இம்முறை விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் தமது உறவுகளான மாவீரர்களை விதைக்கப்பட்ட கல்லறைகள் அமைந்துள்ள இடங்களில் சுடரேற்றி நினைவு கூரலாம் என்ற எதிர்பார்ப்புடன் நேற்று அங்கு சிரமதானம் செய்ய சென்றனர். அவர்களை, இராணுவ முகாம் வாசலில் இராணுவத்தினர் தடுத்துள்ளனர். அங்கு தமது இராணுவ முகாம் அமைந்துள்ளதாகவும், அதற்குள் எவரும் உள்நுளைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கூறியுள்ளனர். நீங்கள் இங்கு சிரமதானம் செய்வதாகவிருந்தால் தமது இராணுவ முகாமுக்குப் பொறுப்பான டிவிசன் தளபதியிடம் அனுமதி பெற்ற பின் வருமாறும் கூறியுள்ளனர். தமது இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிக்குள் யாரும் உட்செல்ல தாம் அனுமதிக்கமாட்டார்கள் எனவும் கூறித் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். மாவீரர்களது உறவினர்களுடன் கூடச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர், இவ்விடத்தில் பெருமளவான மாவீரர்களை விதைத்த மாவீரர் கல்லறைகள் இருந்தன.அதற்கு மேல்தான் நீங்கள் இராணுவ முகாம் அமைத்துத் தங்கியுள்ளீர்கள். இம்முறையாவது இந்த மாவீரர்களது உறவுகள் தமது பிள்ளைகளை விதைத்த இடங்களில் சுடரேற்றி தமது பிள்ளைகளை நினைவுகூர அனுமதியுங்கள் எனக் கோரியுள்ளனர். எனினும், இராணுவத்தினர் மேலிடத்து அனுமதியின்றி தாம் எவரையும் மாவீரர் துயிலும் இல்லத்தினுள் செல்ல அனுமதிக்க முடியாது எனக் கூறி மறுத்து விட்டனர். அதனைத் தொடர்ந்து மேற்படி மாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை ஆகியோருடன் இணைத்து மாவீரர்களது உறவினர்கள் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலுள்ள கல்லறைகளைத் துவம்சம் செய்து அதற்கு மேல் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள காணியொன்றில் நவம்பர் 27 மாவீரர் நாளன்று சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூருவதற்காக பற்றைக் காடுகளை வெட்டி சிரமதானப் பணியில் ஈடுபட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு நேரடியாகச் சென்று சிரமதானப் பணியில் ஈடுபட்டுள்ள மாவீரர்களது உறவினர்களுடன் கலந்துரையாடி தமது ஆதரவை வழங்கியிருந்தார் . கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலேயே அதிகளவான மாவீரர்களை விதைத்த மாவீரர் கல்லறைகள் காணப்படுகின்றன. |
விசுவமடு தேராவில் துயிலுமில்லத்தை துப்பரவு செய்ய இராணுவம் அனுமதி மறுப்பு!
Related Post:
Add Comments