இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று முன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்பாகத் தெரிவித்த கருத்துக் குறித்து, சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிடுகையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லும் சுரேஷ் பிரேமச் சந்திரனின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கும் கருத்து அவரது இயலாமையையே வெளிப்படுத்துகின்றது.
என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்பதை இவ்வாறான கருத்தின் மூலம் அவர் வெளிப்படுத்தி இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. கட்சிகளுக்கு அப்பால் கொள்கைகளுக்காகவும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தாம் செயற்பட்டு வருவதாக அவர் கூறியிருக்கும் நிலையில் எவ்வாறான கொள்கைகளின் அடிப்படையில் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன? என்பதை தயவு செய்து பொது மேடையில் எமது மக்களுக்குத் தெளிவுபடுத்த முன் வர வேண்டும்.
புதிய அரசியல் சாசனம் வெளிவரவுள்ள நிலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வட - கிழக்கு இணைப்பு தற்போதைய நிலையில் சாத்தியமில்லை என்று கூறுகின்றார். ஆகவே, தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான வட - கிழக்கு இணைப்பை விட்டுக் கொடுப்பது தான் நீங்கள் எமது மக்களுக்காக வரித்துக் கொண்ட கொள்கையா?
அது மாத்திரமன்றி வட - கிழக்கில் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை என்பதைத் தாம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். இதுவும் உங்கள் கொள்கைகளில் ஒன்றா?
வடகிழக்கு இணைப்பை விட்டுக் கொடுப்பதற்கும், பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கும் தான் எமது மக்களிடமிருந்து கடந்த காலங்களில் ஆணையைப் பெற்றுக் கொண்டீர்களா?
தமிழ் மக்களின் நலன் சார்ந்த அனைத்துக் கொள்கைகளையும் கூட்டமைப்பினர் கைவிட்டு விட்டுள்ளதுடன் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறார்கள்.கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமக்கு வழங்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் தங்களுடைய நலன்களைப் பாதுகாக்க வேண்டும், உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் ஆகியவற்றையே கூட்டமைப்பிலுள்ளவர்கள் தற்போது தங்கள் கொள்கைகளாகக் கொண்டுள்ளனர்.
தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும் உண்மையான பற்றுறுதியுடன் தாம் செயற்பட்டு வருவதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறி வரும் நிலையில் புதிய அரசாங்கம் ஆட்சியதிகாரத்திற்கு வந்த பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட கடந்த மூன்று வருடங்களில் எவ்வாறான விடயங்களை நீங்கள் சாதித்துள்ளீர்கள்?
அண்மையில் வெளியான புதிய அரசியல் சாசன இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் யாவும் நிராகரிக்கப்பட்ட பின்னரும் சிங்கள, பெளத்த மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு அந்த மேலாதிக்கத்திற்குள் தமிழ் மக்களுக்கான சில சலுகைகளை எதிர்பார்க்கின்றதொரு குழுவாகவே தமிழரசுக் கட்சி செயற்பட்டு வருகிறது எனவும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். |