தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம்: நாம் கட்சி அரசியலுக்கு எதிரானவர்கள் அல்ல

நாம் கட்சி அரசியலுக்கு எதிரானவர்கள் அல்லர். எம் மத்தியில்கூட கட்சிகளின் தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் கட்சியின் வலையமைப்பு எமது கூட்டங்களைக் கூட்டுவதில் மிக முக்கிய பாகங்களை வகித்தன என்பதை நாம் மறக்கக் கூடாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் இன்றைய தினம் யாழ். நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் பேரவை தொடங்கி 2ஆவது ஆண்டு விரைவில் பூர்த்தியடைய இருக்கின்றது. இந்த நேரத்தில் அரசியல் ரீதியாக நாடளாவிய ரீதியில் சில முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக பரிணமித்திருக்கும் இந்தத் தருணத்தில் தேர்தல்கள் பற்றிய சிந்தனைகள் எம்மிடையே எழக் காரணம் என்ன என்று நீங்கள் வினவக் கூடும்.
கட்சி அரசியல் வேறு, அரசியல் ஈடுபாடு வேறு. தமிழ் மக்கள் பேரவை அரசியல் ஈடுபாட்டுடன் செயலாற்ற வேண்டிய கடப்பாட்டினைக் கொண்டது.
மக்கள் இயக்கம் என்று கூறும் போது சகல தமிழ் பேசும் மக்களையும் வேற்றுமை பாராது, பிரதேசங்கள் பாராது, மாகாணங்கள் பாராது ஏன் நாடுகள் கூடப் பாராது அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சிந்தனையை மேற்கொண்டு எமது அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
கட்சி அரசியல் எனும் போது குறுகிய ஒரு வட்டத்தினுள் கட்சியின் நலன் கருதி உரிய நடவடிக்கைகளை முக்கியமாகத் தேர்தலின் போது எடுப்பதையே அது குறிக்கும்.
நாம் கட்சி அரசியலுக்கு எதிரானவர்கள் அல்லர். எம் மத்தியில்கூட ஒரு சில கட்சிகளின் தலைவர்கள் மிக முக்கிய உறுப்பினர்களாக இருக்கின்றார்கள்.
தமிழ் மக்களின் விடிவுகாலத்தை எதிர்நோக்கிச் செல்லும் போது கட்சிகளாவன தற்காலிகமாகவேனும் கட்சி முரண்பாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
இந்த இரண்டு வருட காலத்தினுள் எமது இயக்கமானது சில கட்சிகளின் சிந்தனைகளில் வரவேற்கத்தக்க சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.
அரசாங்கம் தருவதைத் தரட்டும் எம் மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்வார்கள், என்றிருந்த அரசியல் நிலை போய் எவற்றை எம் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள், அவற்றிற்கு இசைவாகவே நாங்கள் அரசியல் நடவடிக்கைகளை எடுத்துப் போக வேண்டும் என்ற ஒரு சிந்தனை மாற்றத்தை தமிழ் மக்கள் பேரவை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கம் தர முன்வருவதற்கும் எமது எதிர்பார்ப்புக்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி இருப்பதைப் பலர் சுட்டிக்காட்டி அரசாங்கம் குறைத்துத் தருவதை நாங்கள் ஏற்றுக் கொண்டால் எமது இலக்குகளை நாம் அடைய முடியாமல் போய்விடும் என்று ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்கள்.
இது சம்பந்தமாக நாங்கள் சில விடயங்களை மனதில் நிலை நிறுத்த வேண்டும்.
தமிழ் மக்களினுடைய தனித்துவ சுய உரித்தை மழுங்கச் செய்து பெரும்பான்மையினத்தவர் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் இந் நாட்டின் முழுமையான ஆட்சி உரித்தையும் தம் வசம் கையேற்றுக் கொண்டனர்.
அதன் காரணமாகவே தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல், பொருளாதார, சமூக நடவடிக்கைகளை இது வரை காலமும் தமது பெரும்பான்மைப் பலத்தை உபயோகித்து அவர்கள் நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர்.
எனினும் பேச்சு வார்த்தைகளின் போது நாம் எமது கோரிக்கைகளை வலுவுடனும் திடமுடனும் எடுத்துக் கூற வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.
அரசாங்கம் தனது பெரும்பான்மைப் பலத்தை உபயோகித்துத் தாம் இதுவரை காலமும் செய்த அரசியல் பிழைகளை மனத்தில் வைத்து சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நாம் எதிர்ப்புமில்லை ஏற்புமில்லை.
எனினும் குறைவாகத் தருவனவற்றை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்ற அடிப்படையில் மேலும் எதுவும் தரவேண்டிய அவசியம் தமக்கில்லை என்று அரசாங்கம் நினைத்துவிடக்கூடாது.
சிங்கள மக்கள் தலைவர்கள் அரசியல் அதிகாரங்கள் அனைத்தையும் பிரதேசவாரியான தேர்தல்கள் மூலம் பெரும்பான்மையினர்களுக்குப் பெற்றுத், தம்வசம் அதிகாரங்களைக் கையகப்படுத்தியதனாலேயே எமது அரசியல் பிரச்சினையானது உருவானது
தொடர்ந்தும் சர்வாதிகாரங்களும் தம் வசம் இருக்க வேண்டும் என்றும் அவற்றிலிருந்து எமக்கு சில அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள முன்வருவதாகவுமே அவர்களின் நடவடிக்கைகள் இன்று அமைந்துள்ளன.
தொடக்கத்தில் இருந்தே தமிழ் மக்கள் சுய நிர்ணய உரித்தைப் பெற்றிருந்தவர்கள் என்ற அடிப்படை உண்மையை அவர்கள் தட்டிக் கழிக்கப் பார்க்கின்றார்கள்.
ஆகவே அதிகாரப் பரவலாக்கம் என்பது பல்லினங்களின் ஒப்புதலோடு நடைபெற வேண்டுமே ஒளிய பெரும்பான்மையினரிடமிருந்து எமக்குத் தரப்படும் அவர்களின் கொடைச் சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கக் கூடாது.
அவ்வாறு கொடைச் சிந்தனையின் வெளிப்பாடாகத் தருவனவற்றை நாங்கள் எதிர்க்கவும் கூடாது ஏற்கவும் கூடாது.
பொது நலம் கருதி, எமது சுயநலங்களையும் முரண்பாடுகளையும் ஒதுக்கி வைக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.
இவ்வாறான ஒரு முரண் நிலையை ஆயுதங்கள் ஏந்தியவர்கள் காலத்தில் ஆயுதங்களே தடுத்து நிறுத்தின. இன்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நாங்கள் ஒவ்வொருவருமே எம்முடைய கடமை யாது என்று ஆய்ந்து அறிந்து உணர்ந்து செயற்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.
தமிழ் மக்கட் பேரவை எல்லாக் கட்சிகளிடமும் வலியுறுத்திக் கோருவது யாதெனில் எங்களுடைய தனிப்பட்ட கட்சி பேதங்களும், அதிகாரப் பேராசையும், தனிப்பட்ட விரோதங்களும் ஏகோபித்த தமிழ் மக்களுடைய அரசியல் நல உரித்துக்களைப் பாதிக்க நாம் அனுமதிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila