சிங்கள இனவாதத்தை ஒழித்தால் தமிழ் இனவாதமும் அழிந்து போய் விடும்!

புலிக் கொடியைத் தூக்கிக் கொண்டு சிங்கள, முஸ்லிம் மக்களிடமிருந்து நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொண்டாடியதையும் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிடும் அறிக்கைகளையும் கோடிகாட்டியே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழர்களிடமாக இருந்தால் என்ன சிங்களவர்களிடமாக இருந்தால் என்ன இனவாதம் தவறானது என்பதை மையமாக வைத்தே அவரது உரை அமைந்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் தமது சொந்த இடத்துக்குத் திரும்ப வேண்டும்.
இராணுவத்தினரின் பிடியில் உள்ள அவர்களது காணிகள் விடுவிக்கப்பட வேண் டும் என்றும் அவர் நியாயமாகத் தனது உரையில் தெரிவித்திருந்தார். எனவே அவரது கருத்துக்களை வெறும் இனவாதக் கருத்தாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
ஆனால், பிமல் ரத்நாயக்க அடிப்படையான ஒரு விடயத்தை மறந்து விட்டார். அது தமிழ் இனவாதம் என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக மேற்கிளம்பும் ஒன்றே தவிர அது இயல்பான ஒன்றல்ல.
அதேபோன்று முஸ்லிம் இனவாதம் என்பதும் இந்த இரு இனவாதங்களுக்கும் எதிராகத் தோற்றம் பெற்றதே.
அதாவது சிங்கள பௌத்த இனவாதத்திடம் இருந்து தமது இனத்தையும் அடையாளத்தையும் வரலாற்றுத் தாயகத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாதங்கள் தோற்றம் பெற்றன; நீடித்தன. அது ஒரு தற்காப்பு உத்தி.
உண்மையில் தமிழ், முஸ்லிம் இனவாதங்களையும் போசித்து வளர்த்தது சிங்கள பௌத்த பேரினவாதமே. இலங்கையின் நவீன வரலாறு முழுவதுமே இதனைத் தெளிவாகக் காணலாம்.
பிரிட்டிஷார் இலங்கையை விட்டு வெளியேறிய போது இங்கு வாழ்ந்த அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கி இலங்கையைப் பல்லின, பல மத நாடாக மாற்றியமைக்க சிங்களத் தலைவர்கள் முயன்றிருந்தால் தமிழ் இனவாதமோ அதனைத் தொடர்ந்து முஸ்லிம் இனவாதமோ தோன்றுவதற்கான தேவையே ஏற்பட்டிராது.
இப்போதும் கூட சிங்கள பௌத்த பேரினவாதம் படுத்து விட்டால் தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாதங்களும் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். பௌத்த சிங்கள அரசியலுக்கு எதிரான அரசியலாகவே தமிழ் இனவாதம் நிலைபெற்றுள்ளது.
எனவே நடிகர் கமலஹாசன் தனது நாயகன் படத்தில் பேசும் வசனத்தைப் போல, சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் நிறுத்தச் சொல்லுங்கள் தமிழ் இனவாதத்தையும் நிறுத்தி விடலாம் என்று தான் பிமல் ரத்நாயக்கவுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, போர் முடிந்து 8 ஆண்டுகள் கடந்து விட்ட போதும் கூட பௌத்த சிங்களப் பேரினவாதம் தனது வீரியத்தைக் கிஞ்சித்தும் குறைத்துக் கொள்ளவில்லை.
இன்னும் சொல்லப் போனால் அதனை இன்னும் வீரியப்படுத்தி வீறு கொள்ளச் செய்வதற்கான முயற்சிகளே தெற்கில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போன்றவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜே.வி.பி. கட்சியாலோ பிமல் ரத்நாயக்க போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாலோ இதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அதன் எதிர்விளைவாகத்தான் வடக்கில் இருந்து, மீண்டும் மீண்டும் ஓர் தற்காப்பு உத்தியாகத் தமிழ் இனவாதம் மேற்கிளம்பிக் கொண்டே இருக்கிறது.
எனவே பிமல் ரத்நாயக்க போன்றவர்கள் தமிழ் இனவாதத்தைக் குறை சொல்வதை விட சிங்கள பௌத்த இனவாதத்தை ஒழிப்பதில் அக்கறை செலுத்துவதே ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்று சிங்கள பெளத்த பேரினவாதத்தை தெற்கில் உள்ள அரசியல் தலைவர்களால் அழிக்க முடிகின்றதோ அன்றே தமிழ் இனவாதமும் உருத்தெரியாமல் கரைந்து போய் விடும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila