைப் புலிகளா? நீண்டகாலமாகவே விசாரணைகள் எதுவுமின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவே சென்று கொண்டிருக்கின்றது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களால் நம்பிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் நம்பிக்கை, வாக்குகள் வழங்கப்பட்டிருந்த அளவிற்கு விடயங்கள் எதுவும் விரைவாக இடம்பெறவில்லை.
இவ்வாறானதொரு பின் புலத்தில்தான் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் 21 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளான ம.சுலக்சன், க.தர்சன், இ.திருவருள் ஆகியோரின் வழக்குகள் வவுனியா நீதிமன்றத்திலிருந்து அனுராதபுரம் நீதிமன்றுக்கு உரிய காரணங்களின்றி மாற்றப்பட்டுள்ளன.
இதனால், அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனை கண்டித்து. தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 19 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அது மட்டும் இல்லை தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் தீர்வு கிடைக்க வேண்டும் என்று கோரி வட, கிழக்கு மாகாணங்களில் போராட்டங்கள்,ஹர்த்தால் என்பன முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இதனால், வட,கிழக்கு மாகாணங்கள் முடங்கியுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, கிளிநொச்சி, மன்னார் உள்ளிட்டப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால் காரணமாக அந்தப் பகுதி முற்றாக செயலிழந்துள்ளது.

எல்லாவற்றையும் இழந்து அடிமைகளாக வாழும், உண்மை தமிழர்கள்தான் இன்று அரசியல் கைதிகள். விடுதலையை எதிர்பார்த்து எதிர்பார்த்தே வருடக்கணக்கில் தங்கள் வாழ்க்கையைச் சிறைச்சாலைகளில் கடத்தி விட்டனர்.
எஞ்சியுள்ள வாழ்க்கையையேனும் நிம்மதியாகக் கழிக்கலாம் என்ற அவர்களின் எதிர்பார்ப்பும் கானல் நீராகிக் கொண்டேயிருக்கின்றது. உண்மையில் அவர்கள் செய்த குற்றம்தான் என்ன?
போராட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதுடன், அவர்களின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. ஆனால், நல்லாட்சி அரசில் இது தொடர்பான எவ்வித சமிக்ஞையும் புலப்படாதிருப்பது தமிழ் மக்களை மேலும் விரக்தியடையச் செய்துள்ளது.

தற்போது யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்து விட்டது. நல்லாட்சி மலர்ந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. ஆனால் அரசியல் கைதிகளின் சிறைக்கதவுகள் மட்டும் திறக்கப்படவில்லை.
நாட்டில் இடம்பெற்ற மோதல்களின் போது விடுதலைப் புலிகள் என்ற பெயராலும், விடுதலைப் புலிகளின் ஆரதரவாளர்கள் என்ற பெயராலும் பலர் கைது செய்யப்பட்டு எந்த ஒரு விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் முன்னால் புலி போராளிகளாக இருந்தாலும் கூட அன்று தனி ஈழம் கோரியிருக்கலாம், ஆனால் இன்று விடுதலையை மட்டும்தான் கோரி அரசியல் கைதிகளாக போராடுகின்றனர்.
வவுனியாவில் இருந்து வழக்குகள் மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகள் 58 தடவைகள் வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டு விசாரணை செய்யப்படவில்லை என்று வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது திடீரென்று வழக்கினை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக அறிவித்துள்ளனர். இதனை எதிர்த்து தான் அவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார்.
இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்.. தொடர் இழுத்தடிப்புகள் கூட அரசியல் கைதிகள் விடுதலை பற்றி அரசு கண்டுக் கொள்ளாததைதான் எடுத்துக் காட்டுகின்றது.
அரசியல் கைதிகளின் விடயத்தில் உரிய தீர்வை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழ் மக்கள் போராட்டங்களையும், விசேட வழிபாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
நல்லிணக்கத்தை அரசாங்கம் வெளிப்படுத்துகின்றது என்றால் எவ்வித நிபந்தனைகளுமின்றி அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். ஆனால் அரசு மௌனம் காக்கின்றது.
இங்கு ஒட்டு மொத்த தமிழர்களும் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும், ஆட்சி மாற்றத்தின் பின்னரான சூழலிலும் கூட தமிழன் ஒவ்வொரு விடயத்திலும் போராடிக் கொண்டிருக்கின்றான்.
தமிழ் மக்களை இன்னும் இரண்டாம் நிலையாக பார்க்கின்ற கொள்கையாகவே, இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றது. வெறுமனே கண்துடைப்பு ஏற்பாடாக வழங்கப்பட்ட எதிர்கட்சி பதவியும், தற்போது செயலிழந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.
அவ்வாறாயின் ஆட்சி மாற்றத்தின் பொருள் என்ன? விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட பல வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த கருணா போன்றவர்களுடன் ஒப்பிடும் போது சிறையில் வாடும் அரசியல் கைதிகள் சாதாரணமானவர்கள்தான்.
ஒழித்து விடவும், மறைத்து வைக்கவும் தமிழன் என்ன கூண்டுக் கிளிகளா? மண்ணில் விழுந்தாலும் வெடித்து துளிர்விட்டு மரமாய் வளர்ந்து நிழல்கொடுக்க நினைக்கும் வீரிய விதைகள்.
சிறையில் விடுதலைப் புலிகளாக அல்ல விடுதலைக்காக காத்திருக்கின்றான். அரசியல் கைதிகளை நிரந்தர கைதிகளாக மாற்றாமல், சிந்தித்து செயல்படுவது தமிழ் மக்களின் அனைவரது பொறுப்பாகும்.
கைதிகள் விடயத்தில் அரசு தாமதப்படுத்துமாக இருந்தால் தமிழ்மக்கள் மத்தியில் பதற்றம் அதிகரிக்கும். போராட்டங்களுக்கான கதவுகள் அகலத்திறந்திருக்கும், இதனை தமிழர்கள் பயன்படுத்துவதற்கான காலத்தை குறித்து கொண்டிருக்கின்றார்கள்.
சரியாக பயன்படுத்துவார்களாக இருந்தால் யுத்த வெறியை கொண்டாடிய இராணுவம் சீற்றம் அடையும். நல்லாட்சி ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறும். ஒட்டு மொத்த விளைவும் கூட்டமைப்புக்கு தலையிடியாக வந்து விழும்.
அப்போதும், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லாட்சி அரசு தடுமாறும்... அதன் பின்னர் தமிழ் மக்களின் விடயத்தில் மட்டும் எப்படி நீதியை நிலை நாட்டும்?
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila