சுற்றுச்சூழல் சுகாதாரம் பற்றி அதிகூடிய கவனம் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
டெங்கு நுளம்புப் பெருக்கம் முதல் தொற்று நோய்களின் அதிகரிப்புவரை எல்லாமும் மக்கள் சமூகத்தை அச்சுறுத்துகின்றது.
கூடவே கழிவகற்றல் முகாமைத்துவம் இன் னமும் விரிவுபடாமல் உள்ளது.
வீட்டுக்கழிவுகளை தெருக்களில் கொட்டி விட்டு தங்களின் வேலை முடிந்துவிட்டதாக நினைப்பவர்கள் இன்னமும் நம் மத்தியில் பெருவாரியாக இருக்கின்றனர் என்பதை நினைக்கும்போது நெஞ்சு பொறுக்கவில்லை.
இவை ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் தெரு நாய்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் உள்ளது.
தெரு நாய்க்கடி, தெரு நாய்களால் ஏற்படும் விபத்துக்கள், வீதிகளில் எச்சம் போடும் அசிங் கம், வீதி ஓரங்களில் கிடக்கும் கழிவுகளை இழுத்து வந்து நடுவீதியில் வைத்து நாலாபுற மும் பரப்பி ஒட்டுமொத்த இடத்தையும் அசுத்த மாக்குதல் என ஏகப்பட்ட பிரச்சினைகள் தெரு நாய்களால் ஏற்படுகின்றன.
எனினும் இவை பற்றி எவரும் எந்தக் கவலையும் கொள்ளாமல் அது பற்றிப் பேசாமல் செல்கின்றனர்.
மழை காலத்தில் தெரு நாய்கள் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களும் நடுவீதியில் மலம் கழிக்கின்றன.
காலைப்பொழுதில் பள்ளி செல்லும் மாண வர்களும் பாதசாரிகளும் வாகனங்களும் நாய்களின் மலக்கழிவுகளை மிதித்துச் செல்வதைப் பார்க்கும்போது எங்கள் நாடு எப்போது தான் திருந்தப் போகிறது என்று நினைந்து வேதனைப்படுவதைவிட வேறுவழி தெரியவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வின் மகிந்த சிந்தனையில் நாய்களை அழிக் கக்கூடாது, கொல்லக்கூடாது என்று கூறப்பட்டு விட்டது என்பதற்காக, தெரு நாய்களை அழிப்பதில்; அதனைக் கட்டுப்படுத்துவதில், அதன் பெருக்கத்தை தடுத்தல் என்பதில் எந்த நட வடிக்கையும் எடுக்காமல் இருந்தால், நாய்கள் வாழும். மனிதர்கள் தொற்றுநோய்க்கு ஆளாகித்துன்பப்படுவர் என்பது விதியாகிவிடும்.
எனவே மாநகர சபைகள், நகர, பட்டின, பிரதேச சபைகள் விசேட திட்டமொன்றைத் தீட்டி தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது, எதிர் காலத்தில் தெருநாய்களை இல்லாமல் செய் வது, அதற்காக நாய்கள் பற்றிய தரவுகளைச் சேகரித்து அவற்றுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவது, பெண் நாய்களுக்குக் கருத்தடை செய்வது என்ற வகையில் தெரு நாய் என்ற பிரச்சினையை இல்லாமல் செய்ய வேண்டும்.
நாய்களை வளர்த்து அவற்றைத் தெருவில் விடுவது, நாய்க்குட்டிகளை சந்தைகள், சன நடமாட்டங்கள் உள்ள இடங்களில் விடுவது, அவைகள் நோய்க்கு ஆளாகித் திரிவது என்ற பெரும்பாவம் நம் மண்ணில் நடக்கிறது.
இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது விடயத்தில் உள்ளூராட்சி சபைகள் பொருத்தமான வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தி அமுல்படுத்துவது கட்டாயமானதாகும்.