மாணவர்கள் போராட்டத்தினால் முடங்கிய யாழ்ப்பாண வீதிகள்!



?????????????
அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம் நடத்திய மாபெரும் பேரண மூலம் மாணவ சக்தி மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 இற்கு பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி பலாலி வீதி,ஆனைப்பந்தி சந்தி,நாவலர் வீதி,கோவில் வீதி,வைத்தியசாலை வீதி மற்றும் ஆளுநர் அலுவலகம் வரை நீடித்தது.
ஆளுநரை சந்தித்த மாணவ பிரதிகள் இலங்கை ஜனாதிபதியாலும்,ஆளுநராலும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை கேள்விக்குட்படுத்தியிருந்தனர்.
இதேவேளை நாவலர் வீதியிலுள்ள ஜநா உப அலுவலகத்தினிலும்,அமெரிக்கன கோணர் அலுவகத்திலும் தமது கோரிக்கைகள் தொடர்பினில் சர்வதேச தலையீட்டை வலியுறுத்தும் மகஜர்களை மாணவ பிரதிநிதிகள் கையளித்தனர்.
இலங்கை தொடர்பான ஜெனீவா மனித உரிமைப் பொறிமுறையினரிடம் தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்கான சர்வதேசப் பொறுப்பைச் சுட்டிக்காட்டி யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் திறந்த முறையீடு ஒன்றையே இன்று செவ்வாயன்று கையளித்தது.
இலங்கை அரசின் சிறைகளில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறும் மாணவர் போராட்டத்தை ஒட்டிய விரிவான மகஜர் ஒன்றை ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் மனித உரிமை உயர் ஸ்தானிகரான இளவரசர் செயித் குசைன் அவர்களுக்கும், மனித உரிமைப் பேரவையின் 11ம் சுற்றுக்கான அதிபரான ஜோக்குயின் அலெக்சாண்டர் அவர்களுக்கும், ஜெனீவாவில் இயங்கும் அமெரிக்க அரசின் ஐ.நா. மனித உரிமைப் பொறிமுறைக்கான நிரந்தரப் பிரதிநிதியான திரு தியோடோர் அலெக்ரா அவர்களுக்கும் யாழ்ப்பாண வதிவிடக் காரியாலயங்க;டாக இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் கையளித்துள்ளது.
தமிழ் அரசியற் கைதிகளை விடுவிப்பதற்காக ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைப் பேரவைக்கும், மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகத்திற்கும் இலங்கை அரசோடு 2015 இல் ஒத்திசைவுத் தீர்மானத்தைக் கொண்டுவந்து பின்னர் இந்த வருடம் மேலும் இரண்டு வருட நீடிப்பைக் கொண்டுவந்த அமெரிக்காவின் ஐ.நா.வுக்கான ஜெனீவாத் தூதுவருக்கும் தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் சர்வதேச பொறுப்பு உள்ளது.
இந்தப் பொறுப்பு சர்வதேசச் சட்டவிதிகளில் தமிழர்களுக்கு உள்ள உரிமையின் பாற்பட்டது.
தவிரவும், அமெரிக்க அரசு தனது மனித உரிமைப் பொறிமுறை ஊடான நேரடித் தலையீடு மூலமாக மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசோடு ஒத்திசைவு நிகழ்ச்சிநிரல் ஒன்றின் மூலம் உள்நாட்டுப் பொறிமுறையிடமே நீதிவழங்கலை ஏறத்தாழ முழுமையாகக் கையளித்துவிட்டுள்ள ஒரு நிலை தோன்றியுள்ளது.
இதற்கு மேலதிகமாக இரண்டுவருட கால நீடிப்பை வழங்கும் கைங்கரியத்தையும் அமெரிக்க அரசின் மனித உரிமைப் பொறிமுறையே செய்திருக்கிறது.
எனவே, ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் இந்த இரண்டு தரப்பினருக்கும் அவரவருக்குரிய பொறுப்பை நினைவுபடுத்தி, சர்வதேசச் சட்ட நியமங்களின் அடிப்படையில் தமிழ் அரசியற் கைதிகளுக்குரிய உரிமைகளையும் நினைவுபடுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது.
குறிப்பாக, இலங்கை அரசு தமிழ் அரசியற் கைதிகளின் வேண்டுகோள்களைத் தனது சட்டத்தையும் சட்டப்பொறிமுறைகளையும் கோடிகாட்டிப் புறக்கணிக்கும் நிலையில் தமிழர்களின் தரப்பு சர்வதேசச் சட்டப் பொறிமுறைகளுக்குள் தமிழ் அரசியற் கைதிகளுக்கு உள்ள உரிமையைத் தட்டிக்கேட்காத நிலை மிகவும் பரிதாபகரமானது.
எனவே, தமிழ் அரசியற் கைதிகளுக்குள்ள சர்வதேசச் சட்ட நியமங்களின் அடிப்படையிலான உச்சபட்ச உரிமைகள் எவை என்பதைக் குறித்த சர்வதேசத் தரப்பினருக்கு நினைவுபடுத்தவேண்டிய சூழல் எழுந்துள்ளது.
இதன் மூலம் இலங்கை அரசின் மீது உடனடியாக அழுத்தத்தைப் பிரயோகிக்குமாறும், தவறும் பட்சத்தில் சர்வதேச தரப்பினருக்கும் தமிழ் அரசியற்கைதிகள் மீது இழைக்கப்படும் துன்பியலுக்கு மனிதாபிமானப் பொறுப்பு இருக்கிறதென்பதையும் மாணவர் சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அரசின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுச் சிறையில் வாடும் தமிழ்க் கைதிகள் அனைவரும் சர்வதேச சட்ட நியமங்களின் பிரகாரம் விடுவிக்கப்படவேண்டியவர்கள் என்பதையும் அவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் அரசியற்கைதிகளாக இலங்கை அரசால் அங்கீகிரிக்கப்பட்டு அரசியல் முடிவொன்றின் மூலம் விடுதலை செய்யப்படவேண்டியவர்கள் என்பதையும் நான்கு அடிப்படைகளை மையமாக வைத்து மாணவர் சமூகத்தின் மகஜர் எடுத்துக்கூறுகிறது.
சர்வதேச மட்டத்தில் தமிழர் தரப்பாக பேச்சுவார்த்தைகளிலும் போர்நிறுத்த உடன்படிக்கையிலும் அங்கீகரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் போரில் முழுமையாக அழிக்கப்பட்டிருப்பதால், தமிழ் அரசியற் கைதிகளின் உறவுகளும் தமிழ்ச் சமூகமும் மாத்திரமே கைதிகளின் நலன் குறித்துப் பேசவேண்டிய சூழல் நிலவுகிறது.
குறிப்பாக சர்வதேச சட்டத்தில் தமிழர் தரப்புக் கைதிகளுக்கு இருக்கவேண்டிய உரிமைகள் என்ன என்பதை முதலாவதாகவும், ஐ.நா. இலங்கையில் இழைத்தாகத் தானே ஒத்துக்கொண்ட தவறுகள் மூலம் ஐ.நாவுக்கு இருக்கும் பொறுப்பை இரண்டாவதாகவும், பேச்சுவார்த்தைக் காலத்தில் இணைத்தலைமை நாடுகளில் ஒன்றாகவும், போரின் பின்னர் ஜெனீவாவில் தொடர் தீர்மானங்களைக் கொண்டுவந்ததன் மூலமும் அமெரிக்காவின் மனித உரிமைத் தரப்புக்கு தமிழ்க் கைதிகள் விவகாரத்தில் முக்கிய பொறுப்பு இருக்கிறது என்பதை மூன்றாவதாகவும், இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குள்ளாக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மறுக்கப்பட்டிருக்கின்ற உரிமைகளை மாத்திரம் வைத்து அணுகினாற் கூட அவர்கள் அரசியற் கைதிகள் என்ற தீர்ப்புக்கு வரமுடியும் என்பதை நான்காவது காரணியாகவும் பல்கலைக்கழக மாணவர்களின் மகஜர் எடுத்துக்காட்டியுள்ளது.
குறிப்பாக,ஜெனீவாக் கோட்பாடுகளின் மேலதிக நெறிமுறை ஒன்றின் பிரகாரம், இலங்கையில் நடைபெற்றது ஒரு சர்வதேசத்தன்மையுடைய, சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட, வேற்று இன ஆக்கிரமிப்பு என்று கருதப்படக்கூடிய சூழலில் இடம்பெற்ற போர் என்பதை மாணவ சமூகத்தின் மகஜர் சர்வதேசச் சட்ட நியமங்களின் பிரகாரம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஆக, சர்வதேசத் தன்மையுடனான போர் ஒன்று முடிவுக்கு வரும்போது போர்க்கைதிகள் மீளத் தத்தம் குடும்பங்களோடு ஒன்றிணைய வேண்டும் என்பதும் அவர்கள் குற்றவியற் சட்டங்களுக்கு ஆட்படுத்தப்படலாகாது என்பதும் சர்வதேச சட்டம் வழங்கும் உரிமை.
ஆனால், இலங்கை அரசோ தமிழ் அரசியற் கைதிகளின் தண்டனை வழங்கப்பட்டவர்களைப் போர்க்கைதிகளாகப் பார்க்கத் தயாராக இல்லை. எனவே, அவர்கள் தமது தண்டனைக்காலத்தை சிறைகளில் கழித்தேயாகவேண்டிய நிலை. இது அநீதியான செயல் என்பதைச் சர்வதேச சட்டங்களில் தமிழர் தரப்புக்கு இருக்கும் பிடிமானத்தை எடுத்துக்காட்டுவதன் மூலம் மாணவர் சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு தொடர்பு பட்டவர்களாகச் சித்தரித்து போலியான குற்றப்பத்திரிகைகள் மூலம் தடுப்பில் வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் அரசியற் கைதிகள் என்ற அந்தஸ்துக்கு உரித்தானவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் மாணவர்களின் மகஜர் ஐ.நாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு உள்ளாக்கப்பட்ட கைதிகளாக உள்ள அனைவரையும் அரசியற்கைதிகளாக அங்கீகரிக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அவ்வாறு ஐ.நாவும் அமெரிக்காவும் பொறுப்போடு அங்கீகரித்தாலே இலங்கை அரசுக்கும் முறையாக விண்ணப்பத்தை அவர்களால் மேற்கொள்ளமுடியும் என்பதையும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, சுனாமி அனர்த்தத்தின் பின்னர் தமிழர் தரப்புக்கும் இலங்கை அரசுக்கும் பொதுக்கட்டமைப்பு தொடர்பான சர்வதேச பேச்சுக்கள் மூலம் உடன்பாடு ஒன்று காணப்பட்டது. இந்த உடன்பாட்டை வரவேற்ற அமெரிக்க அரசு, எதிர்பாராத விதமாக இந்தக் கட்டமைப்புக்குத் தான் பங்களிக்கமுடியாதென்பதையும் அதற்குச் சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும் ஒரு நிலைப்பாட்டை அறிவித்தது. இந்த நிலைப்பாடு வெளியாகிய ஒரு சில நாட்களிலே தீவிரவாதத் தரப்புகள் இலங்கையின் உச்ச நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்து குறித்த சுனாமி உடன்படிக்கையைச் சட்டரீதியாக இரத்துச் செய்தார்கள். இது மிகவும் கவலைக்குரிய ஒரு முன்நிகழ்வு என்றும், இதைப்போன்ற நிலையைத் தமிழர்களுக்கு மீண்டும் ஏற்படுத்தவேண்டாம் என்றும் அமெரிக்க மனித உரிமைப் பொறிமுறையினரிடம் யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் அரசியற் கைதிகள், அரசியற் கைதிகளாகச் சர்வதேச தரப்புகளால் அங்கீகரிக்கப்படுவது அவசியம் என்பதையும், சர்வதேசப் பொறிமுறைகளுக்கும் தலையீடுசெய்துள்ள சக்திகளுக்கும் இது விடயத்தில் பொறுப்பு இருக்கிறதென்பதையும் குறித்த மகஜர் சுட்டிக்காட்டியிருக்கிறது.
குறித்த மகஜரின் பிரதிகள் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரம்சிங்காவுக்கும், நல்லிணக்கப் பொறிமுறையின் தலைவி சந்திரிக்கா அம்மையாருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தனுக்கும் வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸவரன் அவர்களுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila